திங்கள், டிசம்பர் 26

திருப்பாவை

திருப்பாவை

தனியன்

நீளா துங்கஸ்தநகிரிதடீ ஸூப்தமுத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்ஸித்தமத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து  பூய: 

அன்னவயற்புதுவவையாண்டாளரங்கற்குப்
பண்ணு திருப்பாவைப் பல்பதியம்--- இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு.

சூடிக்கொடுத்த  சுடர்கொடியே! தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய்-----நாடிநீ
வேங்கடவற்கென்னை விதிஎன்றவிம்மாற்றம்
நாம்கடவா வண்ணமே நல்கு.













இரண்டாம் பாசுரம்.

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் சீரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடிப் பாடி,
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டேழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையுமாந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணியுகந்தேலோறேம்பாவாய்

மூன்றாம் பாசுரம்
 மூன்றாம்  நாள்  பாசுரத்திற்கு ஏற்றாற்போல் ஆண்டாள உலகலந்த                                                                  அலங்காராம்


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கல்மும்மாறிப் பெய்து
ஒங்குபெருஞ்செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுபடுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக், குடம் நிறைக்கும் வள்ளர்பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரேம்பாவாய்.



இரண்டாம் நாளுக்கான ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசம் மூன்றாம் நாளுக்கான ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசம்.

வெள்ளி, டிசம்பர் 23

பிருந்தாவனம்


பிருந்தாவனம் நெருஞ்சி முள் காடாக இருந்த இந்த இடத்தை மாடு கன்றுகள் மேய்க்கும் மேய்ச்சல் நிலமாக மாற்றியது கண்ணன் என்கிறார்கள். அதனால் "பிருந்தாவனம்",என்று பெயர் "நெருஞ்சி முள்காடு" என்று பெயர் பெற்றது. இதன்படி கண்ணனால் உருவாக்காப்பட்டது, பிருந்தாவனம் ஆகும். பிருந்தாவனம் மதுராவுக்கு அருகாமையில் உள்ளது. நாச்சியார் திருமொழி 14வது பதிகம் முழுமையும் பிருந்தாவனத்தைப் பற்றியே, கண்ணனைத் தேடியும், கண்டும் அனுபவித்துப் பாடியிருக்கிறாள், கோதை நாச்சியார் . பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கு ஓர் கீழ்க்கன்றாய் இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே? இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே. (14-1) பிருந்தாவனத்தில் பனிரெண்டு காடுகள் உள்ளன அவை.1 மகாவனம்.
2.காம்யவனம்.3.மதுவனம். 4.தாளவனம். 5.குமுத வனம்  6.பாண்டிரவனம்.7.பிருந்தாவனம்.8கதிரவனம்.9.லோஹவனம் 10.பத்ரவனம்.11.பஹுளாவனம். 12.பில்வவனம், ஆகியவையாகும். இவற்றுள் ஏழு வனங்கள் யமுனையின் மேற்குக் கரையிலும் ஐந்து கிழக்குக் கரையிலும் உள்ளன. பிருந்தாவனத்தில் மட்டுமே ஏழுநாட்கள் தங்கி பரிக்ரமா செய்து எல்லா இடங்களையும் சேவிக்கலாம். பிருந்தாவனத்தில் எல்லா இடங்களும் பார்க்க வேண்டிய இடங்கள தான். இங்கு சில முக்கியமான இடங்களை அதன் மகத்துவத்துடன் பார்க்கலாம்.
1.கேசிகாட்:

கம்சன் தன்னுடைய அசுரனான (கண்ணனைக் கொல்வதற்கு எல்லா வழிகளையும் முடித்த பின்), கேசியைக் கூப்பிட்டு "போய்,கண்ணனை கொன்று விட்டு வா" என்று ஆணையிடுகிறான்.வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல குதிரை வடிவில் வருகிறான்.வருகின்ற வேகத்தை நாரதர் "ஜகத்தே அஸ்தமித்து விட்டது" என்று கூறுவதாக ஸ்வாமிகள் கூறுகிறார். திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் கேசி வதத்தை "துறந்கம்வாய் கீண்டுகந்தானது தொன்மையூர் அரங்கமே" என்று அருளினார்.
2.நிதுவனம்:
கண்ணன் அந்தி சாய்ந்தபின் கோபிகைகளோடு விளையாடிய பல தோட்டங்களுள் இது முக்கியமானது ஆகும்.மிக அதிகமான சின்ன சின்ன மரங்களை அதிகமாகக் கொண்ட இடம் ஆகும்.
3.இம்லி தலா:
இங்குள்ள புளிய மரம் கண்ணன் காலத்தில் இருந்துஉள்ளது.இம்மரத்தின் அடியில் கண்ணன் அடிக்கடி வந்து கோபியருடன் அமருவான்.சில சமயம் கோபிகைகளைப் பிரிந்த விரஹ தாபத்தால் கருத்த கண்ணனின் திருமேனி வெளுத்துவிடும்.அப்போது இந்த மரத்தின் அடியில் அமர்ந்தவுடன் பழைய நினைவு வந்து கருமை நிறம் வந்து விடுமாம்.
4.புராணா காளிய காட்:
 


"காளிங்கன்" என்னும் கொடிய விஷமுடைய பாம்பு ஒரு மடுவில் இருந்து கொண்டு தன் விஷ மூச்சால் அருகில் உள்ள செடி கொடி மற்றும் பிராணிகளை அழித்து வந்தது.கண்ணன் இப்பாம்பை அடக்கி, கடலுக்குள் விரட்டியடிக்க எண்ணி அருகில் உள்ள கடம்ப மரத்தின் மீது ஏறி காளியன் தலையில் குதித்தான்.கண்ணனைத் தாங்கமாட்டாத காளிங்கன் அவனிடம் சரணடைந்து வேண்ட, கண்ணனும் அவனை மன்னித்து ஒட்டிவிட்டான். அந்த இடம்தான் புராணா காளியகாட் என்று அழைக்கப் படுகிறது.
5.சேவா குஞ்ச்:

கண்ணன் மாலைப்பொழுதில் கோபியர்களோடு ஆடிப்பாடி விளையாடிய இடம்.இன்றும் இரவில் இந்தத் தோட்டத்தில் வாத்தியம் மற்றும் பாட்டொலி கேட்கிறது என்று சொல்கிறார்கள்.மாலை 5.30க்கு மேல் யாரையும் அனுமதிப்பதில்லை.கூட்டம் கூட்டமாக இங்கு இருக்கும் குரங்குகள் கூட மாகி இங்கிருந்து இடம் பெயர்ந்து சென்று விடுகின்றனவாம்.

6.ஸ்ரீரங்கஜி மந்திர்:



காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீ.உ.வே.கோவர்த்தனம் ரங்காச்சார்ய ஸ்வாமி என்பவர் 1845ல் தொடங்கி 1851ல் கட்டி முடித்த கோயில் இது.தென்னிந்திய பாணியில் சோழர்கள் சிற்ப கட்டிடக் கலை பாணியில் அமைந்துள்ள புராதனமான கோயில். பிரதான மூர்த்தி கண்ணன் புல்லாங்குழல் சகிதமாக சேவை சாதிக்கிறான்.ஆண்டாளும் சேவை சாதிக்கிறார்கள். மேலும் ஸ்ரீ ரங்கநாதனுக்கும் ஆழ்வார், ஆசார்யர்களுக்கும் தனி சந்நிதிகள் உள்ளன. பிருந்தாவனமே முழுதும் கோயில்கள் தான். எதை விடுவது எதைச் சேர்ப்பது என்பது மிகக் கடினமான ஒன்று. இருந்தாலும் முக்கியமான சில கோயில்கள்------கோவிந்தாஜி மந்திர்,க்ருஷ்ண பலராம் மந்திர்,

 க்ருஷ்ண பாராம் மந்திர்


 ஷாஜி மந்திர்
மது  வனம்

பாங்கே பிஹாரி (கூட்டம் சொல்லி மாளாது) மந்திர், ராதாவல்லபஜி மந்திர், காஞ்ச (கண்ணாடி) மந்திர் (முழுவதும் கண்ணாடியால் பதிக்கப்பட்ட, மற்றும் இயக்கம் கொண்ட கண்ணனின் திருவிளையாடல் காட்சிகள்---பார்க்க வேண்டிய முக்கியமான இடம்),ஷாஜி மந்திர்

வியாழன், டிசம்பர் 22

திருப்பாவை முதல் பாசுரம்





திருப்பாவை

தனியன்

நீளா துங்கஸ்தநகிரிதடீ ஸூப்தமுத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்ஸித்தமத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து  பூய: 

அன்னவயற்புதுவவையாண்டாளரங்கற்குப்
பண்ணு திருப்பாவைப் பல்பதியம்--- இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு.

சூடிக்கொடுத்த  சுடர்கொடியே! தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய்-----நாடிநீ
வேங்கடவற்கென்னை விதிஎன்றவிம்மாற்றம்
நாம்கடவா வண்ணமே நல்கு.

முதல் பாசுரம்.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்குமாய்ப்பாடிச்  செல்வச்சிறுமீர்காள்!
கூர்வேற்கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன்
ஏரார்ந்த கண்ணியசோதையிளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோரேம்பாவாய்




ஞாயிறு, நவம்பர் 27

கற்றலின் கேட்டல் நன்று!!!!!!

கற்றலின் கேட்டல் நன்று!!!!!

சொல்லுவது எளிது தான் நினைக்கத் தோன்றும்.எப்படின்னு கேட்கிறிர்களா/
"சொல்றேன், நமக்குத் தெரிந்ததைச் சொல்லிவிட்டுப் போயிடலாம் தானே?
ஒரு ஆசிரியர் இருக்கார், அவர் என்ன பண்றார்  தினம் வரார், மாணவர்களுக்கு
பாடம் எடுக்கிறார், கவலைப் படாமல் போகிறார்.
மாணவர்கள் அவர் சொல்வதை எல்லாம் நன்றாகக் கேட்டு, புரிந்து கொண்டு அதைப் பரிட்ஷையில் ஒழுங்காக எழுதினால் தான் அடுத்த வகுப்புக்குப் போகமுடிய்ம்.
ஆசிரியருக்கு இந்த பயம் எல்லாம் கிடையாதே?"
"இப்படித்தான் நான் படிக்கும் போது ஒரு ஆசிரியர் வகுப்புக் வருவார், எங்களையெல்லாம்  பார்த்து, "எலே பசங்களா, இந்தப் புஸ்தகத்தில் இருந்து ஒழுங்காக ஆளுக்கு ஒரு பாரா படியுங்க, வகுப்பு முடியும் போது மணி அடிச்சா என்னை எழுப்பி விடுங்கடா"
என்று சொல்லி விட்டு அவர் பாட்டுக்கு நாற்காலியில் உட்கார்ந்து தூங்க ஆரம்பிச்சு விடுவார்.
அதனாலே ஆசிரியர் உத்தியோகம் ரொம்ப சுலபம் இல்லையா?"
இப்படி யோசிக்கிறான் மாணவன்.
இதே கேள்வியை ஆசிரியர் எப்படிச் சொல்றார் பாருங்கள்.
" என்ன  சார், இப்படிச் சொல்லி விட்டிங்க, மாணவனுக்கு ஒழுங்காக, அவனுக்குப்  புரியும் படி,சொல்லிக் கொடுத்தால் தான் அவன் ஒழுங்காக எழுத முடியும். இல்லாட்டா  பாசாகமுடியுமா?
" ஆசிரியர் ஒரு மணி நேரம் பாடம் நடத்த, அவர் வீட்டில் பல மணி நேரம் பல
புத்தகங்களை படித்து விட்டு வந்தால்தான் நல்ல முறையில் நடத்த முடியும்.
அந்த ஆசிரியரைத் தான் நல்ல ஆசிரியர் என்று போற்றுவார்கள்.
"ஆசிரியர் பாடம் நடத்தும் போது எங்கேயாவது உட்கார்ந்து பாடம் நடத்துவதைப் பார்த்து உள்ளீர்களா? ஒரு மணி ஆனாலும், இரண்டு மணியானாலும் நின்று கொண்டுதானே  பாடம் நடத்த வேண்டும். மாணவனுக்கு அப்படியில்லை. அவன் எப்படியாவது, எங்காவது
பார்த்துக் உட்கார்ந்து கவனித்தால் போதும்."
"இப்படித்தான் ஒருநாள் நான் பாடம் நடத்தி விட்டு ஒரு மாணவனை எழுப்பி,
"என்ன, சுரேஷ், எல்லாம் நுழைந்ததா?" (அதாவது பாடம் எல்லாம் புரிந்ததா என்ற  அர்த்தத்தில்) என்று கேட்கிறேன். அவன் மெதுவாக எழுந்து, "இன்னும் வால் மட்டும்தான்  நுழையுனும்  சார்" என்றானே பார்க்கணும்.
"ஏனடா, நான் ஒண்ணு கேட்டால் நீ என்ன பதில் சொல்றே?" என்று கேட்டவுடன்,  பக்கத்தில் உள்ள பையன், "சார், அவன் கூறையைப் பார்த்துச் அங்குள்ள அணில்  உள்ளே நுழைவதைப் பார்த்துச் இன்னும் வால்மட்டும்தான் நுழைய வில்லை என்கிறான் சார்."
எப்படி இருக்கும் எனக்கு!!! இது தேவலாம், இங்கே பாருங்கள் இந்தப் பையனை,
"இப்படித்தான் ஒரு நாள் நான் பக்கத்து வீட்டு பையன் என்னவோ ஸ்லோஹம் சொல்லறான்  போய் "என்னடா சொல்லறே?, திருப்பிச் சொல்லுடா",ன்னு கேட்டா, ரொம்ப அழுத்திக் கேட்ட  பிறகு சொல்றான், "நித்தம் நித்தம் இந்த இழவா, வாத்தியார் சாவாரா?,வயத்தெரிச்சல் தீராதா?"
அப்படின்னு பாடறான் சார்." மாமா சொல்லிக் கொடுத்தார் என்கிறான்.
இந்த மாதிரிப் பையன்களைத் தேற்றி அடுத்த வகுப்புக்களுக்கு அனுப்புவது எவ்வளவு  சிரமம் பாருங்க.
அதனாலே "கேட்பது சுலபம். சொல்லறது கஷ்டம்",
அப்படிங்கறது ஆசிரியரைப் பொறுத்த மட்டில். இதுக்கே இப்படிச் சொல்லுறிங்களே?
ஒரு இடத்தில் உபன்யாசகர் பேசிக்கோண்டு இருக்கிறார், மற்றவர்கள் கேட்டுக் கொண்டு  இருக்கிறார்கள். எப்படி?
"சார், கொஞ்சம் தள்ளி உட்காருகிறீர்களா?
"என் சார்,"
"ஒண்ணுமில்லை, சுவத்தோட சாஞ்சு உட்காரலாமேன்னுதான்"
இப்படி கேட்பவர் வசதியாக உட்காரமுடியும். சொல்பவர் இப்படி சுவத்தோட சாஞ்சு  உட்கார்ந்துகொண்டு உபன்யாசம் செய்யமுடியுமா?
இதிகாசங்கள், புராணங்கள் இவற்றை எடுத்துக் கொள்வோம்.
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் யுத்தம் ஆரம்பிக்கப் போவதற்கு முன்னால்  என்னவாயிற்று? அர்ச்சுணன் யுத்தகளத்தில் போய் நின்று கொண்டு தன்னுடைய ஆசானுக்கு  எதிராக சண்டையிடுவதா?, அவர்களைக் கொல்வதா? என்று கலங்கி நின்ற போது, கிருஷ்ணன் என்ன செய்தான் பாருங்கள்.
ஷத்த்ரியன் நியதி என்ன, அவன் என்ன செய்யவேண்டும் என்று அவனுக்கு எழுநூறு  ஸ்லோகங்கள் கொண்ட கீதையை உபதேசித்தான். அங்கு கிருஷ்ணன் தேர்பாகனாக  இருந்து ஆசிரியர் ஸ்தானத்தில் உபதேசித்தான். கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம்  என்று எல்லாவற்றையும் உபதேசித்தான். யார் கேட்டார்கள்? அதை பின்தொடர்வது அவ்வாவு
எளிதா?
மக்கள் யாரும் கேட்க மாட்டார்கள் என்று அவனே பத்தாவது நாள், தருமபுத்திரர்  மற்றும்  எல்லோருடனும் சேர்ந்து கொண்டு பீஷ்மரிடம், "எந்த தெய்வத்தை வணங்குவது? எப்படி வணங்குவது?" போன்ற கேள்விகளுக்கு,பீஷ்மர் பதில் கூறியதை கிருஷ்ணன் கூட அமர்ந்து கேட்டான் இல்லையா?
அதாவது கண்ணன் "சொன்ன" கீதையை விட, பீஷ்மர் "சொல்ல, கண்ணன் கேட்ட"  சஹஸ்ரநாமத்திற்கு அதிக மதிப்பு இல்லையா? நாமும் தினமும் கீதை பாராயணம்  செய்வதில்லை, ஆனால் சஹஸ்ரநாமம் தினம் பாராயணம் செய்கிறோம். எனவே கேட்பது எளிதுதான், சொல்வதைவிட!!!`
எது எப்படியானாலும் பெரியோர் வாக்குப்படி "கற்றலின் கேட்டல் நன்று", என்றும் "யார் என்ன சொன்னாலும் அதனைப் பகுத்து, அதில் உள்ள உண்மைகளை அறிந்து அதன்படி  நடப்பது சாலச் சிறந்தது இல்லையா?

புதன், நவம்பர் 9

வடமதுரா என்னும் மதுரா

வடமதுரை என்னும் மதுரா

. "மதுரா நாம நகரி புண்யா பாபஹரி சுபா"
என்னும் புராண ஸ்லோஹத்தின் படி மதுரா நகரம் பாபங்களைத் தொலைத்து புண்ணியத்தை தரக்கூடியதாகவும்,மங்கலங்களுக்கு இருப்பிடமாகவும் உள்ள ஊர் ஆகும். இதுவே கண்ணனின் பிறப்பிடமாகும்

இந்நகரம் யுகம்தொரும் பாகவத சம்மந்தம் பெற்ற ஊர் என்கிறார்கள். க்ருத யாகத்தில் துருவன் யமுனைக்கரையில் தவம புரிந்து பகவானை தரிசித்தான். த்ரேதா யுகத்தில் இதே ஊரில் லவனாசுரன் என்ற அரக்கனைக்கொன்று சத்துருக்க்ணன் மதுரா எனப் பெயரிட்டு ஆண்டு வந்தான் என குலசேகர ஆழ்வார் தனது பெருமாள் திருமொழியில் கூறுகிறார்.

ஏழு முக்தி தரும் ஷேத்திரங்களில்

அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா
புரித்வாரவதீ சைவ ஸப்ஸத்தா மோக்ஷதாயகா ......

என்று ,கொண்டாடப்படும் ஊர்  மதுரா நகரமாகும்.

பெரியாழ்வார், தனது திருமொழியில்

வடதிசை மதுரை சாளக்கிராமம்
வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய
எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
தலைப்ற்றிக் கரைமரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்
கண்டமென்னும் கடிநகரே.

ஆண்டாள் தன்னுடைய நாச்சியார் திருமொழியில்,

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழி நான்

அன்று மதுரை மன்னனைப் பற்றி கூறுகிறார்.

நம்மாழ்வார் தன்னுடைய திருவாய்மொழியில்

மண்ணின் பாரம் நீக்குவதற்கு வடமதுரையில் கண்ணன் வந்து பிறந்தான், கண்ணன் அல்லால் மற்றொரு தெய்வம் இல்லை என்று உணருவீர், அவனைச் சரண் அடைந்து உய்ம்மின்
என்று, கூறு கிறார்.
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான் திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்ந்து உய்ம்மினோ எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்றில்லையே மதன ஆதார பூமி அன்று, கடைவதற்கு ஆதாரமாக இருந்த பூமி, அதாவது ப்ருது மகராஜன் இந்த இடத்தில் புமாதேவியிடம் இருந்து மக்கள் வாழ்வதற்கு வேண்டிய சிறந்த பொருட்களையெல்லாம் கடைந்து எடுத்தபடியால் இந்த இடம் மதுரா என்று பெயர் பெற்றதாம்.
மதுராவில் வசித்தாலும், கண்ணன் இங்கு பிறந்தான் என்று நினைத்தாலும், வசுதேவரின் காலில் இருந்த விலங்குகள் உடைந்தால் போல் நம் பாவங்கள் விலகி போகுமாம்.
ஆதாரம்:
திவ்யதேச மாஹாத்ம்யம்--- தொகுத்தவர்; வேளுக்குடி ஸ்ரீ உ.வே.க்ருஷ்ணன் ஸ்வாமிகள். மூன்றாம் பதிப்பு, கிஞ்சித்காரம் டிரஸ்ட், 6, பீமசேனா கார்டன் தெரு, மயிலாப்பூர், சென்னை-4.
கண்ணன் பிறந்த இடத்தையும் மற்றும் மதுராவில் கண்ணனுக்கு வேண்டிய இடங்களையும் காண்போம்.
                    க்ருஷ்ண ஜன்ம பூமி யின்  முகப்பு

1. ஸ்ரீகிருஷ்ண ஜன்ம பூமி.
கம்சனின் அரண்மனையில் ஒருகாட்சி::
தேவகிக்கும் வசுதேவருக்கும் மாங்கல்யதாரணம் நடத்துவது என்று கம்சன் தீர்மானிக்கிறான். உரிய நாளில் திருமணம் செய்து அவர்களை ரதத்தில் ஏற்றி பாசத்துடன் வழியனுப்ப தயாராகிறான். அந்த சமயம், வானத்தில்
"கம்சா, தேவகிக்கும், வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது மகன் உனக்கு எமன்"
என்று அசரரி கேட்கிறது. கம்சன் திடுக்கிட்டு சுற்று முற்றும் பார்த்துவிட்டு வழியனுப்புவதை நிறுத்திவிட்டு,
"இவர்கள் இருவரையும் உடனே கொல்லுங்கள்"
என தனது ஆட்களுக்கு ஆணை இடுகிறான். அதிர்ச்சி அடைந்த வசுதேவர், கம்சனிடம்,
" கம்சா,எங்களுக்கு பிறக்கும் எட்டாவது மகன் தானே உனக்கு எமன். நாங்கள் என்ன பாவம் செய்தோம்.எங்களுக்கு பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் உன்னிடம் கொடுத்து விடுகிறோம். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். எங்களைக் கொன்று அந்தப் பாவத்தை வேறு நீ ஏன் பெறவேண்டும்", என்று பலவாறு அவனுக்கு அறிவுரை சொல்கிறார். ஒருவாறு சமாதானம் அடைந்த கம்சன்,
"இவர்கள் சொல்வதும் சரிதான். "இவர்களை சிறையிலடையுங்கள். இவர்களுக்கு தக்க பாதுகாப்புப் போடுங்கள்.இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை என்னிடம் கொண்டு வந்து கொடுக்கவேண்டும்",
என்று தனது ஆட்களுக்கு ஆணையிடுகிறான்.
நாட்கள் சென்றன. தேவகியும் கருவுற்றாள்.குழந்தை பிறந்த செய்தி கேட்டு,கம்சனும் அந்தக் குழந்தையை உடன் பெற்று கொன்றான்.இது மாதிரி ஆறு குழ்ந்தைகளிக் கம்சன் தொடர்ச்சியாகக் கொன்றான். தேவகி ஏழாவது கர்ப்பம் தரித்தாள்.அந்த சமயத்த்தில் விஷ்ணு பகவான் தன் யோகமாயையை கூப்பிட்டு
"ரோகிணி கோகுலத்தில் வாழ்கிறாள். நீ தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை வெளியே இழுத்துக்கொண்டு போய் ரோஹினியின் கர்ப்பத்தில் வைத்து விடு. தேவகிக்கு கர்ப்பச் சிதைவு என்று கம்சனிடம் சொல்லிவிடுவார்கள்"
என்று ஆணையிடுகிறான். இந்தக் குழந்தைதான் பலராமன்.
"மேலும் நீ போய் கோகுலத்தில் யசோதையின் கர்ப்பத்தில் பெண் குழந்தையாக பிற.நான் தேவகியின் எட்டாவது மகனாக மதுரையில் பிறந்து, என்னை வசுதேவர் யமுனையைத் தாண்டி கோகுலத்தில் கொண்டு விட்டு, உன்னை எடுத்துக் கொண்டு வந்து கம்சனிடம் எட்டாவது குழந்தையாகக் கொடுப்பார்.உன்னைக் கம்சன் கொள்ள முற்படும்போது நீ நடந்ததைச் சொல்லி விட்டு மறைந்து விடு",
என்று ஆணை இடுகிறார்.
அந்தக் கண்ணன் அவதரித்த சிறைச்சாலை. இங்கேதான் வசுதேவரும்,தேவகியும்அடைக்கப்பட்டு இருந்தார்கள். இங்கு தான் எட்டாவது குழந்தையாக கண்ணன், தந்தையின் காலில் விலங்குகள் அவிழ, நான்கு தோள்களோட சகல ஆயுதங்களுடன்,ஆபரங்களுடன் பிறந்தான்.தனது ஜன்ம ரகசியத்தை பெற்றோர்களுக்கு வெளியிட்டு பின்னர் அதை மறக்கும்படி செய்தான்.எனவே வசுதேவர் கண்ணனைக் கொண்டுபோய் கோகுலத்தில் யசோதைக்கு அருகில் விட்டுவிட்டு அவளுக்கு பிறந்த பெண் குழந்தையை சிறைச்சாலைக்கு அடுத்துச் சென்றார்.
இவைகள் நடந்த இடம்தான் நாம் பார்க்கும் சிறைச்சாலை. புராதனமான கோயில் கண்ணனின் கொள்ளுப் பேரன் வஜ்ரனாபன் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது. பல படை எடுப்புக்களால் தற்போது உள்ள நிலையில் உள்ளது. பக்கத்திலேயே முகமதியர்களின் மஸூதி உள்ளதால் பாதுகாப்பு அதிகம் உள்ளது.கைபேசி,காமிராக்களைக் கொண்டு போகவேண்டாம்.

2.கேசவ்சி மந்திர்:

ஜன்ம பூமிக்கு அருகில் உள்ளது.புராதனமான கோயில்.கம்சனின் சிறை முன்னொரு காலத்தில் இங்கு வரை இருந்ததாகச் சொல்வார்கள்.இங்குள்ள மூர்த்தியை 24 அலங்காரகளாலும் அலங்கரித்து உள்ளார்கள்.மேலும் தேவகியும் வசுதேவரும் வணங்கிய மூர்த்தியாகும்.

                                   போதரா குண்டம் 
3.போத்ரா குண்டம்:
ஜன்ம பூமிக்கு அருகில் மிக அழகான குளம்."பவித்ர குண்டம்" என்ற சொல் மருவி "போத்ரா குண்டம்" என்று அழைக்கப்படுகிறது. சிறைச்சாலையில் உள்ளபோது,வசுதேவரும்,தேவகியும் நீராடி துணி துவைப்பார்களாம்.
4.கம்சா டீலா ,ரங்கா பூமி:
அஞ்சலகத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இங்கு தான் கண்ணன் முஷ்டிக மற்றும் சாணுரர்களை சண்டை இட்ட இடம்.இங்கே இருந்த குன்றின்மேல் அமர்ந்து இருந்த கம்சனையும் கீழே தள்ளி கொன்றானாம்.

                                                    ஆதி  வராஹ முர்த்தி
5.ஆதிவராஹ மூர்த்தி:
முன்னொரு காலத்தில் மதுரா வராஹ ஷேத்திரமாக இருந்ததாம் அயோத்திலிருந்து சத்ருக்க்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.
6.த்வாரகா தீசன் சந்நிதி:
த்வாரகா தீசன் சந்நிதி ,விஸ்ராம் காட், த்ருவ டீலா ஆகியவை யமுனை நதிக்ரைக்கு அருகாமையில் உள்ளன. எனவே வாகனத்தில் சென்று பார்ப்பவர்கள் வாகனத்தை பெங்கால் காட் அருகே நிறுத்தி வைத்துக் கொண்டு தரிசிப்பது நலம். த்வாரகா தீசன் சந்நிதி 150 ஆண்டுகளுக்கு முன்னர் வல்லபாசார்யா சம்பிரதாயத்தில் கட்டப்பட்டது. ருக்மிணி சத்யபாமா சமேத கணணன் எழுந்தருளி உள்ளான்.
                                          
                                                          விஸ்ராம் காட் மதுரா
7.விஸ்ராம் காட்:
கண்ணன் கம்சனை முடித்து அவனுடைய அந்திமகிரியைகளை "த்ருவ காட்டில்" செய்து விட்டு நீராடி ஓய்வேடுத்தான் என்பர்.இது 24 தீர்த்தங்களுள் முக்கியமானது ஆகும்.யமுனைக் கரையில் உள்ளது கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷத்விதீயை "யமத்விதீயை", அன்று இங்கு நீராடினால் சம்சாரத்தில் இருந்து ஒய்வு கிடைக்குமாம்.
8.த்ருவ டீலா:
யமுனையின் மற்றொரு கரையில் உள்ள இந்த இடத்தில் துருவன் தவம் செய்து பகவானைக் கண்டான்.பாதை சரியில்லாமல் உள்ளதால், இதனை விஸ்ராம் காட்டில் இருந்தே சேவித்துக் கொள்ளவேண்டும்.
                                                               தாள வனம்  மதுரா 
9.தாள வனம்:
மதுரைக்குத் தெற்கே 6 மைல் தொலைவில் உள்ளது.இங்கு பலராமன் கோயிலும் குண்டமும் உள்ளன. 10.மது வனம்: மதுரைக்கு தென்மேற்கே உள்ளது. இங்கு மது என்ற அசூரனைக் கொன்றதால் மதுவனம் எனப்பட்டது இதைத் தவிர இன்னும் பல இடங்கள் பாதை சரியில்லாமல் இருக்கின்றன.

https://www.cx.com/mycx/share/CDpB9gqmEeGgJBICOBubSA/krishna%20anubav%20yaathra.msdvd

இவைகளைப் பற்றிய விளக்கங்களை வேளுக்குடி ஸ்ரீ உ.வே. க்ருஷ்ணன் சுவாமிகளின் உரையில் கேட்கலாம். அந்த உரையின் ஒலி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, நவம்பர் 6

ஸ்ரீமத் பாகவத க்ருஷ்ணானுபவ யாத்ரை

ஸ்ரீமத் பாகவத க்ருஷ்ணானுபவ யாத்ரை.

அக்டோபர் 9 முதல் அக்டோபர் 15ம் தேதி வரை வேளுக்குடி ஸ்ரீ.உ.வே.க்ருஷ்ணன் ஸ்வாமிகள்  மதுரா, பிருந்தாவனம், கோகுலம், கோவர்த்தனம்,காம்யவனம், பர்சானா மற்றும் நந்த்காவ்
போன்ற கண்ணன் பிறந்து வளர்ந்து,விளையாடிய, சேஷ்டிதங்கள் செய்த இடங்களுக்கு சுமார்  ஏழாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்களை அழைத்துக் கொண்டு , பிருந்தாவனத்தில்  ஏழு நாட்கள் ஸ்ரீமத் பாகவத உபன்யாசத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார்.அந்த வைபவத்தில்
கலந்து கொள்ளும் பாக்கியம் நாங்களும் பெற்றோம்.
முற்பிறவியில் செய்த புண்ணியமோ என்னவோ,எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் சொன்னமாதிரி,இந்த யாத்திரையின் குறிகோளாக கிருஷ்ண பக்தியை வளர்த்துக்  கொள்ளுதல்,அவன் கதைகளை ஒருவருக்கு ஒருவர் பேசி இன்புறுதல், பக்தர்களோடு கூடி  விட்டுக்கொடுத்து க்ருஷ்ண பக்தியால் ஓர் குடும்பமாக இருத்தல் என்ற ஏதேனும் ஒரு
தன்மையை வளர்த்துக் கொள்ள இந்த யாத்திரை உதவியது என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆழ்வார்கள் தங்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பாடியபடி, கண்ணன் செய்த  விளையாட்டுக்களை ஏதோ நாங்களே அந்த சமயத்தில் அவனுடன் கூட இருந்து பார்த்தது  போல எங்களுக்கு சந்தர்ப்பம் அருளுயிய சுவாமிகளுக்கு எங்கள் பாதாரவிந்தங்களை  சமர்ப்பிக்கின்றோம்.
புண்ய நதியான யமுனைக்கு இருகரையிலும் தில்லிக்கு சுமார் 100மைல் தெற்கே விரிந்துள்ளது  வ்ரஜ பூமி ஆகும்.
வடமொழியில் 'வ்ரஜதி' என்றால் 'செல்லுதல்' அல்லது ;திரிதல்' என்று பெயராம். எங்கு மாடு கன்றுகளும் ஆயர்களும் திரிந்தார்களோ அந்த இடத்திற்கு 'வ்ரஜ பூமி' அன்று பெயர் ஏற்பட்டது. உலகத்தை உய்விக்க ஸ்ரீமந்நாராயணன் கண்ணனாக அவதரிக்க வ்ரஜ பூமியைத் தேர்ந்தெடுத்தான்.
சுமார் 168 மைல் சுற்றளவு கொண்ட வ்ரஜ பூமியின் பெரும்பகுதி   உத்திரப்பிரதேசத்திலும் மற்றும்  சிறிதளவு பகுதி ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் உள்ளது. கண்ணன் பிறந்த இடம் மதுரா, வளர்ந்த இடம் கோகுலம், நந்தக்ராமம்,பல சேஷ்டிதங்கள்  செய்த ப்ருந்தாவனம், கோவர்த்தனம்,பர்சானா மற்றும் காம்யவனம் ஆகியவற்றைப் பற்றித் தனித்தனியாக  அதன் சிறப்பையும் பின்வரும் பகுதிகளில் காண்போம்.
இந்த ஷேத்திரங்கள் பற்றிய  வேளுக்குடி ஸ்ரீ.உ.வே.கிருஷ்ணன்  சுவாமிகளின்
முகப்புரையின்  ஒலிப்பகுதி தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது.


புதன், செப்டம்பர் 14

பெயரில் என்ன இருக்கிறது? பெயரில் தான் இருக்கிறது !!!




பெயரில் என்ன இருக்கிறது? பெயரில் தான் இருக்கிறது !!!!
பாற்கடலில் ஒரு காட்சி.
பரந்தாமன்,மகாலக்ஷ்மி இருவரும் பாம்பணையில் பள்ளி கொண்டு இருக்கின்றனர்.
பரந்தாமன் ஏதோ நினைவில்,
"ஹா,ஹா " என்று சிரிக்கிறார்.
"எதற்கு சிரிக்கிறிர்கள்" மகாலக்ஷ்மி பரந்தாமனைப் பார்த்து வினவினாள்.
"இல்லை, ஒரு விஷயம் நினைத்துப் பார்த்தேன். அதை நினைத்து நினைத்து சிரிப்பு வருகிறது.
நீயும் அதைக் கேட்டால் உனக்கும் சிரிப்பு வரத்தான் செய்யும்", பரந்தாமன் மகாலக்ஷ்மியிடம் கூறுகிறான்.
"அப்படி என்ன பெரிய விஷயம் நடந்து விட்டது, இப்படிச் சிரிப்பதற்கு? எனக்கும் சொல்லுங்களேன்
நானும் தெரிந்து கொள்கிறேன்." மகாலக்ஷ்மி பரந்தாமனைப் பார்த்து வினவினாள்.
"சொர்க்கத்தில் நடந்த விஷயத்தை அங்கிருந்து வந்தவர்கள் சொன்னார்கள்.அதை நினைத்தேன்.
நீயும் தெரிந்து கொள்" மகாவிஷ்ணு ஒரு பின்னூட்டம் இடப் போகிறார் என்பதைத் மகாலக்ஷ்மி தெரிந்து கொண்டாள்.
சொர்க்கலோகத்தை நோக்கி போவோம்.
"நான் இருப்பது சொர்க்கலோகமா அல்லது நரகலோகமா?"
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் பூவுலத்தில் இறந்தபின் மேல் லோகத்திற்கு
வந்தவுடன்,அங்கிருந்த கிங்கரர்களிடம் மேற்கண்டவாறு
வினவினான். புவியில் அவன் செய்யாத அக்கிரமங்கள் இல்லை. கடவுள இல்லை என்ற கொள்கை உடையவன், கடவுளை இப்படித்தான் தூற்றுவது என்றில்லை, அப்படித் தூற்றுவான்  அவனுக்கு சொர்க்கம் அல்லது நரகம் என்பது உண்டு என்பதில் நம்பிக்கை இல்லை. கடவுளிடம் கொண்ட வெறுப்பு காரணமாக தன்னுடைய மகனுக்கு "கடவுள் இல்லை", என்று
பெயர் சூட்டினான்.அவனைக் கூப்பிடும் சாக்கில் கடவுளைத் திட்டலாம் என்பது அவன் எண்ணம்.
ஆனால் நடந்ததோ வேறு. மகன் பள்ளிக்குச் செல்லும் போது அவன் நண்பர்கள் அவனைக் 
"கடவுள், கடவுள்" என்றுதான் அழைப்பார்கள்,ஏனெனில் உலகில் உள்ளோரின் வழக்கமே  பொதுவாக பெயர்களை குறைப்பதுதான்.
அது போகட்டும், விஷயத்திற்கு வருவோம்.
அவனுக்கும் வயதாகியது, உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையில் வீழ்ந்தான். மகனும் அவனை நன்றாகத் தான் பார்த்துக் கொண்டான். தகப்பனுக்குச் செய்ய வேண்டிய எல்லா  கடமைகளையும் ஒன்று விடாமல் செய்தான்.
சர்க்கரை வியாதியினால் உடலில் புண் உண்டாகி பேசக் கூட முடியாமல்,
"சீயினால் செறிந்தேறிய புண்மேல்
  செற்ற லேறிக் குழம்பிருந்து, எங்கும்
ஈயினாலரிப் பூண்டு மயங்கி
 எல்லை வாய்ச்சென்று சேர்வதன் முன்னம்,
வாயினால் நமோ நாரணா வென்று
 மத்த கத்திடைக் கைகளைக் கூப்பிப்
போயினால் பின்னை, இத்திசைக் கென்றும்
பிணைகொ டுக்கிலும் போகவொட் டாரே."
  என்று பெரியாழ்வாரின் பாசுரத்திற்கு ஏற்ப புண்ணில் ஈமொய்க்கும் போது,
தன மகனை "கடவுள் இல்லை" இங்கே வா என்று அழைக்க முடியாமல், "கடவுள்" என்றே  கடைசிக் காலத்தில் அழைத்தான். அத்துடன் அவனின் ஆயுட்காலம் முடிந்தது.

"நமனும்முற் கலனும் பேச
  நரகில்நின் றார்கள் கேட்க,
நரகமே சுவர்க்க மாகும்
 நாமங்களுடைய நம்பி"
  என்று திருமாலை  பாசுரத்தில் சொன்னது போல,நரகத்தயே சுவர்க்கமாக்கும் நாம் அவன் கடவுள் என்று கூப்பிட்ட பிறகு அவன் செய்த பாவங்களை மன்னித்து அவனை  சுவர்க்கத்திற்கு அனுப்பாமல் இருக்க முடியுமா?, எனவே அவனை சுவர்க்கத்திற்கு  அனுப்பிவிட்டோம்.அங்கு தான் அவன் மேலே சொன்ன வார்த்தைகளைக் கூறினான். அவன் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று. அதை நினைத்துக் கொண்டிருந்தேன்  சிரிப்பு வந்து விட்டது" என்று மகாலக்ஷ்மியிடம் நடந்தவற்றைக் விபரித்தார் பரந்தாமன். மகாலஷ்மிக்கும் கேட்டவுடன் சிரிப்பு வந்தது.
ஆக பெயரில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு  பதில் நாம் கொடுத்த      "பெயரில்தான் இருக்கிறது!!! "
என்று நான் மாற்றிய தலைப்பு  சரிதானே?
பெரியாழ்வார் என்ன என்ன பெயர் இட வேண்டும் என்று ஒரு பட்டியலே தொடுத்துள்ளார்.
அதைப் அடுத்த பகுதியில் காண்போம்.

சனி, செப்டம்பர் 3

விடுபடுதிசைவேகம் அல்லது சுவர்க்கத்துக்கு வழி

விடுபடு திசைவேகம்--அல்லது சுவர்க்கத்துக் வழி

என்ன மோட்சம், விடுபடு திசை வேகம்-ன்னு என்னமோ புதுசு புதுசா
என்னமோ சொல்றேன்னு பார்க்கிரீகளா?
ஆமாம், புதுசாத்தான் ஒன்னு சொல்லலாம்னு பார்க்கிறேன்.
சுவர்க்கத்துக்கு போவதற்கு வழி என்ன?
வழி இருக்கான்னு கேட்கிறிர்களா?
நீண்ட நாட்களாக பலரும் சென்று அடையத் துடிக்கும் ஈசியான வழி என்ன?
இருக்கு அய்யா இருக்கு!!
அதை முதல்ல சொல்லுங்க, அப்படின்னு நீங்க சொல்றது கேட்குது.
அதுக்கு முன்னாலே அண்டத்தைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்
உலக பந்தத்தில் இருந்து விடுபட என்ன செய்யவேண்டும்?

பகவான் கண்ணனைக் கேட்டால் கர்ம யோகம்,பக்தி யோகம்,ஞான யோகம்'
செய் என்பான். நாம் என்ன பாபங்கள் மற்றும் புண்ணியங்கள் செய்துள்ளோமோ
அதற்கு ஏற்ப இந்த உலகத்தில் இருந்து அவற்றை அனுபவித்து விட்டுத்
இந்த உலகத்தை விட்டுச் செல்லமுடியும். அதோடு அல்லாமல் மோட்சத்திற்குச்
செல்ல அதற்கு தனியாக புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.
வைகுந்தம், திருபாற்கடல் இவையெல்லாம் எங்கு உள்ளன?
அங்கு ஏன் செல்லவேண்டும்?
வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிகள் தன்னுடைய உபன்யாசத்தில் விளக்கமாக
குறிப்பிடுகிறார்.ரெண்டு விபுதிகள் உண்டாம், ஒன்னு லீலா விபுதி மற்றது நித்ய விபுதி அப்படின்னு அதுக்கு பேராம்.லீலா விபுதிங்கறது நாமல்லாம் இருக்கிற உலகம்.பிரளய காலத்தில் அழிவது லீலா விபுதியாம் எந்த பிரளயம் வந்தாலும் அழியாதது நித்ய விபுதி.ஞானம் குறைவில்லாதது நித்ய விபுதியாம் நித்ய விபுதிங்கறது வைகுந்தமான் பகவான் இருக்கிற இடம்.
நமக்கு கீழே ஏழு உலகங்கள் மேலே ஏழு உலகங்கள் உண்டாம் அதுக்கு மேலே
சப்தாவரனம் அதுக்கு மேலே மூல பிரகிருதி இந்த இரண்டையும் தாண்டி உள்ளது விரஜை நதி இதைத் தாண்டி நித்ய லோகம்.இந்த பதினாலு உலகங்கள் கொண்டது ஒரு அண்டம் முட்டை வடிவத்தில் உள்ளதாம்.
"இமையோர் வாழும் தனிமுட்டை" என்று ஆழ்வார் இதனை சாதிக்கிறார்
இது ஒரு அண்டம் அல்ல. இதுபோல பல் நூறு அண்டங்கள்
ஒவ்வொரு அண்டத்துக்கும் ஒரு பிரம்மா, ஒரு இந்திரன், ஒரு ருத்ரன். இது போல கோடிக் கணக்கான அண்டங்கள் ஆகாசத்தில் மிதந்து கொண்டிருக்காம்.
இதுபோல 10000, 10கோடி அண்டங்கள் உள்ளதாம் இது அத்தனையும் ஒரு கால் பங்குதானாம்.

ஒரு அண்டம் எவ்வளவு தொலைவு தெரியுமோ?

50 கோடி யோசனை விஸ்திர்ணம் ஒரு யோசனை பத்து மைல் அப்படின்னா 500 கோடி மைல்ஒரு அண்டம் சத்ய லோகம் வரை இது போல கோடிக்காக்கான அண்டங்கள். இது அத்தனையும் தாண்டி சப்தாவரணம்
அதை தாண்டி விரஜா நதி. இதுக்கு இந்த பக்கம் கால பங்குதானாம். இதை போல் மூன்று பங்கு பெருத்தது நித்ய விபுதி. இந்த நித்ய விபுதி, லீலா விபுதிக்கு சொந்தக்காரர் பகவான் நம்ம இருக்குமிடம் ரெண்டு அடிக்கு ரெண்டு அடி அளவு தான் இப்படி இருக்கும் போது நாம் பகவானை "நீ யார்" என்று கேட்கிறோம் .
இப்படி இருக்ககூடிய பகவான் எங்கும் இருக்கிறானாம்
ஆழ்வார் இதனை
"பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன் ,
பரந்த அண் டமி தென நிலவிசும் பொழிவர,
கரந்தசி லிடன்தொறும் இடந்திகழ் பொருடொறும்,
கரந்தெங்கும் பரந்துள னிவை யுண்டகரனே

ஒவ்வொரு அணுவுக்குள்ளும் பகவான் வியாபித்து இருக்கிறான்
ஒவ்வொரு நீர் திவலைக்குள்ளும் உள்ளானாம்.

இந்த உபன்யாசத்தை தரப்பட்டுள்ள தொடர்பை தொடர்பு கொள்ளவும்.



இதென்ன உண்மை தானா? என்கிறீர்களா? உண்மைதான் அறிவியல் மூலமாக ஹப்பிள் என்ற தொலைநோக்கி மூலம் இதனை நிரூபித்துள்ளார்கள்.
கலிபோர்னியா, வில்சன் மலையில் இருந்து ஹப்பில் தன் நண்பருடன் 100 இன்ச்
தொலைநோக்கி உதவியுடன் சுழன்று கொண்டிருக்கும் நெபுலா என்ற மேகக் கூட்டத்தை ஆராய்ந்து பல் விளக்கங்களை சொல்லிருக்கிறார்.
நெபுலா என்ற அண்டவெளி



அவற்றைப் பார்க்கும் போது அந்த நெபுலா என்ற மேகக் கூட்டங்கள் நம்மை விட்டு
விலகிச் செல்வதைக் கண்டார். இவைகளைப் பார்க்கும் போது இவை எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாகச் சேர்ந்து இருந்து இருக்க வேண்டும் என்று தன்னுடைய ஹப்பில் விதியில் கூறியுள்ளார்.
அதாவது ஏதேனும் ஒரு காலத்தில் அவை எல்லாம் ஒன்றாக இருந்து ஏதேனும் ஒரு காரணத்தால் உடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்க வேண்டும் என்றார். அதனை big bang மிகப் பெரிய உடைப்பு என்று சொல்வார்கள்.
எப்போது இது நடந்து இருக்கும்?


ஹப்பில் தொலைநோக்கி மற்றும் பல சாதனங்கள் உதவியுடன் பார்க்கும் போது 13.7 biilion (1000000000) ஆண்டுகள் முன்னர் இந்த மிக பெரிய உடைப்பு என்ற நிகழ்ச்சி நடந்து இருக்கவேண்டும் என்று சொன்னார்.
அதாவது அதன் ஆரம், ஒளியின் வேகத்தில் சொன்னாள் 13.7 billion (1000000000000000) ஒளி ஆண்டுகள் , அதாவது 1.3 quadrillion கிலோ மீட்டர் தொலைவு ஆகும்,
இதை ஆல்பர்ட் ஈன்ஸ்டின் 1917 ம் ஆண்டிலேயே சொல்லி விட்டார்.
எனவே அண்டம் என்பது ஒரு கட்டுக்குள் வரக கூடியது அல்ல.வேதாந்தத்தில்
சொல்லி இருப்பதை விட அதிகமான தொலைவு கொண்டது என்பது
ஆராய்ச்சியின் மூலமும் நிருபிக்கப்பட்டுள்ளது
இப்ப நம்முடைய ஆரம்பத்துக்கு வருவோம்.
ஒரு பொருளை மேலே எறிந்தால் என்ன ஆகிறது. கொஞ்ச தூரம் மேலே போய்விட்டு கீழே வந்து விடுகிறது.
கொஞ்சம் அதிகமான வேகத்துடன் மேலே செலுத்தினால் இன்னும் கொஞ்சம் மேலே போய் விட்டு கீழே வந்து விடுகிறது.
எனவே எந்த வேகத்தில் செலுத்தினால் பூமியின் ஈர்ப்பு விசையை விட்டு திரும்பி வராமல் போய் விடுகிறதோ
அந்த வேகத்தைத் தான் விடுபடு திசைவேகம் என்பார்கள்.
அதாவது E என்ற திசையில் செலுத்தினால் திரும்பி
வராத இடத்துக்கு செல்வோமாம்.
ஆக இந்த பந்தத்தில் இருந்து (அதாவது உலக இன்ப துன்பங்களில் இருந்து விடுபட )
அறிவுப் பூர்வமாக சிந்தித்தால் ஒருவன், ஆன்மிகவாதி, விடுபடு திசை வேகத்தில் பயணித்தால் இந்த உலக பந்தத்தில் இருந்து விடுபடலாம்.
அது சரி, அந்த விடுபடு திசை வேகம் என்னன்னு சொல்லுங்கிரிர்களா? உடனே ஏற்பாடு பண்ணி இங்கிருந்து கிளம்பிடலாம், அப்படின்னு பார்க்கிறிர்களா?
சொல்லிட்டாப் போச்சு.
பூமியில் இருந்து வான வழியில் செல்ல விடுபடு திசைவேகம் ( 11.2 km/sec), அதாவது ஒரு வினாடிக்கு 11.2 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால், பூமியின் இன்ப துன்பங்களில் இருந்து விடுபடலாமாம்.
ஈசியாகத் தானே உள்ளதுன்னு நினைப்போம். அந்த வேகம் என்ன தெரியுமா? மணிக்கு 40000 கிலோ மீட்டர் ஆகும்.
அதுசரி.
இதுவரை மிக அதிகமான வேகத்தைப் பெற்ற விமானம் மணிக்கு 7232 கிலோமீட்டர் வேகம் தான். பிரான்சில் உலகிலேயே மிக அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய ரயில் மணிக்கு 515..3 கிலோமீட்டர் ஆகும்.
அதுஎன்ன மணிக்கு 40000கிலோமீட்டர் வேகம் என்பது மனிதனால் அடையக்கூடிய வேகமா?
ஹப்பில் மற்றும் ஈன்ஸ்டின் போன்ற ஆராய்ச்சியாளர்கள் சொன்ன அண்டத்தை விட்டு சென்று பகவான் இருக்கும் சுவர்க்கத்தை அடைய, அதாவது நம்முடைய சூரியக் குடும்பத்தை விட்டுச் செல்ல வினாடிக்கு 42.1 கிலோ மீட்டர்
வேகத்தில் சென்றால் சுவர்க்கத்தை அடையலாமாம்.
அம்மாடியோவ் இந்த வேகத்து எங்க போவது?அதற்கான ராக்கெட்டுகள் இதுவரை உருவாக்கப்படவில்லை.
அப்படியானால் எப்படி சுவர்க்கம் போவது? அப்படியானால் சொர்க்கம் போக முடியாதா? ஏன் முடியாது? முடியாதது என உலகினில் எதுவும் கிடையாது
அதற்கும் நம்முடைய ஆன்மிகம் வழி சொல்கிறது.
அதனை அடுத்த தலைப்பில் பார்ப்போம்.

புதன், ஆகஸ்ட் 17

ஆண்டாள் ஆடிப் பூர உற்சவம்

 

ஆண்டாள் சந்நிதி ஸ்ரீரங்கம்  கண்ணாடி அறை சேவை யில் பத்து நாட்கள் ஆடிப் பூர உற்சவம் நடைபெற்றதுஅந்தக்காட்சிகள்இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

புதன், ஆகஸ்ட் 3

விதி யாரை விட்டது ? எமன் ஏன் சிரித்தான்?

நண்பர் விதி, ஜோசியம், போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்.யார் சொன்னாலும் எதிர்த்து பேசுபவர்.விதியாவது ஒண்ணாவது? ஏன் தான் தான் ஜோச்யக்காரன் பின்னாலேயே எல்லாரும் போறாங்களோ? என்று ஜோச்யத்தை நம்புவர்களை இழிவாகப் பேசுவார். விதியை நம்மால் மாற்ற முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்.

அவரிடம் ஒருநாள் இந்தக் கதையை சொன்னேன்.

"ராமசாமி சார், உங்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அதே உங்கக்கிட்ட சொல்லாட்ட ஏன் மண்டையே வெடிச்சுடும் போல இருக்கு சார்."
" வாங்க சபேசன்.ஏன் , எதனாலே உங்க மண்டை உடையனும். விவரமாக சொல்லுங்க."
"ஒண்ணும் இல்லை, நான் வரபோது ஒருத்தர் ஒரு கதை சொன்னார். அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் உங்களிடம் சொல்லலாம் என நினைத்தேன், அதான்" என இழுத்தேன்
"அட என்னங்க சபேசன், இதெல்லாம் என்னிடம் கேட்கணுமா? சொல்லுங்க "
"ரெண்டு விஷயம் ஏன் காதுலே விழுத்தது. முதலா ஜோச்யத்தைப் பற்றியது.
அவனும் உங்களமாதிரி ஜோசியம் பொய் என்று நினைப்பவன். ஒரு நாள் ஜோச்யக்காரனிடம் போய் இன்னிக்கு எனக்கு நாள் எப்படி இருக்கும் என்று கேட்டான்? அவனும் கைரேகையப் பார்த்துட்டு இன்னிக்கு உனக்குப் பாயசம் கிடைக்கும். மகிழ்ச்சியாக இரு. அப்படின்னான்'
இவனுக்கு கோவமான கோவம். உங்க ஜோச்யத்தைப் பொய்யாக்கிறேன் பாருங்க.
நான் நாட்டுலே இருந்தாத்தானே. இப்பவே நான் காட்டுக்கு போறேன், அப்படின்னு சொல்லிட்டு காட்டுக்குக் கிளம்பிப் போய் ஒரு மரத்தின் மேல போய் உட்கார்ந்துகொண்டு எப்படி பாயசம் கிடைக்கும் பாப்போம், என்று பார்த்தான்.
அன்னிக்கு பார்த்து அஞ்சாறு திருடர்கள் யாரையாவது கொள்ளை அடிக்கலாம் என்று பார்த்து காட்டுக்குள்ள வந்துண்டிருந்தார்கள்.
மணப்பெண் நிறைய நகையோட சுற்றத்தார்கள் கூட அந்த வழியாக வராங்க.
பார்த்தார்கள் திருடர்கள். நல்ல வேட்டை.
"எல்லாத்தையும் கழட்டுங்க. உம் ஒடுங்க"
பயத்திலே எல்லாத்தையும் கழட்டிக் கொடுத்து விட்டு விட்டாப் பொறும் என்று ஓடி ஒளிஞ்சாங்க.


இதுலே நீண்ட நேரம் ஆனதாலே மணப்பெண் வீட்டார் கொண்டுவந்த சாமான்களை வைத்து, காட்டுலே உள்ள சுள்ளிகளைப் பொறுக்கி பாயசம் வைத்து சாப்பிடுவோம் என்று நினைத்து பாயசம் வைத்தார்கள்.
"கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலே
" என்பாங்களே, அதுபோல பாயசத்தைச் சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்ற சமயம் பார்த்து அந்த ஊர் ராஜா தன பரிவாரங்களோட அந்த பக்கமா
வராரு. "இது ஏதடா வம்பாப் போச்சு?" என்று எல்லா நகைகளையும், பாயசத்தையும் விட்டுவிட்டு "தப்பித்தோம் பிழைத்தோம்" ன்னு சொல்லிட்டு ஓட்டம எடுத்தார்கள்.

சிறிது நேரத்தில் அந்த இடத்துக்கு வந்த ராஜா நகை மற்றும் பாயசம் எல்லாத்தையும் பார்க்கிறார். சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா? என்று பார்க்கிறார்.
நம்ம ஆளு தான் இதை எல்லாத்தையும் மரத்து மேல் இருந்து பார்த்துக்கிட்டு
இருக்காரில்ல. அவரை நம்ம ராஜா பார்த்துட்டு "இதுக்கு எல்லாம் காரணம் இவன்தான்"
இவன்தான் பாயசத்திலே விஷத்தை வச்சுட்டு நம்ம சாப்பிட்டு இறந்த பிறகு
எல்லாத்தையும் சுருட்டிட்டு போகலாம் " என்று நினத்துக் கொண்டு உட்கார்ந்து
இருக்கிறான்.இவனை விடக்கூடாது என்று நினத்து " கீழே இறங்கு, இந்தப் பாயசத்தை நீ தானே செய்தாய்? நீயே சாப்பிடு." என்று அவனுக்கு ஆணையிட்டார். அவனும் நடந்ததையல்லாம் சொல்லியும் அரசன் கேட்காததால், அவனும் வேறு வழியின்றி சாப்பிட்டான்.
அப்போது நினைத்தான் ஜோஸ்யர் சொன்னது பலித்து விட்டதே
விதி யாரை விட்டது என்று தன்னையே நொந்து கொண்டான்.
இது முதல் சம்பவம்.

இரண்டாவதில் எமனை ஏமாற்றிய கதை.

எமதர்மன் அந்த வீட்டின் ஜன்னலில் அமர்ந்து நீண்ட நேரமாக, உள்ளே நடக்கும் சம்பாஷ்னையைக் கேட்டுக் கொண்டிருந்தான். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மனைவி கணவனிடம் "உங்களோடு இத்தனை நாள் குப்பை கொட்டி என்ன பிரயோஜனம்? ஒரு நல்ல புடவை உண்டா?
நகை நாட்டுத் தான் உண்டா? அடுத்த வீட்டைப் பாருங்கள்? அவனுடைய மனைவி தினம் ஒரு புடவை,வைர நகைகள் என்று மினுக்கிறாள்.நீங்களும் தான்?" என்று இடிக்காத குறையாக குறைப்பட்டுக் கொண்டிருந்தாள்.
கணவன் மனைவியிடம் " அதெல்லாம் சரிதான். அவன் எங்க வேலை பார்க்கிறான் தெரியுமா?
அவனுடைய சம்பளம் என்ன தெரியுமா? இதெல்லாம் தெரியாம இப்படிச் சொல்கிறாயே? நான் அதே மாதிரி சம்பாதித்தால் ஜெயிலுக்குத் தான் போகவேண்டும். பரவாயில்லையா?"
இப்படிப் சொல்லிக் கொண்டிருந்த கணவன் ஜன்னலைப் பார்த்தான். வாசலில் எமதர்மனைப் பார்த்தான்.
உடனே மனைவியிடம் "கொல்லைக் கதவைத் திற, வாசலில் எமதர்மன் எனக்காக நிற்கிறான் என நினைக்கிறேன். அவனுக்குத் தெரியாமல் ஓடி விடுகிறேன்"
என்று சொல்லி விட்டு கொல்லைப் புறமாக மூச்சிரைக்க ஓடினான்.
ஓடி, ஓடி ஒரு புளிய மரத்தின் அடியில் வந்து
ஆசுவாசப் படுத்திக் கொண்டான். எமனிடம் இருந்து தப்பித்தோம் என்று நினைத்தான்.
வாசலில் அமர்ந்து இருந்த எமன் உள்ளே சத்தம் இல்லாததால், கணவனைக் காணாமல்
அவனைத தேடி புளிய மரத்தடிக்கு வந்து சேர்ந்தான்.
கணவனுக்கு புளிய மரத்தடியில் எமனைப் பார்த்ததும் தேள் கொட்டியது போல் ஆகிவிட்டது.
எமன் கணவனைப் பார்த்து "ஹா! ஹா!" ஏன் வாய் விட்டு சிரித்தான்.
"எதுக்கு சிரிக்கிறாய்?"
"நல்ல வேளை, நீண்ட நேரமாக உனக்காகத் வீட்டில் காத்திருந்தேன். உன்னுடைய மரணம் இந்தப் புளியமரத்தின் அடியில் தான் ஏன் முன்னரே தீர்மானிக்கப் பட்டுள்ளது. நீயானால் வீட்டை விட்டு வெளியே வராமல் மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தாய்.வருவாயா, வராமல் போய்விடுவாயா? என்று கலங்கினேன். நல்லவேளை சரியாக புளிய மரத்தின்
அடிக்கு வந்தாய். உன் உயிரை எடுக்க வேண்டியது தான் பாக்கி" என்றான் எமன்.
கணவனுக்கு தன்னுடைய விதியை நினைத்து, மயங்கினான்!!!

சபேசன் சொன்ன கதையைக் கேட்டு ராமசாமி பதில் சொல்ல முடியாமல் விக்கித்து நின்றார்.

குழல் இனிது யாழ் இனிது


குழல் இனிது யாழ் இனிது.


"டே, சேர்லே ஏறாதேடா "
"தாத்தாவுக்கு ஹாய் சொல்லு"
"ஹாய்"
தாத்தாவுக்கு ஒரு பாட்டுப் பாடிக் காட்டு"
"........."
"ஒரே ஒரு தடவைடா "
"........."
":டே, என்னடா சாப்பிடுறே?" இது தாத்தா.
"ஹே"
"ஏய், என்னடி சொல்றான் அவன்" இது பாட்டி.
"காய் சாப்பிடுறானாம்", இது பெண்.
"என்னடி, பால் சாப்பிட்டாச்சா?"
"இல்லம்மா, பால் அப்பறம் தான் சாப்பிடுவான் அம்மா"
"நான் சமையல் பண்ணிட்டு வந்திடுறேன், கொஞ்ச நாழி பேரனைப் பார்த்திண்டுக்கியா அம்மா?"
"போ, நான் பார்த்துக்கிறேன்"
பேரனை வைத்த கண் வாங்காமல் தாத்தாவும் பாட்டியும் பார்த்துக் கொண்டிருந்தோம்
அவன் செய்யும் விஷமங்களை எத்தனை கொடுத்தாலும், எத்தனை நேரமானாலும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
கையில் கொடுத்த காயை (வேக வைத்த காய்கறி) ஸ்பூன் மூலம் லாகவமாக எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும் விதத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
எங்களுக்கு கொடு என்றால் உடனே ஸ்புனை எங்களுக்கு நேரே நீட்டுவான், நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்..
நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே சேரில் ஏறி உட்கார்ந்து கீழே விழுந்த விடுவான் போல் இருந்தது . உடனே, "ஏய், லக்ஷ்மி அவனைப் பாரடி, சேரில் இருந்து விழுந்து விடப் போகிறான்"
என்று நாங்கள் கத்தினோம் .
""அதெல்லாம் விழ மாட்டான் அம்மா", என்று என் பெண் சமையல் அறையில் இருந்து கவலைப்படாமல் பதில் சொன்னாள். என்ன இருந்தாலும் பதினெட்டு மாத குழந்தை. நமக்கு கவலையாக இருக்காதா?
"டே, பாட்டிக்கு ஒரு டான்ஸ் ஆடிக் காண்பி" என் பெண் சமையல் அறையில் இருந்து பேரனை டான்ஸ் ஆடச் சொன்னாள்.
"டி, டி, டி " என்று பேரன் கத்தினான்,
"இருடா வரேன்" என்று பெண் சொன்னாள்
டான்ஸ் பாடல் கொண்ட ஒரு வீடியோவைத்தான் ஆன பண்ணச் சொன்னான் போலிருக்கு.
வீடியோ பாடலை பெண் ஆன செய்தாள்.
பாட்டுக்கு ஏற்ற மாதிரி கையை இடுப்பில் வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் நகர்ந்து, உட்கார்ந்து எழுந்து ஆடின டான்ஸை இன்றைக்கு பூரா பார்த்துக் கொண்டிருக்கலாம். நேரம் போனதே தெரியவில்லை.
வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்டது. போய்த் திறந்தால் அடுத்தாத்து மாமி.
"வாங்கோ மாமி, என்ன விசேஷம்"
"என்ன உங்க பெண் பேரன் எல்லாம் எப்பஅமெரிக்காவில் இருந்து வந்தாங்க?"
'அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே? உங்களுக்குத் தெரியாம எப்படி வருவா மாமி?"
"பேரன், உங்க பெண் குரல் எல்லாம் கேட்டுதே?
பேரனை டான்ஸ் ஆடச் சொல்லக் கேட்டேனே?"
"உள்ள வாங்கோ, வந்து நீங்களும் அவன் டான்ஸ் ஆடறதைப் பாருங்கோ"
"ஏய்,ஸ்ரிஜித் ,பாக்கத்தாத்து பாட்டிக்கு ஒரு டான்ஸ் ஆடிக் காண்பிடா" என்று எங்கள்
மடிக்கணினிப் பார்த்துச் சொன்னேன்.
அதில் www.skype.com மூலம் என் பேரனுடன் பேசிக் கொண்டிருந்ததை மாமி பார்த்துப் பரவசமானார்கள்.
"இப்படி ஒரு வசதி இருக்கா தேவலையே. பேரன் பேத்தி, பெண் இவர்கள்
தூர தேசத்தில் இருந்தாலும் நேரில் பேசுவது போலவே இருக்கே, பரவாயில்லை"
"ஆமாம் மாமி, எங்களைப் போல ஒரு பெண், பையன் பெற்றவர்கள் தங்கள் குழந்தைகள் நல்லா இருக்கணும் என்று நினைத்து தூர தேசத்திற்கு அனுப்பி விட்டு அவர்கள் பக்கத்தில் இல்லை என்ற குறை தெரியாமல் தினம் ஒரு மணியாவது அவர்களுடன் பேசி தங்கள் கவலையை மறக்க இந்த சாதனம் தன் மாமி துணை. அவர்களுடன் பேசா விட்டால் எதையோ இழந்த மாதிரி இருக்கும். அதனால் தான் பக்கத்தில் இருப்பது போல் பேசிக் கொண்டு இருக்கோம் மாமி"
சொன்னதை கேட்டு மாமி நெகிழ்ந்து போனார்கள்
"சரி, சரி, நான் குறுக்கே நிற்கல,கிளம்பறேன் நீங்க பேசுங்க "
நாங்களும் பேரனின் விஷமங்களைக் காண உள்ளே போனோம்.

வெள்ளி, ஜூலை 22

கைகேயி நல்லது தான் செய்தாள் !!!






ராமனின் பாதுகைகள்
பரத்வாஜர் ஆசிரமம் நந்தி கிராமம்.



ராமர், சீதை, லக்ஷ்மணன், ஆஞ்சநேயர்
நைமிசாரண்யம்










கைகேயி நல்லது தான் செய்தாள்!!

தசரதனின் மனைவிகள் கௌசல்யா, கைகேயி, சுமந்திரை
ஆகிய மூவரும் ராமாயணத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள்
அதில் கௌசல்யா, ராமனின் தாயார் மிக நல்ல முறையில்
சித்தரிக்கப்பட்டுள்ளார்.

ராமாயணத்தில் ஒரு காட்சி

தசரதர் அமைச்சர்களைக் கூப்பிட்டு,"அமைச்சர்களே,நாளைய
தினம் ராம
னுக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள். ஊர்
மக்களுக்கு இந்த நல்ல விஷயத்தை சொல்லுங்கள் "
என ஆணையிடுகிறார். இதனைக் கேட்ட தசரதனின் மனைவிகள்
மகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஆனால் மகிழ்
ச்சி அடையாதவள் கூனி மட்டும்தான்.
சிறு வயதில் ராமன் செய்த சில விளையாட்டுக்கள் அவளைப்
புண்படுத்தி இருந்தன. அவைகளை நினைத்து சமயம்
வருவதற்காக காத்திருந்தாள்.
"அதுவும் ரா
மனுக்கு பட்டாபிஷேகம் செய்வதா?" "உடன் ஏதாவது செய்யவேண்டுமே?
கூனி மனதில் நினைத்துக் கொண்டே கைகேயியைப் பார்க்கச் சென்றாள்.
"கைகேயி,
ராமனுக்குப் பட்டாபிஷேகமாமே?, உனக்குத் தெரியுமா?"
"ஆம் கூனி ,மகிழ்ச்சியான செய்திதானே? என் மகனுக்கு பட்டாபிஷேகம்
எனக்கு மகிழ்ச்சி தராதா?"
"என்ன! உன் மகன் பரதனுக்கா பட்டாபிஷேகம்? ராமனுக்கு அல்லவா? எப்படி
நீ இதை ஏற்றுக் கொள்கிறாயோ?"
"நீ என்னால் சொல்ல வருகிறாய் கூனி ?"
"எப்படி என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்? ராமனுக்கு பட்டாபிஷேகம் ஆனா
பிறகு உன் மகன் எப்படி பட்டத்திற்கு வரமுடியும்? யோசனை செய்தாயா கைகேயி?"
என்று அஸ்
திரத்தை எடுத்து விட்டாள் கூனி.
சிறிது நேரம் யோசித்த கைகேயியும் , "ஆமாம், நீ சொல்வதும்
சரிதான், ராமன் அரசரானபிறகு என் மகன் பரதன் எப்படி பட்டத்திற்கு
வரமுடியும்? எல்லாம் முடிந்த பிறகு இனி நாம் என்ன செய்யமுடியும்?" என்று கூனியைப்
பார்த்து வினவினாள்.
"இப்போதும் ஒன்றும் முழுகிவிடவில்லை, அரசரிடம் நீ ஏற்கனவே
இரண்டு வரங்கள் வாங்கி
வைத்து இருக்கிறாய். அதற்கான சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது.
அதைப் பயன்படுத்தி அவரிடம் இரண்டு வரங்களைக் கேள்."
கூனி தன்னுடைய வேலையை சரியான தருணத்தில் ஆரம்பித்தாள்.
உடனே கைகேகியும் யோசிக்கத் தொடங்கினாள்.
அதற்குப் பிறகு நடந்தது எல்லாம் நமக்குத் தெரிந்ததுதான்.
இவற்றைப் பார்க்கும் போது கைகேயியை குலத்தைக் கெடுக்க வந்தவர் என்று தான் நம்பத் தோன்றும்.

ராமனும் தந்தை சொல்கேட்டு 14 வருடம் காட்டுக்கு கிளம்பினான்.
பெரியாழ்வார் தன்னுடைய எட்டாம் திருமொழியில்

"கூ ன் தொழுத்தை சிதகுரைப்பக்* கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு*
ஈன்றெடுத்த தாயரையும்*இராச்சியமும் ஆங்கோழிய*
கான் தொ"கூன் டுத்த நெறி போகிக் கண்டகரைக் கலைந்தானூர்*
தேன் தொடுத்த மலர்சோலைத்* திருவரங்கம் என்பதுவே."

இதனைப் மேற்கண்டவாறு பாடுகிறார்

இத்தனை விஷயங்கள் நடக்கும் போது பரதனும், சத்துருக்ணனும் அவனுடைய மாமா வீட்டிற்கு சென்று இருந்தனர். நடந்த விவரங்களைத் தெரிந்து கொண்ட பரதன் தாயை சந்திக்கிறான்.எவ்வளவு சமாதானம் செய்தாலும் கேட்காத பரதன், கடும் சொற்களை தாயின் மீது வீசிவிட்டு பட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து ராமனை .சந்திக்க காட்டுக்கு செல்கிறான்.
வழியில் குகனின் சந்தேகத்தை நீக்கிவிட்டு (குகன் பரதன் ராமனுடன் போராடத் தான் வருகிறான் என்று தவறாக நினைக்கிறான்) சித்திரக்கூடம் வந்து ராமனை சந்திக்கிறான்.அயோத்தியில் நடந்த (தந்தை வானுலுகம் சென்ற விபரம்) வற்றை எடுத்துக் கூறி உடனே ராமனை நாட்டிற்கு திரும்பி ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்ளும் படி மன்றாடுகிறான்.
ராமன், " பரதா, உன்னுடைய ஆதங்கம் எனக்குப் புரிகிறது.நம்முடைய தாய் நமக்கு இட்ட கட்டளை என்ன? ராமன் காட்டிற்கு போகவேண்டும் பரதன் நாட்டை ஆளவேண்டும்.என்பதுதானே? இதைத் தானே நமது தந்தையும் ஆணை இட்டார். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசைப்படி தாய் தந்தை சொல்வதைக் கேட்கவேண்டாமா? பாபம் நமக்கு வந்து சேராதா? பின்னால் வரும் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள். அதற்கு இடம் கொடுக்கலாமா ?நான் ஆண்டால் என்ன? பரதன் ஆண்டால் என்ன? என்ன பதினான்கு வ
ருடங்கள் தானே? நிமிடமாக ஓடிவிடும்."


சமாதானம் சொல்லி பரதனை அனுப்ப முயற்சிக்கிறான் ராமன்.
என்ன சமாதானம் சொல்லியும் கேட்காத பரதன்
முடிவில்,
"சரி, நீ வராவிட்டால் உனக்குப் பதிலாக இந்த பாதுகையை ஆசிர்வதித்துத் தா.
அதை உனக்குப் பதிலாக நாட்டை ஆளும் படி செய்கிறேன்" என்று கூறி
தான் கொண்டு வந்திருந்த பொன்னாலும் மணிகளாலும் இழைக்கப்பட்ட
பாதுகையை ராமனுக்கு முன்னாள் சமர்ப்பிக்கிறான்.
ராமனும் பாதுகையின் மீது ஏறி அதனைக் கடாட்சித்தான்.

ராமனின் பாதுகைகள் --நந்தி கிராமத்தில் உள்ளன.
பாதுகையை தனது சிரசின் மீது வைத்துக் கொண்டு, ராமனிடம் இருந்து பிரியா
விடை பெற்று பாரத்வாசர் ஆசிரமத்திற்கு வந்து பாதுகையை வைத்து
நந்திகிராமத்திலிருந்து ராமனின் சார்பாக 14 ஆண்டுகள் ஆட்சி செய்த பரதன்,
ஸ்ரீ ராம பாதுகைகளையே சிம்மாசனத்தில் ஏற்றிவைத்திருந்தான்.
முடிசூடுவதைவிட இறைவனின் அடிசூடுவது உயர்வானது என்பதை
பரதனின் செய்கை நமக்கு உணர்த்துகிறது

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்.

ஆஞ்சநேயர் சீதா தேவியைப் பார்க்க ராமன் தூதநாக இலங்கைக்கு வருகிறார்.
சீதையிடம் தன்னைப் பற்றியும், ராமர், சீதை இவர்களுக்கு இடையே நடந்த முக்கியமான அடையாளங்களையும் சொல்லி தான் ராமனின் தூதன் உணர வைக்கிறார்.

இதற்காக பெரியாழ்வார்

"நெரித்த கருங் குழல்மடவாய்!
நின்னடியேன் விண்ணப்பம்,
செரிந்தமணி முடிச்சனகன்
சிலையறுத்துநினைக் கொணர்ந்த
தறிந்து,அரசு களைகட்ட
அருந்தவர்த்தோ னிடைவிலங்க
செறிந்தசிலை கொடுதவத்தை சிதைத்ததுமோ ரடையாளம் "

என்று பத்துப் பாடல்கள் பாடியுள்ளார்

அப்போது வருத்தம் தோய்ந்த குரலில்,"ராமனுக்கும் எனக்கும் முடிக்கும் சமயம் நான் அவருடைய கையைப் பிடித்தேன். அதலால் நான் வனவாசம் செல்ல நேர்ந்தது.அப்படியல்லாமல் அவருடைய பாதத்தைப் பற்றி இருந்தால் இந்த நிலை எனக்கு வந்திருக்காது " என்று கூறுகிறாள் .
அதாவது இறைவனின் பாதத்தில் சரணாகதி அடைந்துவிட்டால் அவன் எப்பாடுபட்டாவது நம்மைக் காப்பாற்றுவான் என்பதை சீதையும் உணர்த்துகிறாள்.


பாதுகையின் பிரபாபம் பற்றி ஆச்சாரியார் தேசிகர் தன்னுடைய "பாதுகா சஹஸ்ரம் " என்ற நூலில் மிக அழகாக விளக்கியுள்ளார் இந்த ஆயிரம் பாடல்கள் கொண்ட நூலை ஒரு இரவுக்குள் எழுதி முடித்து அரங்கனுக்கு சமர்ப்பித்துள்ளார் என்றால் பாருங்கள்

த்ரமிடோபநிஷந் நிவேசசூந்யாந்
அபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யந்
த்ருவமாவிசதி ஸ்ம பாதுகாத்மா
சடகோப: ஸ்வயமேவ மாநநீய:

எல்லோரும் பெருமாளையடையவேண்டுமென்று
எண்ணங்கொண்டு நம்மாழ்வார் திருவாய்மொழி செய்தருளினார்.
அந்தத்திருவாய்மொழியையும் சிலர் நெட்டுருபண்ணுகிறதில்லை.
அவர்களும் பெருமாளையடைவதற்காக ஆழ்வார் பாதுகையாக அவதரித்தார்.
அதாவது எல்லோரும் பெருமாளையடைவதற்காக
ஸந்நிதிகளில் பாதுகையை எல்லோருக்கும் ஸாதிக்கிறார்கள்.
அதனால் பாதுகைக்கு சடகோபனென்று பெயர்


இந்த நூல் எழுதுவற்கு காரணமானது ராமன் வனவாசம் சென்றது தானே?
மேலும் ராமாயணத்தில் பரதனின் குணங்களை உலகுக்கு எடுத்துச் சொல்ல
இந்த இடம் முக்கியமானது இல்லையா?

இது மட்டுமா?

கைகேயி வரம் கேட்பதற்கு முதல் நாள்:

ராமனையும் சீதையும் தசரதர் பட்டம் சூட்டிக் கொள்வதற்கு முன்னால்
இறைவனை தரிசித்து விட்டு வரும் படி கூறுகிறார். ராமனுக்கு மனதிற்குள் கலக்கம்.
என்னடா, நாம் இந்த புவிக்கு வந்த காரணம் முடியாமலே போய்விடுமோ?
(ராவணனை அழிக்கத் தான் அவதாரம் எடுத்துள்ளார்.)
இதுவரை அதற்கான எந்த அறிகுறியும் காணோமே? என்று இறைவனிடம் மன்றாடுகிறார்.
நல்ல வேளை! கைகேயி வரம் கேட்டார்களோ! நாம் பிழைத்தோம்!இந்த புவி
பிழைத்தது! என்று ராமன் மகிழ்ந்தான்.
ஆக
ராமாயணம் எழுத,
ராவணன் அழிய
பரதனின் புகழ் வெளியே தெரிய,
பாதுகையின் பிரபாபம் உலகுக்குத் தெரிய
கைகேயி நல்லது தானே செய்துள்ளார்கள்

வியாழன், ஜூலை 14

வேலைக்காரி என்ன கதை சொன்னாள்?

வேலைக்காரியுடன் ஒரு உரையாடல் .

வேலைக்காரியைப் பார்த்து முதலாளி அம்மாள் "ஏம்மா, ஒழுங்காக பாத்திரங்களை தேய்க்கமாட்டியா? நேற்று
தேய்த்த பாத்திரங்களில் பலவற்றில் பருக்கை போகவில்லையே?" என்று கடிந்து கொண்டாள்.
" சும்மா இரும்மா". நான் என்னமோ மட்டும் தான் ஒழுங்காக பாத்திரம் தேய்க்கவில்லை என்று சொல்லாதே,
புராண காலத்திலேயே ஒழுங்காக பாத்திரம் தேய்க்காமல் இருந்திருக்கிறார்கள் தெரியுமா?"
என்று ஒரு புதிய குண்டை வீசினாள்.
"அது என்னடி? புதுசா ஒன்ன சொல்றே?" "புராண காலத்திலே யாரடி ஒழுங்காக பாத்திரம் தேய்க்காம இருந்தாக ?"
" அதல்லாம் இன்னைக்கு முடியாதம்மா , நாளைக்கு வந்து சொல்றேன் " என்று பதிலுக்கு காத்திராமல்
கிளம்பினாள்.
இரவு பூரா தூக்கம் வராமல் புரண்டு படுத்தபடியே வேலைக்காரி சொன்னது என்னவாக இருக்கும்
என்று யோசித்தபடியே வெகு நேரம் தூங்காமலேயே விழித்துப் படுத்திருந்தாள்
"எப்ப வருவாள்? எப்ப வருவாள்?" என்று வாசலையே பார்த்துக் கொண்டு இருந்த வீட்டு முதலாளி அம்மா,
வேலைக்கு வந்த பாத்திரம் தேய்க்கும் பெண்ணிடம் கேட்டமுதல் கேள்வி தான் அது.
வேலைக்காரி "என்ன அம்மா? ரொம்ப நேரமாக என்னய எதிர் பார்த்து காத்துண்டிருக்க போலருக்கு?"
"ஆமாம், ஆமாம், நேத்து ஒரு விஷயத்தை இன்னைக்கு சொல்றேன் என்று சொல்லி சஸ்பென்ஸ்
வைத்து விட்டு போனாயே?
எனக்கு அது என்ன தெரியாம தூக்கம்வரல தெரியுமா?"
"இரு அம்மா, வேலையை முடிச்சுட்டு வந்து சொல்றேன்."
"அதெல்லாம் அப்ரம் பாத்துகலாம், முத்ல்ல பாத்திரம் சரியா கழுவாததால் என்ன லாபம்? சொல்லு "
வேலைக் காரியை வேலை செய்ய விடாமல் நச்சரிக்கத் தொடங்கினாள்.
"அது ஒண்ணுமில்லைம்மா,பஞ்சபாண்டவங்க காட்டுல மறைஞ்சு வாழரப்ப,
அவங்க வீட்டுக்கு துர்வாச முனிவர் அவரோட கும்பலோட வந்தாராம்.
வந்தவரு சும்மா இல்லாம "நாங்கள்ளாம் ஆத்துல குளிச்சிட்டு வரோம்
எல்லாருக்கும் சாப்பாடு பண்ணி வை"ன்னு சொல்லிட்டு பதிலுக்கு காக்காம போயிடடாராம்.
தருமர், அவங்க தம்பிகளுக்கு கையும் ஒடல காலும் ஒடல. ஏன்னா அப்ப தான் அவங்க
எல்லாரும் அவங்ககிட்ட இருந்த அட்சய பாத்திரத்த பயன்படுத்தி சாப்பிட்டு
பாத்திரத்தை கழுவி கவித்து வச்சுருக்காங்க. ஒரு தடவை கவித்து வச்சான்னுனா மறுநா தான அதுல சோறு வருமாமே?"
துர்வாச முனிவருக்கும் அவங்க கும்பலுக்கும் எப்படி சாப்பாடு போடறது ?
அவங்க சாபத்துக்கு ஆளாக வேண்டியதுதான்
அப்படின்னு நினைச்சு வருத்தமாக எனன செய்யறது தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தாங்களாம்.
அந்த சமயம் பார்த்து கிருஷ்ணன் அங்க வந்தாராம். "என்ன அல்லாரும் சோகமா இருக்கிங்க?
வந்த எனக்கு ஒன்னும் கொடுக்கமாட்டிங்க்களா?"
சாப்பிட ஏதாச்சும் கொடுங்கன்னு" உசுப்பேத்தினாராம்.
உடனே தருமர் தங்க கஷ்ட்டத்தை எல்லாம் சொல்லி "துருவாசருக்கும் அவங்க கும்பலுக்கும்
எப்படி சாப்பாடு போடப்போரோம்னு தெரியலே இதுலே நீவேறே சாப்பாடு போடுங்கறே?"
கிருஷ்ணர் "கவலைப்படாதே தருமா, உன் மனைவியை கூப்பிட்டு அட்சய பாத்திரத்தில்
ஏதாவது சாப்பாடு இருக்கும் போய் கொண்டுவரச் சொல்லு" என்றாராம்.
விதியை நொந்து கொண்டு அட்சயப் பாத்திரத்தை எடுத்து வந்தார்கள்.
அதில் ஒரு பருக்கை சாதம் ஒட்டிக்கொண்டிருந்தது. அதை எடுத்து கிருஷ்ணர் வாயில் போட்டுக் கொண்டு
"எனக்குப் பசி தீர்ந்தது. இனி உங்கள் பாடு, துர்வாசர் பாடு. நான் போய் விட்டு வருகிறேன்"
என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.
தருமரும் துர்வாசர் வருவார் சாபம் கொடுக்கப் போகிறார் என்று நினைத்து கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.
அந்த சமயத்தில் துர்வாசருக்கும் சாப்பிட்ட ஏப்பம் வந்திட தருமரிடம் வந்து
"எங்களுக்கு பசி தீர்ந்துவிட்டது, நாங்கள் வருகிறோம்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினாங்க.
தருமருக்கும் அவங்க தம்பிகளுக்கும் ஆச்சர்யம் தாங்க முடியல.எப்படி வந்த அபாயம் எப்படியோ நீங்கித்தே? ன்னு
மகிழ்ச்சி அடைந்தாங்க.
"கண்ணன் ஒரு பருக்கை சாப்பிட்டது, உலகத்தில இருக்கிற எல்லோரும் சாப்பிட்டது மாதிரி இல்லையாம்மா?
அட்சயப் பாத்திரத்தை ஒழுங்கா அலம்பி ஒரு பருக்கை கூட இல்லாம தேய்த்து இருந்தா இப்ப நடந்த மாதிரி துர்வாசருக்கு பசி
தீர்ந்து இருக்குமாம்மா?"
அதுக்காகத் நான் பாத்திரத்தை ஒழுங்கா தேக்கலை, அப்படின்னு என்னண்டை கோபிக்காதிங்க, என்ன புரியுதா?"
முதலாளி இதை கேட்டு விக்கித்து நின்றாள்.

ஞாயிறு, ஜூன் 26

Munar, Kerala Slideshow

Munar, Kerala Slideshow: "TripAdvisor™ TripWow ★ Munar, Kerala Slideshow ★ to munar kerala india (near World). Stunning free travel slideshows on TripAdvisor"

வெள்ளி, ஜூன் 17

Pondicherry Slideshow

Pondicherry Slideshow: "TripAdvisorTripWowPondicherry Slideshow ★ to Pondicherry. Stunning free travel slideshows on TripAdvisor"

வெள்ளி, ஜனவரி 28

குழந்தையின் அழுகை

எதற்கு இவர்கள் அழுது ஆரப்பாட்டம் செய்கிறார்கள் தெரியுமா?
ஒன்றுமில்லை. முதலாக தங்கள் முடிவெட்டிக்கொளளும் போது தான் இத்தனை ஆர்ப்பாட்டமும் அழுகையும். இது நம்நாட்டில் மட்டும் அல்ல வெளிநாட்டு குழந்தைகூட அழுது ஆரப்பாட்டம் செய்வதைப்பாருங்கள்

AGANDA SAHASRANAMA PARAYANAM AT TIRUMALA ON 26-01-2011