வியாழன், ஜூலை 14

வேலைக்காரி என்ன கதை சொன்னாள்?

வேலைக்காரியுடன் ஒரு உரையாடல் .

வேலைக்காரியைப் பார்த்து முதலாளி அம்மாள் "ஏம்மா, ஒழுங்காக பாத்திரங்களை தேய்க்கமாட்டியா? நேற்று
தேய்த்த பாத்திரங்களில் பலவற்றில் பருக்கை போகவில்லையே?" என்று கடிந்து கொண்டாள்.
" சும்மா இரும்மா". நான் என்னமோ மட்டும் தான் ஒழுங்காக பாத்திரம் தேய்க்கவில்லை என்று சொல்லாதே,
புராண காலத்திலேயே ஒழுங்காக பாத்திரம் தேய்க்காமல் இருந்திருக்கிறார்கள் தெரியுமா?"
என்று ஒரு புதிய குண்டை வீசினாள்.
"அது என்னடி? புதுசா ஒன்ன சொல்றே?" "புராண காலத்திலே யாரடி ஒழுங்காக பாத்திரம் தேய்க்காம இருந்தாக ?"
" அதல்லாம் இன்னைக்கு முடியாதம்மா , நாளைக்கு வந்து சொல்றேன் " என்று பதிலுக்கு காத்திராமல்
கிளம்பினாள்.
இரவு பூரா தூக்கம் வராமல் புரண்டு படுத்தபடியே வேலைக்காரி சொன்னது என்னவாக இருக்கும்
என்று யோசித்தபடியே வெகு நேரம் தூங்காமலேயே விழித்துப் படுத்திருந்தாள்
"எப்ப வருவாள்? எப்ப வருவாள்?" என்று வாசலையே பார்த்துக் கொண்டு இருந்த வீட்டு முதலாளி அம்மா,
வேலைக்கு வந்த பாத்திரம் தேய்க்கும் பெண்ணிடம் கேட்டமுதல் கேள்வி தான் அது.
வேலைக்காரி "என்ன அம்மா? ரொம்ப நேரமாக என்னய எதிர் பார்த்து காத்துண்டிருக்க போலருக்கு?"
"ஆமாம், ஆமாம், நேத்து ஒரு விஷயத்தை இன்னைக்கு சொல்றேன் என்று சொல்லி சஸ்பென்ஸ்
வைத்து விட்டு போனாயே?
எனக்கு அது என்ன தெரியாம தூக்கம்வரல தெரியுமா?"
"இரு அம்மா, வேலையை முடிச்சுட்டு வந்து சொல்றேன்."
"அதெல்லாம் அப்ரம் பாத்துகலாம், முத்ல்ல பாத்திரம் சரியா கழுவாததால் என்ன லாபம்? சொல்லு "
வேலைக் காரியை வேலை செய்ய விடாமல் நச்சரிக்கத் தொடங்கினாள்.
"அது ஒண்ணுமில்லைம்மா,பஞ்சபாண்டவங்க காட்டுல மறைஞ்சு வாழரப்ப,
அவங்க வீட்டுக்கு துர்வாச முனிவர் அவரோட கும்பலோட வந்தாராம்.
வந்தவரு சும்மா இல்லாம "நாங்கள்ளாம் ஆத்துல குளிச்சிட்டு வரோம்
எல்லாருக்கும் சாப்பாடு பண்ணி வை"ன்னு சொல்லிட்டு பதிலுக்கு காக்காம போயிடடாராம்.
தருமர், அவங்க தம்பிகளுக்கு கையும் ஒடல காலும் ஒடல. ஏன்னா அப்ப தான் அவங்க
எல்லாரும் அவங்ககிட்ட இருந்த அட்சய பாத்திரத்த பயன்படுத்தி சாப்பிட்டு
பாத்திரத்தை கழுவி கவித்து வச்சுருக்காங்க. ஒரு தடவை கவித்து வச்சான்னுனா மறுநா தான அதுல சோறு வருமாமே?"
துர்வாச முனிவருக்கும் அவங்க கும்பலுக்கும் எப்படி சாப்பாடு போடறது ?
அவங்க சாபத்துக்கு ஆளாக வேண்டியதுதான்
அப்படின்னு நினைச்சு வருத்தமாக எனன செய்யறது தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்தாங்களாம்.
அந்த சமயம் பார்த்து கிருஷ்ணன் அங்க வந்தாராம். "என்ன அல்லாரும் சோகமா இருக்கிங்க?
வந்த எனக்கு ஒன்னும் கொடுக்கமாட்டிங்க்களா?"
சாப்பிட ஏதாச்சும் கொடுங்கன்னு" உசுப்பேத்தினாராம்.
உடனே தருமர் தங்க கஷ்ட்டத்தை எல்லாம் சொல்லி "துருவாசருக்கும் அவங்க கும்பலுக்கும்
எப்படி சாப்பாடு போடப்போரோம்னு தெரியலே இதுலே நீவேறே சாப்பாடு போடுங்கறே?"
கிருஷ்ணர் "கவலைப்படாதே தருமா, உன் மனைவியை கூப்பிட்டு அட்சய பாத்திரத்தில்
ஏதாவது சாப்பாடு இருக்கும் போய் கொண்டுவரச் சொல்லு" என்றாராம்.
விதியை நொந்து கொண்டு அட்சயப் பாத்திரத்தை எடுத்து வந்தார்கள்.
அதில் ஒரு பருக்கை சாதம் ஒட்டிக்கொண்டிருந்தது. அதை எடுத்து கிருஷ்ணர் வாயில் போட்டுக் கொண்டு
"எனக்குப் பசி தீர்ந்தது. இனி உங்கள் பாடு, துர்வாசர் பாடு. நான் போய் விட்டு வருகிறேன்"
என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.
தருமரும் துர்வாசர் வருவார் சாபம் கொடுக்கப் போகிறார் என்று நினைத்து கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.
அந்த சமயத்தில் துர்வாசருக்கும் சாப்பிட்ட ஏப்பம் வந்திட தருமரிடம் வந்து
"எங்களுக்கு பசி தீர்ந்துவிட்டது, நாங்கள் வருகிறோம்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினாங்க.
தருமருக்கும் அவங்க தம்பிகளுக்கும் ஆச்சர்யம் தாங்க முடியல.எப்படி வந்த அபாயம் எப்படியோ நீங்கித்தே? ன்னு
மகிழ்ச்சி அடைந்தாங்க.
"கண்ணன் ஒரு பருக்கை சாப்பிட்டது, உலகத்தில இருக்கிற எல்லோரும் சாப்பிட்டது மாதிரி இல்லையாம்மா?
அட்சயப் பாத்திரத்தை ஒழுங்கா அலம்பி ஒரு பருக்கை கூட இல்லாம தேய்த்து இருந்தா இப்ப நடந்த மாதிரி துர்வாசருக்கு பசி
தீர்ந்து இருக்குமாம்மா?"
அதுக்காகத் நான் பாத்திரத்தை ஒழுங்கா தேக்கலை, அப்படின்னு என்னண்டை கோபிக்காதிங்க, என்ன புரியுதா?"
முதலாளி இதை கேட்டு விக்கித்து நின்றாள்.

1 கருத்து: