புதன், ஆகஸ்ட் 17

ஆண்டாள் ஆடிப் பூர உற்சவம்

 

ஆண்டாள் சந்நிதி ஸ்ரீரங்கம்  கண்ணாடி அறை சேவை யில் பத்து நாட்கள் ஆடிப் பூர உற்சவம் நடைபெற்றதுஅந்தக்காட்சிகள்இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

புதன், ஆகஸ்ட் 3

விதி யாரை விட்டது ? எமன் ஏன் சிரித்தான்?

நண்பர் விதி, ஜோசியம், போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்.யார் சொன்னாலும் எதிர்த்து பேசுபவர்.விதியாவது ஒண்ணாவது? ஏன் தான் தான் ஜோச்யக்காரன் பின்னாலேயே எல்லாரும் போறாங்களோ? என்று ஜோச்யத்தை நம்புவர்களை இழிவாகப் பேசுவார். விதியை நம்மால் மாற்ற முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்.

அவரிடம் ஒருநாள் இந்தக் கதையை சொன்னேன்.

"ராமசாமி சார், உங்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அதே உங்கக்கிட்ட சொல்லாட்ட ஏன் மண்டையே வெடிச்சுடும் போல இருக்கு சார்."
" வாங்க சபேசன்.ஏன் , எதனாலே உங்க மண்டை உடையனும். விவரமாக சொல்லுங்க."
"ஒண்ணும் இல்லை, நான் வரபோது ஒருத்தர் ஒரு கதை சொன்னார். அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் உங்களிடம் சொல்லலாம் என நினைத்தேன், அதான்" என இழுத்தேன்
"அட என்னங்க சபேசன், இதெல்லாம் என்னிடம் கேட்கணுமா? சொல்லுங்க "
"ரெண்டு விஷயம் ஏன் காதுலே விழுத்தது. முதலா ஜோச்யத்தைப் பற்றியது.
அவனும் உங்களமாதிரி ஜோசியம் பொய் என்று நினைப்பவன். ஒரு நாள் ஜோச்யக்காரனிடம் போய் இன்னிக்கு எனக்கு நாள் எப்படி இருக்கும் என்று கேட்டான்? அவனும் கைரேகையப் பார்த்துட்டு இன்னிக்கு உனக்குப் பாயசம் கிடைக்கும். மகிழ்ச்சியாக இரு. அப்படின்னான்'
இவனுக்கு கோவமான கோவம். உங்க ஜோச்யத்தைப் பொய்யாக்கிறேன் பாருங்க.
நான் நாட்டுலே இருந்தாத்தானே. இப்பவே நான் காட்டுக்கு போறேன், அப்படின்னு சொல்லிட்டு காட்டுக்குக் கிளம்பிப் போய் ஒரு மரத்தின் மேல போய் உட்கார்ந்துகொண்டு எப்படி பாயசம் கிடைக்கும் பாப்போம், என்று பார்த்தான்.
அன்னிக்கு பார்த்து அஞ்சாறு திருடர்கள் யாரையாவது கொள்ளை அடிக்கலாம் என்று பார்த்து காட்டுக்குள்ள வந்துண்டிருந்தார்கள்.
மணப்பெண் நிறைய நகையோட சுற்றத்தார்கள் கூட அந்த வழியாக வராங்க.
பார்த்தார்கள் திருடர்கள். நல்ல வேட்டை.
"எல்லாத்தையும் கழட்டுங்க. உம் ஒடுங்க"
பயத்திலே எல்லாத்தையும் கழட்டிக் கொடுத்து விட்டு விட்டாப் பொறும் என்று ஓடி ஒளிஞ்சாங்க.


இதுலே நீண்ட நேரம் ஆனதாலே மணப்பெண் வீட்டார் கொண்டுவந்த சாமான்களை வைத்து, காட்டுலே உள்ள சுள்ளிகளைப் பொறுக்கி பாயசம் வைத்து சாப்பிடுவோம் என்று நினைத்து பாயசம் வைத்தார்கள்.
"கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலே
" என்பாங்களே, அதுபோல பாயசத்தைச் சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்ற சமயம் பார்த்து அந்த ஊர் ராஜா தன பரிவாரங்களோட அந்த பக்கமா
வராரு. "இது ஏதடா வம்பாப் போச்சு?" என்று எல்லா நகைகளையும், பாயசத்தையும் விட்டுவிட்டு "தப்பித்தோம் பிழைத்தோம்" ன்னு சொல்லிட்டு ஓட்டம எடுத்தார்கள்.

சிறிது நேரத்தில் அந்த இடத்துக்கு வந்த ராஜா நகை மற்றும் பாயசம் எல்லாத்தையும் பார்க்கிறார். சுற்றும் முற்றும் யாராவது இருக்கிறார்களா? என்று பார்க்கிறார்.
நம்ம ஆளு தான் இதை எல்லாத்தையும் மரத்து மேல் இருந்து பார்த்துக்கிட்டு
இருக்காரில்ல. அவரை நம்ம ராஜா பார்த்துட்டு "இதுக்கு எல்லாம் காரணம் இவன்தான்"
இவன்தான் பாயசத்திலே விஷத்தை வச்சுட்டு நம்ம சாப்பிட்டு இறந்த பிறகு
எல்லாத்தையும் சுருட்டிட்டு போகலாம் " என்று நினத்துக் கொண்டு உட்கார்ந்து
இருக்கிறான்.இவனை விடக்கூடாது என்று நினத்து " கீழே இறங்கு, இந்தப் பாயசத்தை நீ தானே செய்தாய்? நீயே சாப்பிடு." என்று அவனுக்கு ஆணையிட்டார். அவனும் நடந்ததையல்லாம் சொல்லியும் அரசன் கேட்காததால், அவனும் வேறு வழியின்றி சாப்பிட்டான்.
அப்போது நினைத்தான் ஜோஸ்யர் சொன்னது பலித்து விட்டதே
விதி யாரை விட்டது என்று தன்னையே நொந்து கொண்டான்.
இது முதல் சம்பவம்.

இரண்டாவதில் எமனை ஏமாற்றிய கதை.

எமதர்மன் அந்த வீட்டின் ஜன்னலில் அமர்ந்து நீண்ட நேரமாக, உள்ளே நடக்கும் சம்பாஷ்னையைக் கேட்டுக் கொண்டிருந்தான். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மனைவி கணவனிடம் "உங்களோடு இத்தனை நாள் குப்பை கொட்டி என்ன பிரயோஜனம்? ஒரு நல்ல புடவை உண்டா?
நகை நாட்டுத் தான் உண்டா? அடுத்த வீட்டைப் பாருங்கள்? அவனுடைய மனைவி தினம் ஒரு புடவை,வைர நகைகள் என்று மினுக்கிறாள்.நீங்களும் தான்?" என்று இடிக்காத குறையாக குறைப்பட்டுக் கொண்டிருந்தாள்.
கணவன் மனைவியிடம் " அதெல்லாம் சரிதான். அவன் எங்க வேலை பார்க்கிறான் தெரியுமா?
அவனுடைய சம்பளம் என்ன தெரியுமா? இதெல்லாம் தெரியாம இப்படிச் சொல்கிறாயே? நான் அதே மாதிரி சம்பாதித்தால் ஜெயிலுக்குத் தான் போகவேண்டும். பரவாயில்லையா?"
இப்படிப் சொல்லிக் கொண்டிருந்த கணவன் ஜன்னலைப் பார்த்தான். வாசலில் எமதர்மனைப் பார்த்தான்.
உடனே மனைவியிடம் "கொல்லைக் கதவைத் திற, வாசலில் எமதர்மன் எனக்காக நிற்கிறான் என நினைக்கிறேன். அவனுக்குத் தெரியாமல் ஓடி விடுகிறேன்"
என்று சொல்லி விட்டு கொல்லைப் புறமாக மூச்சிரைக்க ஓடினான்.
ஓடி, ஓடி ஒரு புளிய மரத்தின் அடியில் வந்து
ஆசுவாசப் படுத்திக் கொண்டான். எமனிடம் இருந்து தப்பித்தோம் என்று நினைத்தான்.
வாசலில் அமர்ந்து இருந்த எமன் உள்ளே சத்தம் இல்லாததால், கணவனைக் காணாமல்
அவனைத தேடி புளிய மரத்தடிக்கு வந்து சேர்ந்தான்.
கணவனுக்கு புளிய மரத்தடியில் எமனைப் பார்த்ததும் தேள் கொட்டியது போல் ஆகிவிட்டது.
எமன் கணவனைப் பார்த்து "ஹா! ஹா!" ஏன் வாய் விட்டு சிரித்தான்.
"எதுக்கு சிரிக்கிறாய்?"
"நல்ல வேளை, நீண்ட நேரமாக உனக்காகத் வீட்டில் காத்திருந்தேன். உன்னுடைய மரணம் இந்தப் புளியமரத்தின் அடியில் தான் ஏன் முன்னரே தீர்மானிக்கப் பட்டுள்ளது. நீயானால் வீட்டை விட்டு வெளியே வராமல் மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தாய்.வருவாயா, வராமல் போய்விடுவாயா? என்று கலங்கினேன். நல்லவேளை சரியாக புளிய மரத்தின்
அடிக்கு வந்தாய். உன் உயிரை எடுக்க வேண்டியது தான் பாக்கி" என்றான் எமன்.
கணவனுக்கு தன்னுடைய விதியை நினைத்து, மயங்கினான்!!!

சபேசன் சொன்ன கதையைக் கேட்டு ராமசாமி பதில் சொல்ல முடியாமல் விக்கித்து நின்றார்.

குழல் இனிது யாழ் இனிது


குழல் இனிது யாழ் இனிது.


"டே, சேர்லே ஏறாதேடா "
"தாத்தாவுக்கு ஹாய் சொல்லு"
"ஹாய்"
தாத்தாவுக்கு ஒரு பாட்டுப் பாடிக் காட்டு"
"........."
"ஒரே ஒரு தடவைடா "
"........."
":டே, என்னடா சாப்பிடுறே?" இது தாத்தா.
"ஹே"
"ஏய், என்னடி சொல்றான் அவன்" இது பாட்டி.
"காய் சாப்பிடுறானாம்", இது பெண்.
"என்னடி, பால் சாப்பிட்டாச்சா?"
"இல்லம்மா, பால் அப்பறம் தான் சாப்பிடுவான் அம்மா"
"நான் சமையல் பண்ணிட்டு வந்திடுறேன், கொஞ்ச நாழி பேரனைப் பார்த்திண்டுக்கியா அம்மா?"
"போ, நான் பார்த்துக்கிறேன்"
பேரனை வைத்த கண் வாங்காமல் தாத்தாவும் பாட்டியும் பார்த்துக் கொண்டிருந்தோம்
அவன் செய்யும் விஷமங்களை எத்தனை கொடுத்தாலும், எத்தனை நேரமானாலும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
கையில் கொடுத்த காயை (வேக வைத்த காய்கறி) ஸ்பூன் மூலம் லாகவமாக எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும் விதத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
எங்களுக்கு கொடு என்றால் உடனே ஸ்புனை எங்களுக்கு நேரே நீட்டுவான், நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்..
நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே சேரில் ஏறி உட்கார்ந்து கீழே விழுந்த விடுவான் போல் இருந்தது . உடனே, "ஏய், லக்ஷ்மி அவனைப் பாரடி, சேரில் இருந்து விழுந்து விடப் போகிறான்"
என்று நாங்கள் கத்தினோம் .
""அதெல்லாம் விழ மாட்டான் அம்மா", என்று என் பெண் சமையல் அறையில் இருந்து கவலைப்படாமல் பதில் சொன்னாள். என்ன இருந்தாலும் பதினெட்டு மாத குழந்தை. நமக்கு கவலையாக இருக்காதா?
"டே, பாட்டிக்கு ஒரு டான்ஸ் ஆடிக் காண்பி" என் பெண் சமையல் அறையில் இருந்து பேரனை டான்ஸ் ஆடச் சொன்னாள்.
"டி, டி, டி " என்று பேரன் கத்தினான்,
"இருடா வரேன்" என்று பெண் சொன்னாள்
டான்ஸ் பாடல் கொண்ட ஒரு வீடியோவைத்தான் ஆன பண்ணச் சொன்னான் போலிருக்கு.
வீடியோ பாடலை பெண் ஆன செய்தாள்.
பாட்டுக்கு ஏற்ற மாதிரி கையை இடுப்பில் வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் நகர்ந்து, உட்கார்ந்து எழுந்து ஆடின டான்ஸை இன்றைக்கு பூரா பார்த்துக் கொண்டிருக்கலாம். நேரம் போனதே தெரியவில்லை.
வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்டது. போய்த் திறந்தால் அடுத்தாத்து மாமி.
"வாங்கோ மாமி, என்ன விசேஷம்"
"என்ன உங்க பெண் பேரன் எல்லாம் எப்பஅமெரிக்காவில் இருந்து வந்தாங்க?"
'அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே? உங்களுக்குத் தெரியாம எப்படி வருவா மாமி?"
"பேரன், உங்க பெண் குரல் எல்லாம் கேட்டுதே?
பேரனை டான்ஸ் ஆடச் சொல்லக் கேட்டேனே?"
"உள்ள வாங்கோ, வந்து நீங்களும் அவன் டான்ஸ் ஆடறதைப் பாருங்கோ"
"ஏய்,ஸ்ரிஜித் ,பாக்கத்தாத்து பாட்டிக்கு ஒரு டான்ஸ் ஆடிக் காண்பிடா" என்று எங்கள்
மடிக்கணினிப் பார்த்துச் சொன்னேன்.
அதில் www.skype.com மூலம் என் பேரனுடன் பேசிக் கொண்டிருந்ததை மாமி பார்த்துப் பரவசமானார்கள்.
"இப்படி ஒரு வசதி இருக்கா தேவலையே. பேரன் பேத்தி, பெண் இவர்கள்
தூர தேசத்தில் இருந்தாலும் நேரில் பேசுவது போலவே இருக்கே, பரவாயில்லை"
"ஆமாம் மாமி, எங்களைப் போல ஒரு பெண், பையன் பெற்றவர்கள் தங்கள் குழந்தைகள் நல்லா இருக்கணும் என்று நினைத்து தூர தேசத்திற்கு அனுப்பி விட்டு அவர்கள் பக்கத்தில் இல்லை என்ற குறை தெரியாமல் தினம் ஒரு மணியாவது அவர்களுடன் பேசி தங்கள் கவலையை மறக்க இந்த சாதனம் தன் மாமி துணை. அவர்களுடன் பேசா விட்டால் எதையோ இழந்த மாதிரி இருக்கும். அதனால் தான் பக்கத்தில் இருப்பது போல் பேசிக் கொண்டு இருக்கோம் மாமி"
சொன்னதை கேட்டு மாமி நெகிழ்ந்து போனார்கள்
"சரி, சரி, நான் குறுக்கே நிற்கல,கிளம்பறேன் நீங்க பேசுங்க "
நாங்களும் பேரனின் விஷமங்களைக் காண உள்ளே போனோம்.