ஞாயிறு, நவம்பர் 27

கற்றலின் கேட்டல் நன்று!!!!!!

கற்றலின் கேட்டல் நன்று!!!!!

சொல்லுவது எளிது தான் நினைக்கத் தோன்றும்.எப்படின்னு கேட்கிறிர்களா/
"சொல்றேன், நமக்குத் தெரிந்ததைச் சொல்லிவிட்டுப் போயிடலாம் தானே?
ஒரு ஆசிரியர் இருக்கார், அவர் என்ன பண்றார்  தினம் வரார், மாணவர்களுக்கு
பாடம் எடுக்கிறார், கவலைப் படாமல் போகிறார்.
மாணவர்கள் அவர் சொல்வதை எல்லாம் நன்றாகக் கேட்டு, புரிந்து கொண்டு அதைப் பரிட்ஷையில் ஒழுங்காக எழுதினால் தான் அடுத்த வகுப்புக்குப் போகமுடிய்ம்.
ஆசிரியருக்கு இந்த பயம் எல்லாம் கிடையாதே?"
"இப்படித்தான் நான் படிக்கும் போது ஒரு ஆசிரியர் வகுப்புக் வருவார், எங்களையெல்லாம்  பார்த்து, "எலே பசங்களா, இந்தப் புஸ்தகத்தில் இருந்து ஒழுங்காக ஆளுக்கு ஒரு பாரா படியுங்க, வகுப்பு முடியும் போது மணி அடிச்சா என்னை எழுப்பி விடுங்கடா"
என்று சொல்லி விட்டு அவர் பாட்டுக்கு நாற்காலியில் உட்கார்ந்து தூங்க ஆரம்பிச்சு விடுவார்.
அதனாலே ஆசிரியர் உத்தியோகம் ரொம்ப சுலபம் இல்லையா?"
இப்படி யோசிக்கிறான் மாணவன்.
இதே கேள்வியை ஆசிரியர் எப்படிச் சொல்றார் பாருங்கள்.
" என்ன  சார், இப்படிச் சொல்லி விட்டிங்க, மாணவனுக்கு ஒழுங்காக, அவனுக்குப்  புரியும் படி,சொல்லிக் கொடுத்தால் தான் அவன் ஒழுங்காக எழுத முடியும். இல்லாட்டா  பாசாகமுடியுமா?
" ஆசிரியர் ஒரு மணி நேரம் பாடம் நடத்த, அவர் வீட்டில் பல மணி நேரம் பல
புத்தகங்களை படித்து விட்டு வந்தால்தான் நல்ல முறையில் நடத்த முடியும்.
அந்த ஆசிரியரைத் தான் நல்ல ஆசிரியர் என்று போற்றுவார்கள்.
"ஆசிரியர் பாடம் நடத்தும் போது எங்கேயாவது உட்கார்ந்து பாடம் நடத்துவதைப் பார்த்து உள்ளீர்களா? ஒரு மணி ஆனாலும், இரண்டு மணியானாலும் நின்று கொண்டுதானே  பாடம் நடத்த வேண்டும். மாணவனுக்கு அப்படியில்லை. அவன் எப்படியாவது, எங்காவது
பார்த்துக் உட்கார்ந்து கவனித்தால் போதும்."
"இப்படித்தான் ஒருநாள் நான் பாடம் நடத்தி விட்டு ஒரு மாணவனை எழுப்பி,
"என்ன, சுரேஷ், எல்லாம் நுழைந்ததா?" (அதாவது பாடம் எல்லாம் புரிந்ததா என்ற  அர்த்தத்தில்) என்று கேட்கிறேன். அவன் மெதுவாக எழுந்து, "இன்னும் வால் மட்டும்தான்  நுழையுனும்  சார்" என்றானே பார்க்கணும்.
"ஏனடா, நான் ஒண்ணு கேட்டால் நீ என்ன பதில் சொல்றே?" என்று கேட்டவுடன்,  பக்கத்தில் உள்ள பையன், "சார், அவன் கூறையைப் பார்த்துச் அங்குள்ள அணில்  உள்ளே நுழைவதைப் பார்த்துச் இன்னும் வால்மட்டும்தான் நுழைய வில்லை என்கிறான் சார்."
எப்படி இருக்கும் எனக்கு!!! இது தேவலாம், இங்கே பாருங்கள் இந்தப் பையனை,
"இப்படித்தான் ஒரு நாள் நான் பக்கத்து வீட்டு பையன் என்னவோ ஸ்லோஹம் சொல்லறான்  போய் "என்னடா சொல்லறே?, திருப்பிச் சொல்லுடா",ன்னு கேட்டா, ரொம்ப அழுத்திக் கேட்ட  பிறகு சொல்றான், "நித்தம் நித்தம் இந்த இழவா, வாத்தியார் சாவாரா?,வயத்தெரிச்சல் தீராதா?"
அப்படின்னு பாடறான் சார்." மாமா சொல்லிக் கொடுத்தார் என்கிறான்.
இந்த மாதிரிப் பையன்களைத் தேற்றி அடுத்த வகுப்புக்களுக்கு அனுப்புவது எவ்வளவு  சிரமம் பாருங்க.
அதனாலே "கேட்பது சுலபம். சொல்லறது கஷ்டம்",
அப்படிங்கறது ஆசிரியரைப் பொறுத்த மட்டில். இதுக்கே இப்படிச் சொல்லுறிங்களே?
ஒரு இடத்தில் உபன்யாசகர் பேசிக்கோண்டு இருக்கிறார், மற்றவர்கள் கேட்டுக் கொண்டு  இருக்கிறார்கள். எப்படி?
"சார், கொஞ்சம் தள்ளி உட்காருகிறீர்களா?
"என் சார்,"
"ஒண்ணுமில்லை, சுவத்தோட சாஞ்சு உட்காரலாமேன்னுதான்"
இப்படி கேட்பவர் வசதியாக உட்காரமுடியும். சொல்பவர் இப்படி சுவத்தோட சாஞ்சு  உட்கார்ந்துகொண்டு உபன்யாசம் செய்யமுடியுமா?
இதிகாசங்கள், புராணங்கள் இவற்றை எடுத்துக் கொள்வோம்.
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் யுத்தம் ஆரம்பிக்கப் போவதற்கு முன்னால்  என்னவாயிற்று? அர்ச்சுணன் யுத்தகளத்தில் போய் நின்று கொண்டு தன்னுடைய ஆசானுக்கு  எதிராக சண்டையிடுவதா?, அவர்களைக் கொல்வதா? என்று கலங்கி நின்ற போது, கிருஷ்ணன் என்ன செய்தான் பாருங்கள்.
ஷத்த்ரியன் நியதி என்ன, அவன் என்ன செய்யவேண்டும் என்று அவனுக்கு எழுநூறு  ஸ்லோகங்கள் கொண்ட கீதையை உபதேசித்தான். அங்கு கிருஷ்ணன் தேர்பாகனாக  இருந்து ஆசிரியர் ஸ்தானத்தில் உபதேசித்தான். கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம்  என்று எல்லாவற்றையும் உபதேசித்தான். யார் கேட்டார்கள்? அதை பின்தொடர்வது அவ்வாவு
எளிதா?
மக்கள் யாரும் கேட்க மாட்டார்கள் என்று அவனே பத்தாவது நாள், தருமபுத்திரர்  மற்றும்  எல்லோருடனும் சேர்ந்து கொண்டு பீஷ்மரிடம், "எந்த தெய்வத்தை வணங்குவது? எப்படி வணங்குவது?" போன்ற கேள்விகளுக்கு,பீஷ்மர் பதில் கூறியதை கிருஷ்ணன் கூட அமர்ந்து கேட்டான் இல்லையா?
அதாவது கண்ணன் "சொன்ன" கீதையை விட, பீஷ்மர் "சொல்ல, கண்ணன் கேட்ட"  சஹஸ்ரநாமத்திற்கு அதிக மதிப்பு இல்லையா? நாமும் தினமும் கீதை பாராயணம்  செய்வதில்லை, ஆனால் சஹஸ்ரநாமம் தினம் பாராயணம் செய்கிறோம். எனவே கேட்பது எளிதுதான், சொல்வதைவிட!!!`
எது எப்படியானாலும் பெரியோர் வாக்குப்படி "கற்றலின் கேட்டல் நன்று", என்றும் "யார் என்ன சொன்னாலும் அதனைப் பகுத்து, அதில் உள்ள உண்மைகளை அறிந்து அதன்படி  நடப்பது சாலச் சிறந்தது இல்லையா?

புதன், நவம்பர் 9

வடமதுரா என்னும் மதுரா

வடமதுரை என்னும் மதுரா

. "மதுரா நாம நகரி புண்யா பாபஹரி சுபா"
என்னும் புராண ஸ்லோஹத்தின் படி மதுரா நகரம் பாபங்களைத் தொலைத்து புண்ணியத்தை தரக்கூடியதாகவும்,மங்கலங்களுக்கு இருப்பிடமாகவும் உள்ள ஊர் ஆகும். இதுவே கண்ணனின் பிறப்பிடமாகும்

இந்நகரம் யுகம்தொரும் பாகவத சம்மந்தம் பெற்ற ஊர் என்கிறார்கள். க்ருத யாகத்தில் துருவன் யமுனைக்கரையில் தவம புரிந்து பகவானை தரிசித்தான். த்ரேதா யுகத்தில் இதே ஊரில் லவனாசுரன் என்ற அரக்கனைக்கொன்று சத்துருக்க்ணன் மதுரா எனப் பெயரிட்டு ஆண்டு வந்தான் என குலசேகர ஆழ்வார் தனது பெருமாள் திருமொழியில் கூறுகிறார்.

ஏழு முக்தி தரும் ஷேத்திரங்களில்

அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா
புரித்வாரவதீ சைவ ஸப்ஸத்தா மோக்ஷதாயகா ......

என்று ,கொண்டாடப்படும் ஊர்  மதுரா நகரமாகும்.

பெரியாழ்வார், தனது திருமொழியில்

வடதிசை மதுரை சாளக்கிராமம்
வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய
எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
தலைப்ற்றிக் கரைமரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்
கண்டமென்னும் கடிநகரே.

ஆண்டாள் தன்னுடைய நாச்சியார் திருமொழியில்,

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழி நான்

அன்று மதுரை மன்னனைப் பற்றி கூறுகிறார்.

நம்மாழ்வார் தன்னுடைய திருவாய்மொழியில்

மண்ணின் பாரம் நீக்குவதற்கு வடமதுரையில் கண்ணன் வந்து பிறந்தான், கண்ணன் அல்லால் மற்றொரு தெய்வம் இல்லை என்று உணருவீர், அவனைச் சரண் அடைந்து உய்ம்மின்
என்று, கூறு கிறார்.
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான் திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்ந்து உய்ம்மினோ எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்றில்லையே மதன ஆதார பூமி அன்று, கடைவதற்கு ஆதாரமாக இருந்த பூமி, அதாவது ப்ருது மகராஜன் இந்த இடத்தில் புமாதேவியிடம் இருந்து மக்கள் வாழ்வதற்கு வேண்டிய சிறந்த பொருட்களையெல்லாம் கடைந்து எடுத்தபடியால் இந்த இடம் மதுரா என்று பெயர் பெற்றதாம்.
மதுராவில் வசித்தாலும், கண்ணன் இங்கு பிறந்தான் என்று நினைத்தாலும், வசுதேவரின் காலில் இருந்த விலங்குகள் உடைந்தால் போல் நம் பாவங்கள் விலகி போகுமாம்.
ஆதாரம்:
திவ்யதேச மாஹாத்ம்யம்--- தொகுத்தவர்; வேளுக்குடி ஸ்ரீ உ.வே.க்ருஷ்ணன் ஸ்வாமிகள். மூன்றாம் பதிப்பு, கிஞ்சித்காரம் டிரஸ்ட், 6, பீமசேனா கார்டன் தெரு, மயிலாப்பூர், சென்னை-4.
கண்ணன் பிறந்த இடத்தையும் மற்றும் மதுராவில் கண்ணனுக்கு வேண்டிய இடங்களையும் காண்போம்.
                    க்ருஷ்ண ஜன்ம பூமி யின்  முகப்பு

1. ஸ்ரீகிருஷ்ண ஜன்ம பூமி.
கம்சனின் அரண்மனையில் ஒருகாட்சி::
தேவகிக்கும் வசுதேவருக்கும் மாங்கல்யதாரணம் நடத்துவது என்று கம்சன் தீர்மானிக்கிறான். உரிய நாளில் திருமணம் செய்து அவர்களை ரதத்தில் ஏற்றி பாசத்துடன் வழியனுப்ப தயாராகிறான். அந்த சமயம், வானத்தில்
"கம்சா, தேவகிக்கும், வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது மகன் உனக்கு எமன்"
என்று அசரரி கேட்கிறது. கம்சன் திடுக்கிட்டு சுற்று முற்றும் பார்த்துவிட்டு வழியனுப்புவதை நிறுத்திவிட்டு,
"இவர்கள் இருவரையும் உடனே கொல்லுங்கள்"
என தனது ஆட்களுக்கு ஆணை இடுகிறான். அதிர்ச்சி அடைந்த வசுதேவர், கம்சனிடம்,
" கம்சா,எங்களுக்கு பிறக்கும் எட்டாவது மகன் தானே உனக்கு எமன். நாங்கள் என்ன பாவம் செய்தோம்.எங்களுக்கு பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் உன்னிடம் கொடுத்து விடுகிறோம். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். எங்களைக் கொன்று அந்தப் பாவத்தை வேறு நீ ஏன் பெறவேண்டும்", என்று பலவாறு அவனுக்கு அறிவுரை சொல்கிறார். ஒருவாறு சமாதானம் அடைந்த கம்சன்,
"இவர்கள் சொல்வதும் சரிதான். "இவர்களை சிறையிலடையுங்கள். இவர்களுக்கு தக்க பாதுகாப்புப் போடுங்கள்.இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை என்னிடம் கொண்டு வந்து கொடுக்கவேண்டும்",
என்று தனது ஆட்களுக்கு ஆணையிடுகிறான்.
நாட்கள் சென்றன. தேவகியும் கருவுற்றாள்.குழந்தை பிறந்த செய்தி கேட்டு,கம்சனும் அந்தக் குழந்தையை உடன் பெற்று கொன்றான்.இது மாதிரி ஆறு குழ்ந்தைகளிக் கம்சன் தொடர்ச்சியாகக் கொன்றான். தேவகி ஏழாவது கர்ப்பம் தரித்தாள்.அந்த சமயத்த்தில் விஷ்ணு பகவான் தன் யோகமாயையை கூப்பிட்டு
"ரோகிணி கோகுலத்தில் வாழ்கிறாள். நீ தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை வெளியே இழுத்துக்கொண்டு போய் ரோஹினியின் கர்ப்பத்தில் வைத்து விடு. தேவகிக்கு கர்ப்பச் சிதைவு என்று கம்சனிடம் சொல்லிவிடுவார்கள்"
என்று ஆணையிடுகிறான். இந்தக் குழந்தைதான் பலராமன்.
"மேலும் நீ போய் கோகுலத்தில் யசோதையின் கர்ப்பத்தில் பெண் குழந்தையாக பிற.நான் தேவகியின் எட்டாவது மகனாக மதுரையில் பிறந்து, என்னை வசுதேவர் யமுனையைத் தாண்டி கோகுலத்தில் கொண்டு விட்டு, உன்னை எடுத்துக் கொண்டு வந்து கம்சனிடம் எட்டாவது குழந்தையாகக் கொடுப்பார்.உன்னைக் கம்சன் கொள்ள முற்படும்போது நீ நடந்ததைச் சொல்லி விட்டு மறைந்து விடு",
என்று ஆணை இடுகிறார்.
அந்தக் கண்ணன் அவதரித்த சிறைச்சாலை. இங்கேதான் வசுதேவரும்,தேவகியும்அடைக்கப்பட்டு இருந்தார்கள். இங்கு தான் எட்டாவது குழந்தையாக கண்ணன், தந்தையின் காலில் விலங்குகள் அவிழ, நான்கு தோள்களோட சகல ஆயுதங்களுடன்,ஆபரங்களுடன் பிறந்தான்.தனது ஜன்ம ரகசியத்தை பெற்றோர்களுக்கு வெளியிட்டு பின்னர் அதை மறக்கும்படி செய்தான்.எனவே வசுதேவர் கண்ணனைக் கொண்டுபோய் கோகுலத்தில் யசோதைக்கு அருகில் விட்டுவிட்டு அவளுக்கு பிறந்த பெண் குழந்தையை சிறைச்சாலைக்கு அடுத்துச் சென்றார்.
இவைகள் நடந்த இடம்தான் நாம் பார்க்கும் சிறைச்சாலை. புராதனமான கோயில் கண்ணனின் கொள்ளுப் பேரன் வஜ்ரனாபன் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது. பல படை எடுப்புக்களால் தற்போது உள்ள நிலையில் உள்ளது. பக்கத்திலேயே முகமதியர்களின் மஸூதி உள்ளதால் பாதுகாப்பு அதிகம் உள்ளது.கைபேசி,காமிராக்களைக் கொண்டு போகவேண்டாம்.

2.கேசவ்சி மந்திர்:

ஜன்ம பூமிக்கு அருகில் உள்ளது.புராதனமான கோயில்.கம்சனின் சிறை முன்னொரு காலத்தில் இங்கு வரை இருந்ததாகச் சொல்வார்கள்.இங்குள்ள மூர்த்தியை 24 அலங்காரகளாலும் அலங்கரித்து உள்ளார்கள்.மேலும் தேவகியும் வசுதேவரும் வணங்கிய மூர்த்தியாகும்.

                                   போதரா குண்டம் 
3.போத்ரா குண்டம்:
ஜன்ம பூமிக்கு அருகில் மிக அழகான குளம்."பவித்ர குண்டம்" என்ற சொல் மருவி "போத்ரா குண்டம்" என்று அழைக்கப்படுகிறது. சிறைச்சாலையில் உள்ளபோது,வசுதேவரும்,தேவகியும் நீராடி துணி துவைப்பார்களாம்.
4.கம்சா டீலா ,ரங்கா பூமி:
அஞ்சலகத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இங்கு தான் கண்ணன் முஷ்டிக மற்றும் சாணுரர்களை சண்டை இட்ட இடம்.இங்கே இருந்த குன்றின்மேல் அமர்ந்து இருந்த கம்சனையும் கீழே தள்ளி கொன்றானாம்.

                                                    ஆதி  வராஹ முர்த்தி
5.ஆதிவராஹ மூர்த்தி:
முன்னொரு காலத்தில் மதுரா வராஹ ஷேத்திரமாக இருந்ததாம் அயோத்திலிருந்து சத்ருக்க்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.
6.த்வாரகா தீசன் சந்நிதி:
த்வாரகா தீசன் சந்நிதி ,விஸ்ராம் காட், த்ருவ டீலா ஆகியவை யமுனை நதிக்ரைக்கு அருகாமையில் உள்ளன. எனவே வாகனத்தில் சென்று பார்ப்பவர்கள் வாகனத்தை பெங்கால் காட் அருகே நிறுத்தி வைத்துக் கொண்டு தரிசிப்பது நலம். த்வாரகா தீசன் சந்நிதி 150 ஆண்டுகளுக்கு முன்னர் வல்லபாசார்யா சம்பிரதாயத்தில் கட்டப்பட்டது. ருக்மிணி சத்யபாமா சமேத கணணன் எழுந்தருளி உள்ளான்.
                                          
                                                          விஸ்ராம் காட் மதுரா
7.விஸ்ராம் காட்:
கண்ணன் கம்சனை முடித்து அவனுடைய அந்திமகிரியைகளை "த்ருவ காட்டில்" செய்து விட்டு நீராடி ஓய்வேடுத்தான் என்பர்.இது 24 தீர்த்தங்களுள் முக்கியமானது ஆகும்.யமுனைக் கரையில் உள்ளது கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷத்விதீயை "யமத்விதீயை", அன்று இங்கு நீராடினால் சம்சாரத்தில் இருந்து ஒய்வு கிடைக்குமாம்.
8.த்ருவ டீலா:
யமுனையின் மற்றொரு கரையில் உள்ள இந்த இடத்தில் துருவன் தவம் செய்து பகவானைக் கண்டான்.பாதை சரியில்லாமல் உள்ளதால், இதனை விஸ்ராம் காட்டில் இருந்தே சேவித்துக் கொள்ளவேண்டும்.
                                                               தாள வனம்  மதுரா 
9.தாள வனம்:
மதுரைக்குத் தெற்கே 6 மைல் தொலைவில் உள்ளது.இங்கு பலராமன் கோயிலும் குண்டமும் உள்ளன. 10.மது வனம்: மதுரைக்கு தென்மேற்கே உள்ளது. இங்கு மது என்ற அசூரனைக் கொன்றதால் மதுவனம் எனப்பட்டது இதைத் தவிர இன்னும் பல இடங்கள் பாதை சரியில்லாமல் இருக்கின்றன.

https://www.cx.com/mycx/share/CDpB9gqmEeGgJBICOBubSA/krishna%20anubav%20yaathra.msdvd

இவைகளைப் பற்றிய விளக்கங்களை வேளுக்குடி ஸ்ரீ உ.வே. க்ருஷ்ணன் சுவாமிகளின் உரையில் கேட்கலாம். அந்த உரையின் ஒலி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, நவம்பர் 6

ஸ்ரீமத் பாகவத க்ருஷ்ணானுபவ யாத்ரை

ஸ்ரீமத் பாகவத க்ருஷ்ணானுபவ யாத்ரை.

அக்டோபர் 9 முதல் அக்டோபர் 15ம் தேதி வரை வேளுக்குடி ஸ்ரீ.உ.வே.க்ருஷ்ணன் ஸ்வாமிகள்  மதுரா, பிருந்தாவனம், கோகுலம், கோவர்த்தனம்,காம்யவனம், பர்சானா மற்றும் நந்த்காவ்
போன்ற கண்ணன் பிறந்து வளர்ந்து,விளையாடிய, சேஷ்டிதங்கள் செய்த இடங்களுக்கு சுமார்  ஏழாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்களை அழைத்துக் கொண்டு , பிருந்தாவனத்தில்  ஏழு நாட்கள் ஸ்ரீமத் பாகவத உபன்யாசத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார்.அந்த வைபவத்தில்
கலந்து கொள்ளும் பாக்கியம் நாங்களும் பெற்றோம்.
முற்பிறவியில் செய்த புண்ணியமோ என்னவோ,எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் சொன்னமாதிரி,இந்த யாத்திரையின் குறிகோளாக கிருஷ்ண பக்தியை வளர்த்துக்  கொள்ளுதல்,அவன் கதைகளை ஒருவருக்கு ஒருவர் பேசி இன்புறுதல், பக்தர்களோடு கூடி  விட்டுக்கொடுத்து க்ருஷ்ண பக்தியால் ஓர் குடும்பமாக இருத்தல் என்ற ஏதேனும் ஒரு
தன்மையை வளர்த்துக் கொள்ள இந்த யாத்திரை உதவியது என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆழ்வார்கள் தங்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பாடியபடி, கண்ணன் செய்த  விளையாட்டுக்களை ஏதோ நாங்களே அந்த சமயத்தில் அவனுடன் கூட இருந்து பார்த்தது  போல எங்களுக்கு சந்தர்ப்பம் அருளுயிய சுவாமிகளுக்கு எங்கள் பாதாரவிந்தங்களை  சமர்ப்பிக்கின்றோம்.
புண்ய நதியான யமுனைக்கு இருகரையிலும் தில்லிக்கு சுமார் 100மைல் தெற்கே விரிந்துள்ளது  வ்ரஜ பூமி ஆகும்.
வடமொழியில் 'வ்ரஜதி' என்றால் 'செல்லுதல்' அல்லது ;திரிதல்' என்று பெயராம். எங்கு மாடு கன்றுகளும் ஆயர்களும் திரிந்தார்களோ அந்த இடத்திற்கு 'வ்ரஜ பூமி' அன்று பெயர் ஏற்பட்டது. உலகத்தை உய்விக்க ஸ்ரீமந்நாராயணன் கண்ணனாக அவதரிக்க வ்ரஜ பூமியைத் தேர்ந்தெடுத்தான்.
சுமார் 168 மைல் சுற்றளவு கொண்ட வ்ரஜ பூமியின் பெரும்பகுதி   உத்திரப்பிரதேசத்திலும் மற்றும்  சிறிதளவு பகுதி ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் உள்ளது. கண்ணன் பிறந்த இடம் மதுரா, வளர்ந்த இடம் கோகுலம், நந்தக்ராமம்,பல சேஷ்டிதங்கள்  செய்த ப்ருந்தாவனம், கோவர்த்தனம்,பர்சானா மற்றும் காம்யவனம் ஆகியவற்றைப் பற்றித் தனித்தனியாக  அதன் சிறப்பையும் பின்வரும் பகுதிகளில் காண்போம்.
இந்த ஷேத்திரங்கள் பற்றிய  வேளுக்குடி ஸ்ரீ.உ.வே.கிருஷ்ணன்  சுவாமிகளின்
முகப்புரையின்  ஒலிப்பகுதி தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது.