வெள்ளி, ஜூன் 8

எங்க ஊர்!!!!

எங்க ஊர்!!!! பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள்?  ,
விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் என்பது அர்ச்சை நிலை,
திருபாற்கடல் ஒரு நிலை, மண்மீது உழல்வாய் என்று அவதாரங்கள் நிலை,
இவற்றுள் எங்கும் மறைந்து உழல்வாய் என்ற அந்தர்யாமி நிலை. இந்த ஐந்து நிலைகளில்  எளிமையான் நிலை அர்ச்சாவதாரம் என்ற அர்ச்சை நிலை. என்னன்னு கேட்கிறிங்களா?
பாருங்க, வைகுந்த பெருமானைப் போய் உடனே பார்த்துவிட்டு வரமுடியுமா?
யாரை வேணா கேளுங்க,108 திவ்ய தேசத்தை பார்த்தாச்சா, அப்படின்னு?
வைகுந்தம், திருபாற்கடல் இவற்றைப் பார்த்தாச்சா?-ன்னு கேளுங்க. என்ன பதில் வரும்?
வராது!!!
வைகுந்தம் போய் விட்டு வந்து
   "நாம் வைகுந்தம் போய்விட்டு வைத்தேன், நீங்க பார்த்தாச்சா?"
என்று சொல்ல முயுமா? அதுசரி, திருபாற்கடலைப் போய், பெருமாளைப் பார்த்துவிட்டு  பாற்கடலில் நீந்திவிட்டு வந்தேன்னு சொன்னா யார் நம்புவாங்க.
அந்த இரு நிலைகளும் இந்த உடலோடு போய் பார்க்க முடியாதுன்னு
எல்லாருக்கும் தெரியும். அதுசரிய்யா ராமன், கண்ணன், போன்ற அவதாரங்களை பார்த்தேன்னு சொன்ன, நாம என்ன கேட்போம், "என்ன சினிமா பார்த்தியா?"
அப்படின்னு தானே கேட்கத் தோன்றும். இல்லையா பின்னே? அவதாரங்கள் எல்லாம்  நம்ம காலத்திலேயா நடந்தது? காலத்தால் போகமுடியாத நிலைகள் அவை  என்ன அவதாரங்கள் நடந்த இடமான அயோத்தி, மதுரா, துவாரகா போன்ற  இடங்களைப் போய் பார்த்து அனுபவித்து விட்டு வந்து மகிழலாம்.
"நான் பெருமானை நேத்தி ஏன் கனவுல வந்தார்" என்றும், நமக்குள்ளே
உள்ளார் என்று சொல்லமுடியுமா? ஆழ்வார்கள் எல்லாம் தான் ஏன் மனதுக்குள் பெருமான்  வந்தார் என்று சொல்ல முடியுமே தவிர, நம்மைப் போல் உள்ளவர்கள், ஏழைகள்
 "இன்னிக்கு என்ன சமையல் பண்ணே? என்ன நகை வாங்கினே?" என்று சொல்ல  முடியுமே தவிர பெருமாள் நமக்குள்ளே உள்ளார் என்று சொன்னால் யாரும் நம்பாட்டார்கள்.
இப்படி பெருமானின் ஐந்து நிலைகளில், நான்கு நிலைகள் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலைகள்.
அப்ப ஜந்தாவதான நிலை அர்ச்சாவதார நிலை தான் நமக்கு ஏத்த நிலை.
திருமங்கைஆழ்வார் சொல்றாராம், ஜீவன் இந்த உடலோட வைகுந்தத்துக்கு
போகமுடியாதாம், அது இந்த நாட்டிலேயே இல்லை, போனா திரும்பி வரமுடியாதாம்,
இப்படி இருக்கும் போது தரையில் கிடக்கும் முயல் மாமிசத்தை விட்டு, ஆகாயத்திலே  போற காக்கை மாமிசத்துக்க்கு ஆசைப் படுவது போல இருக்குன்னு சொல்றார். முயல் மாமிசம் என்பது அர்ச்சையாம், காக்கை மாமிசம் என்பது வைகுந்த்தமாம்.
அப்படி பெருமை கொண்டது அர்ச்சாவதாரம் என்கிற விக்கிரஹ ருபத்தில் நிலை.
ஆம், அப்படிப் பெருமை கொண்டவர் தான் எங்கள் ஊர் லக்ஷ்மி நாராயணன் பெருமாள்.



பெருமாள் கோயில்

லக்ஷ்மியை தனது இடப்பக்கத்தில் ஏந்திக் கொண்டு பக்தர்களை ரக்ஷித்துக் கொண்டிருக்கிறார்.
இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். சிறிய வடிவம் கொண்டவர் தான்  எங்கள் ஊரில் குடி கொண்டிருக்கும் லக்ஷ்மி நாராயணன்.
ஆனால் கீர்த்தி  அதிகம் கொண்டவர். கேட்டதெல்லாம் அருளுபவர். ஏன் கேட்காமலேயே கூட  கொடுக்கக்கூடியவர் தான். அவரை ஒரு தடவை பார்த்து உங்கள அபிலாஷைகளை சொல்லி விட்டு வாருங்கள், பின்னர் பாருங்கள் உங்கள் வாழ்க்கை எப்படிச் செல்கிறது என்று.
அதோட மட்டும் இல்லை, ஆஞ்சநேயருக்கும் கோயில் இருக்கு. பெருமாள் கோயில்  குளத்தின் கரையில் எல்லாருக்கும் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
 அனுமார் கோவில்

சிவன்கோவில்

சிவன்கோவில்
இதைத் தவிர சிவன் கோயில் ஒன்றும் உள்ளது. அதுவும் குளத்தின் தென்கரையில் உள்ளது.
அது சரிய்யா, உங்கள் ஊர் எங்கே இருக்குன்னு கேட்பது, காதுலே விழுது.

ஹிரன்யகசிபுவை கொல்வதற்கு எல்லாரும் கூடிப் பேசினாங்களே,

ராமானுஜர் திருமந்திரத்தை தான் உயிர் போனாலும் பரவாயில்லை, மற்ற எல்லாரும் உய்ய வேண்டி கோபுரத்தின் உச்சியிலே நின்னு "ஓம் நமோ நாராயணாய" என்று சொன்ன,

பெரியாழ்வார் கிருஷ்ணன் இந்த ஊரில் தான் பிறந்தான் என்று எண்ணிக் கொண்டு "வண்ண மாடங்கள் சூழ்" என்று திருப்பல்லாண்டு பாடிய, திருக்கோஷ்டியூர் அருகிலும்,

பிள்ளையாருக்கு உகந்த கோயில் கொண்டிருக்கும் பிள்ளையாற்பட்டிக்கு அருகிலும்,

ஆகிய இரண்டுக்கும் நடுவில் உள்ளதுதான் எங்கள் ஊர்.

                    " வண்டினம் முரலும் சோலை, மயிலினம் ஆளும் சோலை
              கொண்டால் மீதனவும் சோலை,குயிலினம் கூவும் சோலை"

குயில்களும் மயில்களும் துள்ளி விளையாடும் இடமா? உங்கள் ஊர்?
வண்டுகள் ரீங்காரம்செய்யும் இடமா? கெண்டை மீன் துள்ளி விளையாடும் ஆறுகள் பாயும் இடமா?
அப்படியும் இருக்குமோ, இப்படியும் இருக்குமோ? என்று கற்பனையில் நினைக்காதிர்கள்!!
வறண்ட செம்மண பூமி, மழை பெய்தால் தான் புல் பூண்டுகள் முளைக்கலாமா என்று நினைக்கும் இடம். ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து, வானம் இருண்டால் வாழ உலகினில் பெய்தால்தான் அங்கு உள்ளவர்கள் வாழ்வு மலர முடியும்.
அப்படிப்பட்ட ஊர் தான் எங்க ஊர் நெடுமரம். என்ன மரமெல்லாம் பெரிசா வளந்திருக்குமோ?
அப்படின்னு கேட்கிறிங்களா?
அதெல்லாம் ஓண்னுமில்லைங்க, ஏதோ பேர் வச்சுட்டாங்க நெடுமரம்ன்னு, அவ்வளவுதாங்க.
அப்படிப்பட்ட ஊர்ப்பத்தி சொல்லணும்.
எங்க அப்பாவுக்கு பெரிய சம்பளம்ன்னு என்னும் அப்ப கிடையாது, அதனாலே
மூத்த பிள்ளையான நான் படிக்க!!!! முதல்லே போன பள்ளிக்கூடம், இப்ப எப்படி மாறி இருக்கு பாருங்க. என்ன ஆச்சர்யக்குறி நிறையப் போட்டிருக்குன்னு பார்க்கிறிங்களா?


ஆமா,அந்தப் பள்ளிக்கூடத்திலேயே முழுசா ஒரு வருஷம் படிச்சிருப்பேனான்னு எங்க அம்மாவைக் கேட்டாத்தான் தெரியும்.
அந்த பள்ளிக்கூட மாணவர்களுக்கு என்னவெல்லாம் சொல்லித் தருகிறார்கள் என்பதை அந்த விளம்பரத்தைப் பார்த்தாலே தெரியும்.
மாணவர்கள் முன்னேறி விடுவார்கள் இல்லையா? இதிலென்ன சந்தேகம்!!!





அந்த ஊர் மக்களுக்கு, ஏன் ஜாதி பேதம் இன்றி, எல்லாருக்கும் குடிக்கத் தேவையானத்  தண்ணீரைத் தரும் குளம், அந்த அம்மன் கோயில் குளம்தாங்க. என்னுடைய பாட்டி குளத்துத் தண்ணிரை எடுத்து வந்து ஏதோ கொட்டையை வைத்து கடைவார்கள்!
கேட்டால் தேத்தாங்கொட்டை என்பார்கள். எப்படித் தெளிந்து இருக்கும் தெரியுமா?
இப்ப நாம காசு கொடுத்து வாங்கும் தண்ணிர், அதனிடம் பிச்சை வாங்க வேண்டும்.ஆனால் இப்ப அந்த குளத்துத் தண்ணீரை யாரும் பயன்படுத்துகிறார்களா என்பது  சந்தேகம்தான்! 

மலையரசி அம்மன்.

அதுதான் அந்த அம்மனோட பேரு!
இதுலே என்ன விசேஷம்ன்னா, கோயில்ல அம்மனுக்குன்னு எந்த சிலையும் கிடையாது.
அம்மனை பெண்களும் போய் பார்க்கறது வழக்கம் இல்லை. ஆச்சர்யமாக இல்லை!
அம்மனனுக்கு மாலை கட்டிப் போட்டால், நாம வேண்டிக்கிறது எல்லாம் நடக்கும். இது  இந்நாள் வரை நடந்துண்டு இருக்கும் வழக்கம்.
ஆழ்வார்கள் யாரும் பெருமாள் மேல் பாசுரங்கள் பாடயுள்ளனரா என்றால் இல்லை என்றே  சொல்லவேணும்.
ஆனால் இந்த அம்மனை கவியரசு கண்ணதாசன்  தன்னுடைய பாடல்களில் பாடியுள்ளார் என்பது அதைவிட ஆச்சர்யம்.
முன்னாலே சொன்னோமே பெருமாள் கோயில் குளம்ன்னு, அந்தக் குளத்தில்
அக்கிரஹாரத்தைச் சேர்ந்த பெண்கள் தாங்கள் விட்டுப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போய் தேய்த்து, பின்னர் அங்கேயே குளித்து விட்டு வருவார்கள் அப்ப எப்படி இருந்ததோ  அப்படியே தான் இப்போதும் உள்ளது. ஒரு மாற்றமும் இல்லை, குளத்தில்!
மாற்றம், அக்கிரஹாரத்தில் தான்!
போலீஸுக்கு சொல்லித்தான், அக்கிரஹாரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.!
அது மட்டுமா? அக்கிரஹாரத்தில் இருந்த மக்களையும் தான்.
அந்தப் லக்ஷ்மி நாராயணன் தான் அவர்கள் மனதில் சென்று அவர்களை இங்கு வரவழைக்க  வேண்டும்.
ஆனால் வருஷத்து இரு தடவை கோவிலில் நடக்கும் விஷேஷத்துக்கு வந்து விடுவார்கள்
அப்படித்தான் இந்த வருஷம் கோவிலில் குடமுழுக்கு நடந்து ஏழாவது வருஷ பிரதிஷ்டா  தினம் 5-6-2012 அன்று நடைபெற்றது. திருமஞ்சனம் மற்றும் ஹோமங்கள் நடைபெற்றன.

ஹோமத்தில் கலந்து கொண்ட சில அன்பர்கள்


ஹோம திரவியங்கள் பிரதக்ஷிணம்
ஹோமம்

திருவெள்ளறை அர்ச்சகர்கள் வெகு சிறப்பாக நடத்தினர்.
அதிலேருந்து சில காட்சிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
என்ன!!நெடுமறம் நோக்கி கிளம்பிட்டீங்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக