சனி, ஆகஸ்ட் 31

போம் பழியெல்லாம் அமணன் தலையோடு போம்!!!!


என்னையா எழுதி இருக்கே, புரியவில்லையே?
யார் மேலே யார் பழி போடறாங்க?
இது ஒரு அரசனைப் பத்திங்க.


இதைப் படிச்சுட்டு ஏதோ நம்மூர்ல நடக்கற மாதிரி இருக்கேன்னு நினைச்சா
அதுக்கு நான் பொறுப்பல்ல, முன்னாலேயே சொல்லிட்டேன் என்ன!
அரசன்,
 'யாரங்கே! மாளிகை வாசல்ல இருக்கிற மணியை யாரோ அடிக்கறாங்க, யார்ன்னு  பாருங்க?'
 'யாரோ ஒரு பெண்மணி தான் மணியை அடிக்கிறாங்க அரசே ".
 "என்னம்மா உனக்கு பிரச்சனை? சும்மா இருக்க விடமாட்டிங்களே?"
 "எனக்கு நீதி வேண்டும் பெண்மணி? அரசே?"
 "நான் என்ன வச்சுண்டு தர மாட்டேன்னு சொன்னேனா, சொல்லும்மா என்ன விஷயம்?"
 "என் கணவன் இறந்து விட்டார் ஐயா."
 "எப்படி அம்மா இறந்தான்?"
 "அவர் ஒரு திருடன், நேற்றிரவு ஒரு வீட்டில் கன்னக்கோல் வச்சு திருடும் போது அந்த  வீட்டு சுவர் ஈரமா இருந்ததனாலே இடிஞ்சு, அவன் மேலே விழுந்து இறந்து விட்டார் ஐயா.  அதனாலே அந்த வீட்டுக்காரங்க எனக்கு நஷ்ட ஈடு தரணும்னு ஐயா உத்தரவு இடனும்."
 "இது நல்லா இருக்கே? கூப்பிடு அந்த வீட்டுக்காரனை? அவனுக்கு உடனே சம்மன்   அனுப்பு".
 மந்திரி உடனே எழுந்து, "அரசே, அவன் திருடன். ஒரு வீட்டில் திருடப் போய் இருக்கான்.  அவனை இறைவனே தண்டித்து இருக்கான். அதை விட்டுவிட்டு அந்த வீட்டுக்காரனை   தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்?
 "மந்திரியாரே, நமது நாட்டில் நியாயம் செத்துவிட்டது என்று பின்னால் யாரும் சொல்லக்  கூடாது இல்லையா? அத்துடன் அரசனிடம் ஒரு பிரஜை மனு கொடுத்துள்ளாள்.  அதை விசாரிக்காமல் தீர்ப்பு கொடுத்துவிட்டான் சரித்திரத்தில் நாம் இடம் பெற்றுவிடுவோம்,  அது கூடாது மந்திரியாரே!"
 "நாளை நமது அரசபை கூடும். அந்த விட்டுக்கு சொந்தக்காரனை அரச சபையில் கொண்டு   வந்து நிறுத்த வேண்டும் என ஆணையிடுகிறேன். இத்தோடு அரச சபை கலையட்டும்."
  மறுநாள் காலை.
 வீட்டு சொந்தக்காரன், "அரசே, வீட்டு சுவர் இடிந்ததற்கு நான் காரணம் இல்லை."
 "பின் யார் காரணம் என்கிறாய்?"
 "அரசே,திருடன் வந்தபோது சுவர் ஈரமாக இருந்து இருக்கிறது. அதனால் தான் இடிந்து இருக்கிறது.  அதனால் சுவரைக் கட்டிய கொத்தனார் தான் திருடன் இறக்கக் காரணம். எனவே அவனை   விசாரித்துத் தீர்ப்புக் கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்."  
 "மந்திரியாரே, இவன் சொல்வதும் சரிதான், கூப்பிடு அந்தக் கொத்தனாரை!"
 "அரசே, நீங்கள் செய்வது?"
 "சும்மா இரும், மந்திரி, எனக்கும் சட்டம் தெரியும்?"
 "நாளை கொத்தனாருடன் சபை கூடும்"
 "அரசே, நான் கொத்தனார், என்னிடம் என்ன கலவை கொடுக்கிறார்களோ, அதற்கு ஏற்பத் தான்   கட்டடம் அமையும் என்பது .புத்திசாலியான உங்களுக்குத் தெரியாதா? சித்தாள் அதிகத் தண்ணிரைக்   கலந்து வந்ததால் தான் சுவர் ஈரமாக இருந்து இருக்கிறது. எனவே சித்தாள் தான் திருடன் இறக்கக்   காரணம். என்னை விடுவிக்க வேண்டும் மன்னா."
 "நன்னா சொன்னே, நீ குற்றம் செய்யவில்லை. கூப்பிடு சித்தாளை!!"
 "மன்னா, நானோ படிக்காதவள், எனக்கு என்ன தெரியும் கலவையைப் பற்றியெல்லாம்?  இன்னைக்கு பார்த்து ஒரு பெரிய குடம் கொடுத்தார்கள், அதில் தண்ணீர் அதிகமாக  இருந்து இருக்கும், அதனால் நான் குற்றவாளி இல்லை. குடம் செய்த குயவனைத் கேட்க  வேண்டும் மன்னா."
 'ஆமாம், ஆமாம், நீ என்ன செய்வாய்? எல்லாவற்றுக்கும் காரணம் அந்த குயவன் தான்.
 யாரங்கே, கூப்பிடு அந்தக் குயவனை."
 "மன்னா, நான் குடம் செய்து கொண்டிருக்கும் போது அந்த வழியே ஒரு பெண் போய்க்   கொண்டிருந்தாள்,அவனைப் பார்த்துக்கொண்டே குடம் செய்ததால் கொஞ்சம் பெரிதாகப்   போய்விட்டது. என் மேல் என்ன தப்பு. எல்லாவற்றுக்கும் காரணம் அந்தப் பெண் தான் மன்னா. என்னை விடுவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்."
 "மந்திரியாரே, நான் அப்பவே சொல்லலை, எப்படிப் பாருங்கள் நம் திறமையை?'
 மந்திரி மன்னன் பாக்காத நிலையில் தலையில் அடித்துக் கொண்டார். இந்த மன்னனிடம் போய்  வேலைக்கு சேர்ந்தோமே என்று!!
 "நான் தான் மன்னா குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு போன பெண்மணி."
 "ஆமாம், குயவன் குடம் செய்யும் போது அவனை ஒழுங்காக செய்யவிடாமல் என் செய்தாய்?  திருடன் இறந்ததற்கு நீ தான் காரணம். உனக்கு ஏன் தண்டனை தரக்கூடாது?"
 "மன்னா, மன்னியுங்கள். என் மேல் எந்த தவறும் இல்லை. நான் எனது துணிகளை வெளுக்க   வண்ணானிடம் கொடுத்து இருந்தேன். அவன்  திரும்பக் கொண்டு வர நேரம் ஆகியதால் அவனைப்  
 பார்த்து கேட்கலாம் என்று சென்று கொண்டிருந்தேன். என் மேல் எந்த.தவறும இல்லை மன்னா.  அந்த வண்ணான் தான் காரணமாக வேண்டும். அவனை தண்டியுங்கள் மன்னா."
 'மன்னா,துணிகளை வெளுக்க ஆறு பக்கம் சென்றேன். அங்கு ஒரு சன்யாசி உட்கார்ந்து இருந்தார்.  அவரை சற்றே விலகி இரும் ஐயா. என்றேன். நீண்ட நேரம் ஆன பிறகே அவர் அந்த இடத்தை   விட்டு விலகினார் அதனால் நேரம் ஆகிவிட்டது மன்னா. எனவே அந்த சன்யாசி தான் திருடன்  இறக்கக் காரணம். நான் இல்லை ஐயா.'
சந்நியாசி யிடம் மன்னன்,
 "என்ன, அந்த வண்ணான் விலகுன்னு சொன்ன போது நீ நகராமல் இருந்தாயா?",
 "-------"
 "நீ நகராமல் இருந்ததால் தானே அவன் வெளுக்க நேரம் ஆயிற்று?"
 "-------"
 'அதனால் தானே அந்த பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய துணியை தாமதித்து கொடுத்தான்?"
 '-------"
  "வரவேண்டிய துணி வரலேன்னு தானே அந்தப் பெண் குயவன் வழியில் குறுக்கிட்டாள்?"
 "-------"
 "குயவன் பெரிய குடம் செய்தது, பெரிய குடத்தில் தண்ணீர் சித்தாள் எடுத்தது, ஈரமான சுவரைக்    கொத்தனார் கட்ட காரணம், அதனால் சுவர் இடிந்து திருடன் இறக்க இவை எல்லாவற்றிற்கும்   காரணம் நீ என்பதை ஒத்துக் கொள்கிறாயா?"
 "---------"
 'இவன் எந்த பதிலையும்  சொல்லாமல்  எல்லாவற்றையும் ஒத்துக் கொண்டான், எனவே இவன் தான் குற்றவாளி. இவனைச்
 சிரச்சேதம் செய்யுங்கள். இது தான் என்னுடைய தீர்ப்பு. சபை கலையட்டும்."

ஹி,ஹி,ஹி,

 மன்னன் ஓரக்கண்ணால் தன்னுடைய தீர்ப்பு இப்படி இருந்தது பார்த்தாயா மந்திரியாரே  என்று வினவ, மந்திரி மனதுக்குள் அந்த சந்நியாசி ஊமையானபடியால் வாயைத் திறந்து  பதில் சொல்லவில்லை என்பதை மதிகெட்ட அரசனுக்கு எப்படி உணர்த்துவது என்று தெரியாமல்
 மன்னனைப் புன்முறுவல் பூத்தபடி சபையை விட்டு வெளியேறினார்.
 மக்களும் மன்னனுக்கு வாழ்த்து படித்தார்கள்.

 இதைத் தான் "போம் பழியெல்லாம் அமணன் தலையோடு போம்!!!!" என்றோம்.

சனி, ஆகஸ்ட் 10

கதை சொல்லும் பாசுரங்கள்----பகுதி-3”என்ன கண்ணா, இன்னைக்கு இவ்வளவு லேட்?”
“வாசல்ல பாருங்க தாத்தா.”
“யாருடா, உன் நண்பர்களா? எதுக்கு வந்துருக்காங்க. நீங்கள்ளாம்
ஏதேனும் விளையாடப் போகிறீர்களா?”
”ஆமாம் தாத்தா, எங்க தாத்தா நன்னா கதை சொல்வாங்கன்னு
சொன்னேன், உடனே அவங்க அப்பா, அம்மாவெல்லாம் அவங்களையும்
போய் தாத்தா கிட்ட கதை கேளுங்க்ன்னு அனுப்பிட்டாங்க”.
“அப்படியா, வாங்க. இன்னைக்கு பெருமாள் யானை கூப்பிட்ட குரலுக்கு
பதில் சொன்ன கதையைப் பார்ப்போம்”.
“என்ன தாத்தா, யானைக்கெல்லாம் பெருமாள் பதில் சொல்வாரா?”
”பெருமாள் யார் கூப்பிட்டாலும் வருவார். அவரிடம் நம்பிக்கை வைத்து
யார் கூப்பிட்டாலும் வருவார்.”
“என்ன சின்னப் பசங்க நாங்க?”
“வருவார். அப்படி பெருமாள் உன்ன மாதிரி சின்னப் பையன் ஒருவன்
அவர் மேல நம்பிக்கை வைத்து கூப்பிட்ட கதையை அப்பறம் சொல்றேன்,
இப்போ எப்படி யானை கூப்பிட்டதுக்கு வந்தார்ன்னு பாப்போமா?”
கண்ணன் நண்பர்கள் எல்லாரும் ஆவலோடு கதை கேட்கத் தயாராக இருக்க,
தாத்தா கதையை ஆரம்பிக்கிறார்.
“யானை தினமும் ஒரு குளத்தில் இருந்து தாமரை புஷ்பத்தை பறித்துக்
கொண்டு வந்து கரையில் உள்ள பெருமாள் சிலைக்கு பக்தியோடு சமர்ப்பிக்கும்.
அன்னைக்கும் அதுபோல காலையில் குளத்தில் இறங்கி தாமரைப் புஷ்பத்தை
பறிக்க நினைத்தது. அதுக்குத் தெரியாது குளத்தில் ஒரு பெரிய முதலை
இருப்பது.”
“அய்யய்யோ, என்னாச்சு தாத்தா?”
"பார்த்தது முதலை, சரியான சாப்பாடு கிடைச்சுருக்கு, விடப்படாதுன்னு
நினைச்சு, யானையின் காலை தன்னுடைய பல்லால கவ்வித்து. அப்பத்தான்
யானைக்கு தெரிந்தது, முதலை தன் காலைப் பிடிச்சுருக்குன்னு.”
”அப்பறம் என்னாச்சு தாத்தா?”
“யானை முதலைக்கிட்டருந்து காலை எடுக்கப் பார்த்தது. ஆனா முதலை
விடறதா இல்லை. யானைக்கு வலி தாங்க முடியலை. முதலை தண்ணிக்குள்ள இருக்குறவரைக்கும் அதுக்கு பலம். அதனால எப்படியாவது அதை கரைக்கு இழுத்துண்டு வந்துடணும்ன்னு யானை கரையை நோக்கி இழுக்க, முதலை யானையை தண்ணீருக்குள் இழுக்க, ரெண்டு பேருக்கும் பெரிய போட்டி.”
“யானைக்கு கால் வலிக்கலையா தாத்தா?”
“ஏன் வலிக்கலை,  பயங்கரமான வலி. என்னன்னமோ பண்ணிப் பார்த்தது
யானை. முடியல. இனிமேல் தன்னால் முதலைக்கிட்டருந்து தன்னைக்
காப்பாத்திக்க முடியாதுன்னு தெரிஞ்ச்து."
"என்ன பண்ணிச்சு தாத்தா?”
“நம்மால முடியாததை பெருமாள்கிட்ட விட்டுடணும். பெருமாளே கதின்னு
சொல்லிட்டா எந்தக் கஷ்டம் வந்தாலும் அவர் பாத்துப்பார்”
“பெருமாள் பாத்துப்பாரா தாத்தா”.
“ஆமாம், இங்க நடக்கிறதையெல்லாம் திருப்பார்க்கடல்ல உக்காந்துண்டு
பாத்துண்டு இருக்கார் பெருமாள்.
“யானை என்ன பண்றது பாப்போம்” ன்னு மஹாலக்ஷ்மிக்கிட்ட சொல்றார்.”
“யாரு தாத்தா மஹாலக்ஷ்மி?”
“ஆமாம், சொல்ல மறந்துட்டேனே, அவங்க தான் பெருமாளோட மனைவி.
நமக்கெல்லாம் கேட்டதையெல்லாம் அள்ளித்தரும் மஹாலக்ஷ்மி தாயார்.
அவங்க பார்த்துட்டாபோறும் நம்ம கஷ்டமெல்லாம் தீரும்”.
“இனிமேல் தன்னாலே ஒண்ணும் பண்ணமுடியாதுன்னு யானைக்குத் தெரிந்தது. பெருமாள் தான் தன்னை காப்பாத்தமுடியும்ன்னு தெரிஞ்சு, உடனே,
’பரந்தாமா, என்னைக் காப்பாத்து’ன்னு அலறியது.
”பெருமாள் மஹாலக்ஷ்மியை பார்த்து, பார்த்தாயா,என்னைக் கூப்பிடுவான் என்று   சொன்னேன் அல்லவா?” என்று கூறினார்.
“போங்கள் உடனே போய் யானையைக் காப்பாத்துங்கள்” என்று மஹாலக்ஷ்மி
பெருமாளைப் பார்த்துக் கூறினாள்.
”உடனே, கருடவாகனத்தை அழைத்தார். அதில் மேல் ஏறி அமர்ந்து யானை
உள்ள குளத்தை அடைந்தார். தன் சக்கரத்தை பிரயோகித்து முதலையின் வாயிலிருந்து யானையின் காலை பிரித்தார். முதலை இறந்தது. யானையின் துயரம் தீர்ந்தது.”
“இத யார் தாத்தா பாடியிருக்கா?”
“இந்த நிகழ்ச்சியை படம் பிடிக்கிற மாதிரி திருமஙகை ஆழ்வார் தன்னுடைய பாசுரத்தில் திருவல்லிக்கேணி என்ற திவ்யதேசத்தைப் பற்றிப் பாடும் போது பாடியுள்ளார். அந்தப் பாசுரத்தைத் தான் கீழே கொடுத்துள்ளேன் கண்ணா”

              மீனமர் பொய்கை நான்மலர் கொய்வான்
       வேட்கையி னோடுசென்றிழிந்த,
             கான்மலர் வேழம் கையெடுத் தலறக்
       கராவதன் காலினைக் கதுவ
             ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து
       சென்றுநின் றாழிதொட்டானை,
             தேனமர் சோலை மாடமா மயிலைத்
       திருவல்லிக்  கேணிக்கண் டேனே.                             1076
”இந்தப் பாசுரத்துக்கு ஏற்றாற்போல் உன் பாட்டி கோலம் போட்டுள்ளதை பார்”
“அப்படியா தாத்தா, பிரமாதமா வரைந்து இருக்காங்களே!!!”

கோலத்தில்’ மேலே உள்ள் பாசுரம்

யானையின் துயரம் தீர மஹாவிஷ்னு கருடன் மேல்

வெள்ளி, ஆகஸ்ட் 2

கதை சொல்லும் பாசுரங்கள்----பகுதி-2


கதை சொல்லும் பாசுரங்கள்----பகுதி-2
”என்ன தாத்தா ரொம்ப நாளாச்சு கதை சொல்லி? எப்ப சொல்லபோறே?”
“ஒன்னுமில்லை கண்ணா, நிறைய வேலை இருந்தனாலே உனக்கு கதை சொல்லமுடியலயடா. மன்னிச்சுக்கோ. என்ன சரியா?”
“அதெல்லாம் சரி, இன்னைக்கு என்ன கதை சொல்லப்போறே?”
“போன தடவை என்ன கதை சொன்னேன் ஞாபகம் இருக்கா?”
“ஏன் இல்லாம, கிருஷ்ணன் அதான் கண்ணன் எப்படி பொறந்தான்னு சொன்ன. எப்படி மறக்க முடியும்.”
“சபாஷ்டா, நல்லா ஞாபகம் வச்சு இருக்கியே.”
“நாலாயிர திவ்யப் பிரபந்தம், அப்ப்டிங்கறது நிறைய பாடல்கள் ஆழ்வார்கள் பெருமாளைப் பற்றிப் பாடி இருக்கற ஒரு நூல்.. ஒவ்வொரு பாட்லகளிளேயும் நிறைய கதைகள் இருக்கு. அதில் இருந்து தான்
உனக்குக் கதை சொல்லிண்டு இருக்கேன்னு உனக்குத் தெரியுமா?”
“தெரியும் தாத்தா. போன தடவை ஆண்டாள்  பாடலை வச்சு கதை சொன்னே. இப்ப யாரோட பாட்டை வச்சு கதை சொல்லப் போற.”
”இன்னைக்கு திருமழிசை என்கிற ஊரில் இருந்து பாடல்கள் இயற்றிய திருமழிசையாழ்வார் பற்றிய கதை தான் உனக்குச் சொல்லப் போறேன்”
“எங்கே தாத்தா இருக்கு அந்த ஊர்?”
“சென்னைக்கு பக்கத்திலெ, திருவள்ளூர் போற வழியிலே இருக்கு திருமழிசை. அவர் ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் அவருடைய சிஷ்யன் கணிகண்ணன் என்பரோடு திருவெஃகா என்ற இடத்தில் பெருமானைப் தரிசித்துக் கொண்டு தங்கி இருந்த்தார்."
"அவர் என்ன செய்தார் தாத்தா?”
”திருமழிசையாழ்வார் கோயிலில் தங்கி பெருமாளுக்கு தொண்டு செய்து கொண்டு இருக்கும் போது, ஒரு வயதான  மூதாட்டியும் ஆழ்வாருக்கு துணை செய்தார். இதைப் பார்த்த ஆழ்வார்,
 ”உனக்கு என்ன வரம் வேண்டும்”, என்று கேட்டார்.
மூதாட்டி, “எனக்கு ஏதானும் வரம் கொடுப்பதா இருந்தா, எல்லாரும் என்னௌடைய வயதான தோற்றத்தைக் கண்டு கேலி செய்கிறார்கள், அதனால் நான் என்றும் மாறாத இளமை தோற்றத்தை எனக்குத் தர வேண்டும்”, என்று மன்றாடினாள்.
”அவ்வாறே ஆகட்டும்” என்று ஆழ்வாரும் அவரை இள்ம் பெண்ணாக மாற்றினார்.
“முடியுமா தாத்தா?”
“இது மட்டுமா முடியும். ஆழ்வார் பெருமாளோடே பேசி இருக்கார்”.
’அப்படியா தாத்தா”.
“ஆமாம்ப்பா, அந்தக் கதை இப்போ வரப்போறது”.
“சொல்லு தாத்தா”.
“அந்த ஊர்ல இருந்த பல்லவ ராஜா இந்தப் பெண்ணைப் பார்த்து, அவளைக் கல்யாணம் செய்து கொள்ள விருப்ப்பட்டான்.
அவளும் சரி என்று சொல்ல கலயாணம் இருவருக்கும் நடைப்ற்றது. வருஷம் ஆச்சு. ராஜா முதுமை அடைந்தார். ஆனா ராணி எப்போவும் போல இளமையாகவே இருந்தார். இதைக் கண்ட ராஜா ராணி கிட்ட,
“எப்படி நீ மட்டும் இளமையாக இருக்கே?’ ன்னு கேட்டார்.
ராணி, ” நான் இளமையாக இருக்கக் காரணம் திருமழிசையாழ்வார் தான்” என்று அவருடைய பெருமையைச் சொன்னாள்.
உடனே ராஜா, தன்னுடைய ஆட்களை அனுப்பி, ஆழ்வாரை வரச் சொன்னான். ஆழ்வார் வரமாட்டேன்னுட்டார். அவருடைய சிஷ்யன் கணிகண்ணனை வரச் சொன்னான். அவரிடம் ராஜா,
 “ என்னைப் புகழ்ந்து உன் குடுனாதார் பாடவேண்டும்”, என்று கேட்டான்.
ஆனா சிஷ்யன் கணிகண்ணன்,
“பெருமாளைத் தவிர வேறு எவரையும் பற்றி எம் குருநாதர் பாடமாட்டார்” என்றான்.
“அப்படின்னா நீ என்னைப் புகழ்ந்து பாடு”, என்று கணிகண்ணனுக்கு ஆணையிட்டான்.
”எம் குருநாதரை தவிர்த்து நான் யாரையும் பாட்மாட்டேன்” என்று ராஜாகிட்ட சொன்னான்.
“இப்படியெல்லாம் ராஜாகிட்ட சொல்ல முடியுமா, தாத்தா?”
“நாமன்ன ராஜாவைப் பார்த்து பயப்படுவோம், ஆனா அந்தக் காலத்திலெ யாரும் பயப்படமாட்டாங்க.”
“அப்ப என்ன ஆச்சு தாத்தா?”
”ராஜாவுக்கு கோபம் வந்துச்சு. கணிகண்ணை நாட்டை விட்டுச் செல்லும் படி உத்தரவிட்டான். கணிகண்ணனும் குருகிட்ட நடந்த விஷயத்தைச் சொல்லிட்டு, தான் திருவெஃகாவைவிட்டு செல்வதற்க்கு அனுமதிகேட்டான். திருமழிசையாழ்வார் உடனே, “சிஷயன் இல்லாத இடத்தில் எனக்கென்ன வேலை, நானும் உன்னோட வருகிறேன்,” என்று சொல்லிவிட்டு புறப்படத் தயாரானார். அதுக்கு முன்னாலெ,
பெருமான் கிட்ட,
              "கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்காஞ்சி
                மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா
          செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
                பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்"
என்று பாடினார் திருமழிசையாழ்வார்.”
“பெருமாள் கிட்ட என்ன சொன்னார் தாத்தா?”
“காஞ்சி மணிவண்ணா, கனிகண்ணன் ஊரை விட்டுப் போகின்றான், நானும் அவனோடே போகின்றேன், அதனாலே
நீயும் உன்னோட நாகபாம்பு படுக்கையை சுருட்டிக் கொண்டு என்னோட புறப்படு. அப்படின்னு அர்த்தம்”
“ஆழ்வார் சொன்னா பெருமாள் கேட்பாரா தாத்தா?”
“கேட்டாரே”.
“ஆமாம், உடனே பெருமாள் நாகப்பாயை சுருட்டிண்டு, மூன்று பேரும் ஊரை விட்டு ”ஓரிக்கை” என்ற ஊரில் போய் அன்னைக்கு இரவு தங்கினார்கள்.”
“அப்புறம் என்ன ஆச்சு தாத்தா?”
“காஞ்சிபுரம், பெருமாள் இல்லாததால் பொலிவை இழந்தது. விஷ்யம் என்னன்னு ராஜா வேலையாட்கள் கிட்ட கேட்டான்
மறுநாள் ராஜாவோட வேலையாட்கள் நடந்த விஷயத்தை ராஜாக்கிட்ட சொன்னாங்க. உடனே ராஜா தான் பண்ண தப்ப உணர்ந்தான். போய் ஆழ்வார் கிட்ட மன்னிப்பு கேட்டான், உடனே காஞ்சிபுரம் வரணும்ன்னு சொன்னான். ஆழ்வாரும் ராஜாங்கிறது பெருமாள் மாதிரின்னு சொல்லிட்டு, உடனே கிளம்பினார். பெருமாளைப் பார்த்து, 
                    "கனிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் காஞ்சி
                          மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
              செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்;
                        நீயும் உன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்"
“கனிகண்ணனும் நானும் காஞ்சி போறோம், அதனாலே நீயும் பாயைச் சுருட்டிக் கொண்டு புறப்படடு கோயில்ல
போய் படுத்துக் கொள்” என்று சொன்னவுடன் பெருமாளும் பாம்பு படுக்கையை எடுத்துக் கொண்டு வந்து, மீண்டும்
கோயில்லெ போய் படுத்துக்கொண்டார். அதனால அந்த பெருமாளுக்கு “சொன்னவண்ணம் செய்த பெருமாள்” ன்னு
பேரு. “யதோத்காரி” ன்னும் கூப்பிடுவாங்க.”
“என்ன தாத்தா, பெருமாள் ஆழ்வார் சொல்றதல்லாம் கேட்டு இருக்காரே!!”
“ஆமாம், அந்தக் காலத்திலே மட்டுமில்ல, எப்பவும் பெருமாள் நாம் சரியாச் சொன்னா எப்பவும் கேட்கத் தயார். நான் முன்னாடி சொன்ன மாதிரி இப்ப செல்ல வச்சுண்டு விளயாடுறியா?”
“இல்ல தாத்தா, இப்பல்லாம் நான் நன்னாப் படிக்கிறேன்”.
“வெரிகுட், அப்படித்தான் இருக்கணும். சரி போய் தூங்கு, நாளைக்கு இன்னொரு பாட்டுக்கு கதை சொல்றேன்,”
“தாங்க்ஸ் தாத்தா, குட் நைட்”.