சனி, ஆகஸ்ட் 10

கதை சொல்லும் பாசுரங்கள்----பகுதி-3



”என்ன கண்ணா, இன்னைக்கு இவ்வளவு லேட்?”
“வாசல்ல பாருங்க தாத்தா.”
“யாருடா, உன் நண்பர்களா? எதுக்கு வந்துருக்காங்க. நீங்கள்ளாம்
ஏதேனும் விளையாடப் போகிறீர்களா?”
”ஆமாம் தாத்தா, எங்க தாத்தா நன்னா கதை சொல்வாங்கன்னு
சொன்னேன், உடனே அவங்க அப்பா, அம்மாவெல்லாம் அவங்களையும்
போய் தாத்தா கிட்ட கதை கேளுங்க்ன்னு அனுப்பிட்டாங்க”.
“அப்படியா, வாங்க. இன்னைக்கு பெருமாள் யானை கூப்பிட்ட குரலுக்கு
பதில் சொன்ன கதையைப் பார்ப்போம்”.
“என்ன தாத்தா, யானைக்கெல்லாம் பெருமாள் பதில் சொல்வாரா?”
”பெருமாள் யார் கூப்பிட்டாலும் வருவார். அவரிடம் நம்பிக்கை வைத்து
யார் கூப்பிட்டாலும் வருவார்.”
“என்ன சின்னப் பசங்க நாங்க?”
“வருவார். அப்படி பெருமாள் உன்ன மாதிரி சின்னப் பையன் ஒருவன்
அவர் மேல நம்பிக்கை வைத்து கூப்பிட்ட கதையை அப்பறம் சொல்றேன்,
இப்போ எப்படி யானை கூப்பிட்டதுக்கு வந்தார்ன்னு பாப்போமா?”
கண்ணன் நண்பர்கள் எல்லாரும் ஆவலோடு கதை கேட்கத் தயாராக இருக்க,
தாத்தா கதையை ஆரம்பிக்கிறார்.
“யானை தினமும் ஒரு குளத்தில் இருந்து தாமரை புஷ்பத்தை பறித்துக்
கொண்டு வந்து கரையில் உள்ள பெருமாள் சிலைக்கு பக்தியோடு சமர்ப்பிக்கும்.
அன்னைக்கும் அதுபோல காலையில் குளத்தில் இறங்கி தாமரைப் புஷ்பத்தை
பறிக்க நினைத்தது. அதுக்குத் தெரியாது குளத்தில் ஒரு பெரிய முதலை
இருப்பது.”
“அய்யய்யோ, என்னாச்சு தாத்தா?”
"பார்த்தது முதலை, சரியான சாப்பாடு கிடைச்சுருக்கு, விடப்படாதுன்னு
நினைச்சு, யானையின் காலை தன்னுடைய பல்லால கவ்வித்து. அப்பத்தான்
யானைக்கு தெரிந்தது, முதலை தன் காலைப் பிடிச்சுருக்குன்னு.”
”அப்பறம் என்னாச்சு தாத்தா?”
“யானை முதலைக்கிட்டருந்து காலை எடுக்கப் பார்த்தது. ஆனா முதலை
விடறதா இல்லை. யானைக்கு வலி தாங்க முடியலை. முதலை தண்ணிக்குள்ள இருக்குறவரைக்கும் அதுக்கு பலம். அதனால எப்படியாவது அதை கரைக்கு இழுத்துண்டு வந்துடணும்ன்னு யானை கரையை நோக்கி இழுக்க, முதலை யானையை தண்ணீருக்குள் இழுக்க, ரெண்டு பேருக்கும் பெரிய போட்டி.”
“யானைக்கு கால் வலிக்கலையா தாத்தா?”
“ஏன் வலிக்கலை,  பயங்கரமான வலி. என்னன்னமோ பண்ணிப் பார்த்தது
யானை. முடியல. இனிமேல் தன்னால் முதலைக்கிட்டருந்து தன்னைக்
காப்பாத்திக்க முடியாதுன்னு தெரிஞ்ச்து."
"என்ன பண்ணிச்சு தாத்தா?”
“நம்மால முடியாததை பெருமாள்கிட்ட விட்டுடணும். பெருமாளே கதின்னு
சொல்லிட்டா எந்தக் கஷ்டம் வந்தாலும் அவர் பாத்துப்பார்”
“பெருமாள் பாத்துப்பாரா தாத்தா”.
“ஆமாம், இங்க நடக்கிறதையெல்லாம் திருப்பார்க்கடல்ல உக்காந்துண்டு
பாத்துண்டு இருக்கார் பெருமாள்.
“யானை என்ன பண்றது பாப்போம்” ன்னு மஹாலக்ஷ்மிக்கிட்ட சொல்றார்.”
“யாரு தாத்தா மஹாலக்ஷ்மி?”
“ஆமாம், சொல்ல மறந்துட்டேனே, அவங்க தான் பெருமாளோட மனைவி.
நமக்கெல்லாம் கேட்டதையெல்லாம் அள்ளித்தரும் மஹாலக்ஷ்மி தாயார்.
அவங்க பார்த்துட்டாபோறும் நம்ம கஷ்டமெல்லாம் தீரும்”.
“இனிமேல் தன்னாலே ஒண்ணும் பண்ணமுடியாதுன்னு யானைக்குத் தெரிந்தது. பெருமாள் தான் தன்னை காப்பாத்தமுடியும்ன்னு தெரிஞ்சு, உடனே,
’பரந்தாமா, என்னைக் காப்பாத்து’ன்னு அலறியது.
”பெருமாள் மஹாலக்ஷ்மியை பார்த்து, பார்த்தாயா,என்னைக் கூப்பிடுவான் என்று   சொன்னேன் அல்லவா?” என்று கூறினார்.
“போங்கள் உடனே போய் யானையைக் காப்பாத்துங்கள்” என்று மஹாலக்ஷ்மி
பெருமாளைப் பார்த்துக் கூறினாள்.
”உடனே, கருடவாகனத்தை அழைத்தார். அதில் மேல் ஏறி அமர்ந்து யானை
உள்ள குளத்தை அடைந்தார். தன் சக்கரத்தை பிரயோகித்து முதலையின் வாயிலிருந்து யானையின் காலை பிரித்தார். முதலை இறந்தது. யானையின் துயரம் தீர்ந்தது.”
“இத யார் தாத்தா பாடியிருக்கா?”
“இந்த நிகழ்ச்சியை படம் பிடிக்கிற மாதிரி திருமஙகை ஆழ்வார் தன்னுடைய பாசுரத்தில் திருவல்லிக்கேணி என்ற திவ்யதேசத்தைப் பற்றிப் பாடும் போது பாடியுள்ளார். அந்தப் பாசுரத்தைத் தான் கீழே கொடுத்துள்ளேன் கண்ணா”

              மீனமர் பொய்கை நான்மலர் கொய்வான்
       வேட்கையி னோடுசென்றிழிந்த,
             கான்மலர் வேழம் கையெடுத் தலறக்
       கராவதன் காலினைக் கதுவ
             ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து
       சென்றுநின் றாழிதொட்டானை,
             தேனமர் சோலை மாடமா மயிலைத்
       திருவல்லிக்  கேணிக்கண் டேனே.                             1076
”இந்தப் பாசுரத்துக்கு ஏற்றாற்போல் உன் பாட்டி கோலம் போட்டுள்ளதை பார்”
“அப்படியா தாத்தா, பிரமாதமா வரைந்து இருக்காங்களே!!!”

கோலத்தில்’ மேலே உள்ள் பாசுரம்

யானையின் துயரம் தீர மஹாவிஷ்னு கருடன் மேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக