செவ்வாய், ஜனவரி 31

விசா பெருமாள்!!!!!!

அழ்கியமனவாளன் 


விசா பெருமாள்!!!!
"என்ன ராஜு, விசா பெருமாளை தரிசிக்கப் போலாமா?" விட்டுக்கு வந்த என் தம்பியிடம் நான் கேட்டேன்.
கொஞ்சம் குழப்பத்தோடு என்னை ஏறிட்டுப் பார்த்தான்.
"என்னடா, புதுசா சொல்றே? ஸ்ரீரங்கம் வந்த என்னை ஸ்ரீ ரங்கநாதனை தரிசித்தாயா?
என்று கேட்டால் சரியாக இருக்கும். அதென்ன புதுசா விசா பெருமாள்?"
என் தம்பி குழப்பத்தோடு என்னிடம் வினவினான்.
குறுக்கே வந்த என் தங்கை மாலி, (எங்க அப்பா அவளுக்கு ஹேமமாலினி-ன்னு  லக்ஷ்மி அஷ்டோத்திர நாமாவளி படிக்கும் போது வச்ச பேரைத்தான் நாங்க அப்படி சுருக்கி வச்சுட்டோம்)
"அதென்னடா, புதுசா இருக்கு.நானும் கேள்விப் பட்டதில்லையே"
"உங்க ரெண்டு பேருக்கிட்டேயும் காரணமாத்தான் சொல்றேன். அங்க போய் 
அவருக்கு திருமஞ்சனம் பண்ணி ஒரு அர்ச்சனை பண்ணி
தரிசனம் பண்ணிட்டு வாங்க, உங்க கஷ்டம் நிச்சயம் காணாமல் போகும். "

ஸ்ரீ ரங்கநாத பெருமாள், குலசேகர பெருமாள், சாரங்கபாணி பெருமாள் இப்பிடின்னு  கேட்டு இருக்கிறோம், இதென்ன புதுசா விசா பெருமாள் -ன்னு நினைக்கிறிர்களா?
ஆமாம் இது புதுசுதான், ஆனா பழசு தான். என்னய்யா குழப்புறே? நீங்க சொல்றது  கேக்கிறது.
வேறே ஒன்னும் இல்லை, என்னுடைய நண்பரின் மாப்பிளை அமெரிக்காவில் இருந்து விசா புதுப்பிக்க  வந்திருந்தார் விசாவிற்கு சென்று நேர்முகத் தேர்வு முடிந்து  இதோ விசா வந்து விடும், அதோ வந்து விடும் நாளை எண்ணிக் கொண்டிருந்தது  தான் மிச்சம். விசா வருவதாகக் காணோம். அந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக எங்கள் வாட்ச்மேன் வந்து சேர்ந்தார்.
அவர் ஒருநாள் என்னிடம் வந்து, "சார், எங்கள் ஊருக்கு ஒருநாள் வந்து எங்கள் பெருமாளைப் பாருங்கள். அவ்வளவு அழகாக இருப்பார். பார்த்தால் உங்கள் கண்களை அவரிடமிருந்து  எடுக்கமாட்டீர்கள். நினைத்ததெல்லாம் கொடுக்ககூடிய பெருமாள் சார்." என்று என்னிடம் கூறினார்.
நான், "ஆகட்டும் பார்க்கலாம், இப்போது நேரமில்லை" என்று அவரைத் தட்டிக் கழித்தேன்.
இரண்டு நாட்கள் ஆயிற்று. மீண்டும் வாட்ச்மேன் என்னைப் பார்த்து, "என்னிக்கு வரிங்க சார்"  நாளைக்குப் போகலாமா சார்?" என்று பிடிவாதம் பிடித்தார். அந்த நேரத்தில் அவரை ஏதோ  சொல்லித் தட்டிக் கழித்தேன். அவரைப் பார்ப்பதையே தவிர்த்தேன் என்றால் பாருங்கள்.
இரண்டு மூன்று நாட்கள் அவர் வரவில்லை. அப்பாடா! என்று பெருமூச்சு விட்டுக்கொண்டேன். ஆனால் என் மனம் என்னை அழுத்தியது. "வாட்ச்மேன் சாதாரண ஆள் என்பதால் தானே  நீ போகாமல்  இருக்கிறே? இதுவே ஒரு பெரிய பணக்காரனோ அல்லது ஒரு ஜோச்யக்காரரோ  சொல்லி இருந்தால் போகாமல் இருப்பாயா? அவர் என்ன உன்னை அவர் விட்டுக்கா  வரச் சொல்றார்? கோவிலுக்குத் தானே? போய் விட்டு வரவேண்டியது தானே? என்ன  உன் அந்தஸ்த்து குறைந்தது விடப் போகிறதா? கோவிலுக்கு போன புண்ணியமாவது  உனக்கு கிடைக்குமே" என்றெல்லாம் நினைக்கத் தோன்றியது.
என் மனைவியிடம் இந்த சம்பவங்களைச் சொன்னேன். எந்தக் கோவிலுக்குன்னாலும், எப்போ போகனுன்னாலும் இவன் எப்ப கூப்பிடுவான் என்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த  என் மனைவி, "அதுக்கென்ன நாளைக்கே போய் பார்த்துவிட்டு வரலாம்" என்றாள்.

அடுத்த நாள் வாட்ச்மேனிடம் "நாளை உங்க ஊருக்கு வருகிறோம். கோவில் அர்ச்சகரிடம்  சொல்லி வையுங்கள்." என்று சொல்லிவிட்டு, அதேபோல அடுத்த நாள் நாங்கள் கிளம்பினோம்.
நான், என் நண்பன், அவன் மாப்பிள்ளை சகிதம் ஒரு வேன் வைத்துக்கொண்டு கிளம்பினோம். அர்ச்சகரும் எங்களுக்காக காத்திருந்தார். சும்மா சொல்லக் கூடாது, பெருமாள் சுமார் பனிரெண்டு  அடி உயரமான, தீர்க்கமான, பார்த்தால் பார்த்துக் கொண்டுன்றிருக்குமான ஆஜானுபாகுவான  சிலை. அமுதத்தை பொழியும் கண்கள், புன்முறுவல் பூக்கும் அதரம், நீண்ட தோள்கள்,
வாருங்கள் உங்களுக்கு அபயம் அளிக்கக் காத்திருக்கிறேன் என்று சொல்லும் அபய ஹஸ்தம்,
இத்தனை நாள் பார்க்காமல் விட்டோமே என்று நினைக்கத் தோன்றியது. அருகிலேயே  ஸ்ரீதேவி பூதேவி சகிதம் நமக்குக் காட்சி அளிக்கிறார்.

"தோள்களா யிரத்தாய்! முடிகளா யிரத்தாய்!
   துணைமலர்க் கண்களா யிரத்தாய்,
 தாள்களா யிரத்தாய்! பேர்களா யிரத்தாய்!!
  தமியனேன்  பெரிய அப்பனே!"
என்று திருவாய்மொழியில் ஆழ்வார் பாசுரத்தைப் போல நமக்குக் காட்சி அளித்தார் பெருமாள்.

அர்ச்சகரும் அர்ச்சனை செய்து, கோவிலின் பெருமைகளை விளக்கினார்.
பெருமாளின் பெயரும் சுந்தராஜன் என்கிற அழகியமணவாளன் என்றும், ஸ்ரீரங்கம்  அரங்கநாதர், அன்னிய படையெடுப்பின் போது பல இடங்களிலும் இருந்து விட்டு  (அது தனிக்கதை) ஸ்ரீரங்கம் திரும்பும் வழியில் சிறிது காலம் இங்கு தங்கி இருந்தார் எனவும்  அர்ச்சகர் சொன்னார்.
அதனால் தான் ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு அழகியமனவாளன்  என்று மற்றொரு பெயர் உண்டு என்றார்.
இந்த ஊருக்கே அழகியமணவாளம் என்று பெயர். இவர் நாம்
வேண்டியதெல்லாம் அருள் பாலிக்கின்ற பெருமாள் என்றும், அவரிடம் நாம் வேண்டிக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
நாங்களும் வேண்டிக் கொண்டு ஊர் திரும்பினோம்.
அன்று மாலையே நண்பரும் எனக்கு தன்னுடைய மாப்பிள்ளைக்கு விசா வந்து விட்டது  என்றும் போன் செய்தார். அடுத்த வாரத்தில் ஒரு நாள் மீண்டும் போய் திருமஞ்சனம்  செய்ய வேண்டும் எனவும் என்னையும் வரவேண்டும் என்றும் சொன்னார். அப்போது தான் எனக்கு வாட்ச்மேன் ஞாபகம் வந்தது. கேட்டால் இரு நாட்களாக வேலைக்கு  வரவில்லை என்றார்கள்.
இரண்டு நாட்கள் கழித்து கேட்டபோது அவன் உடல்நலமில்லாமல் காலமாகி விட்டான் என்று கேள்விப் பட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எங்களை அவன் மூலம அந்த அழகிய மணவாளப்  பெருமாள் வரவழைத்து அருள்பாலித்து உள்ளார். என்னே அவன் கருணை!!!
அதற்குப் பிறகு எங்கள் கண்கண்ட தெய்வம் அழகிய மணவாளப்பெருமாள் தான்.

இந்த பெருமாளைப் பார்த்த பிறகு தான் என்னுடைய நண்பரின் மாப்பிள்ளைக்கு விசா  கிடைத்ததால் தான் நாங்களே இந்த பெருமாளுக்கு நாங்க இந்தப் பெயரை வைத்தோம்.
திருச்சியில் இருந்து மணச்சநல்லூர் போய், அங்கிருந்து கோபுரபட்டி என்ற கிராமத்திற்கு  போகிற வழியில் அழகியமணவாளம் உள்ளது.
எங்கள் வீட்டிற்கு வருபவர்கள் எல்லோரும் அவரை ஒருதடவை தரிசிக்காமல் செல்வதில்லை  என்றாள் பார்த்துக் கொள்ளுங்கள்
ஏன் இந்த விபரங்களை எழுதிக்கொண்டு இருக்கும் போதே மும்பையில் இருந்து என் தங்கையிடமிருந்து ஒரு போன்.
"ஒரு சந்தோஷ சமாசாரம், பாபு"
"சொல்லு"
"பத்து வருஷமாக பெரியவளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது உனக்குத் தெரியுமே, நான் அங்கு உன்னோடு அழகியமணவாளப் பெருமாளிடம் வேண்டிக் கொண்டது  இப்போ பலித்து விட்டது பாபு. அவள் இப்ப மாசாம இருக்காள்"
"மிக்க சந்தோஷம்.மாலினி, வாழ்த்துக்களை அவளிடம் சொல்லு" என்று போனை வைத்தேன்.

என்ன அழகியமணவாளம் கிளம்பிட்டிங்களா??
உங்களுக்கும், வேண்டியவர்களுக்கும் விசா கிடைக்க அந்த அழகியமணவாளன் அருள் தரட்டும்.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகியமணவாளன்

ஞாயிறு, ஜனவரி 15

சாதனம், சாத்தியம் என்ன வித்தியாசம்?

 

சாதனம், சாத்தியம் என்ன வித்தியாசம்?

18122011day2-2
ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து எடுக்கப்பட்டது
ஒரு ஓட்டப்பந்தய வீரன் என்ன எதிர்பார்ப்பான்?
ஓட்டப் பந்தயத்தில் முதலாக வரவேண்டும். முதல் பரிசு வாங்க வேண்டும்.
எல்லோரையும் விட தான் முன்னதாக இருக்கவேண்டும். இதுதான் அவனின் சாத்தியம்.

இந்த சாத்தியத்தை அடைய அவன் எந்த சாதனத்தை பயன்படுத்துவான்?
தினமும் காலையில், மாலையில் ஓடி, ஓடி பயிற்சி எடுப்பான்.உடல் நன்றாக இருக்க சரியான ஆகாரத்தை எடுத்துக் கொள்வான். இந்த வருடம் முதலாக வந்து விட்டோம் என்று சோம்பி இருக்கமுடியாது.
அடுத்த வருடம் இதைவிட அதிகமான வேகத்தில் வர முயற்சி செய்வான்.
எனவே சாத்யத்தை (முதன்மை இடம்) தக்கவைக்க, சாதனத்தை (பயிற்சிகளை) நிறுத்தமுடியாது.
ஸ்ரீரங்கத்தில் இருபது நாட்கள் வைகுண்ட ஏகாதசி உத்சவம் நடக்கிறது. அதற்காக வெளியூர்களில் இருந்து நிறையப் பேர் வருவார்கள். அவர்கள் எத்தனை நாட்கள் இங்கு இருக்கமுடியும். ரங்கனை ஆசைதீர அனுபவிக்கவேணும் என்று நினைப்பார்கள்.
இது சாத்தியம்.

ஆனால் எத்தனை நாட்கள் இருக்க முடியும்?
உத்சவம் முடிந்து விட்டால் ஊருக்குத் திரும்பித்தான் ஆகவேண்டும் இல்லையா?
காரணம் கேட்டால்
"நிர்பந்தம், சம்பாதிக்க வேண்டாமா? எத்தனை நாட்கள்தான்
இன்னொருவருக்கு (நண்பர்கள் எத்தனை நாட்கள் தான் சாப்பாடு போடுவார்கள்?)
பாரமாக இருக்கலாமா?"
என்றெல்லாம் பேசுவார்கள்.
ஆக சாத்தியத்தை அடைய ஆசைதான்.

ஆனால் சாதனம் கஷ்டமாக இருக்கிறது.


ஒருவன் ஏழு தலைமுறைக்கு, தந்தை சொத்து சேர்த்து வைத்ததை, முறையாக செலவழிக்காமல் வீணடிப்பான். சொத்துதான் இருக்கிறதே, சாப்பாடுக்கு கவலை
இல்லையே, அடையே வேண்டிய சாத்தியமான வைகுந்தத்திற்கு அடைய
முயற்சி எடுக்காமல், சாதனத்திலேயே முழு வாழ்க்கையை வீணடித்துவிடுவான்.

ஆம், நம்முடைய லட்சியம், சாத்தியம் என்ற, புருஷார்த்தம் என்ற, முக்தியை, திரும்பி வராத,பகவானை அடைவதில் இருக்க வேண்டும்.

அதற்காக ஜோதிஷ்டோமய யாகத்தை (சாதனம்) செய்யலாம். நம்முடைய புண்யம் உள்ளவரை வைகுந்தத்தில்  இருப்போம். அது தீர்ந்த பிறகு கீழே விழவேண்டியதுதான்.
பிறகு எப்படித்தான்திரும்பி வராத வைகுந்தம் என்கிற ஆனந்த மயமான இடத்தை
(சாத்தியத்தை) அடைவது?
இயற்பியலில் வெப்ப நிலையை அளக்க வெவ்வேறு  காலங்களில் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளார்கள். அதில் பயன்படுத்தக் கூடிய சாதனம்,வெப்பத்தை அளப்பதற்கு பதிலாக அதுவே வெப்பத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில் குறியாக இருந்தார்கள்.
பல்வேறு ஆராய்ச்சிக்கு பிறகு பல திரவங்களைப் பயன்படுத்திய பிறகு,
பாதரசத்தை

வெப்பமானிகளில் பயன்படுத்தினார்கள்.

சாத்தியத்தை அடைந்தார்கள்.
அதே போல, ஒரு சமயம்,
"உலகத்தை (சாத்யம்) நான் நகர்த்தி விடுகிறேன். ஆனால் நான் நிற்பதற்கும், நகர்த்துவதர்க்கும்
எனக்கு கோல் (சாதனம்) கொடுங்கள"
என்றான் ஒரு அறிஞன்.
அதேபோல பல காலமாக இறைவனை அடைவது என்ற சாத்தியத்தை அடைய
பல உபாயங்களை சம்ஸ்கிருத வேதங்களும், திராவிட வேதங்களும் நமக்கு சொல்லி இருக்கின்றன.
கர்ம,ஞான,பக்தி யோகங்கள் மூலமாக இறைவனை அடையலாம் என சமஸ்கிருத வேதங்கள் சொல்லி இருக்கின்றன. உபாசன மூலம் பகவனை அடை. தபஸ் மூலம் பகவானை அடை என்கிறது சம்ஸ்கிருத வேதங்கள் சொல்கின்றன.
இது அப்படி என்றால் ஓட்டை படகில் பயணம் செய்வது போல என்கிறார்கள்.
ஆனால் திராவிட வேதமான திவ்யப் பிரபந்தங்கள், ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்கள்
அவ்வாறு சொல்லாமல்,
           "சாத்யத்தையே சாதனமாக கொள்"
           "அவனையே சரண் என்று அடைந்து விடு, அவனே   

            உன்னை நோக்கி வந்து   உன்னை ஆட்கொள்வான்"
           "அவனை அடைந்த பிறகு (சாத்தியத்தை), முயற்சி 

            (சாதனம்) செய்"
          "நாம் ஒரு அடி அவனை நோக்கி எடுத்து வைத்தால், அவன் நான்கு அடி நம்மை   நோக்கி வருகிறான்"
என்றார்கள் ஆழ்வார்களும் ஆசார்யர்களும்.
அதில் முதன்மையானவர் இராமானுஜர்,வேதாந்த தேசிகர், கோயில் மணவாள முனிகள் போன்றவர்கள்.
ஆம், நாமும் அவனையே சாதனமாகக் கொண்டு,அவனையே சாத்தியம் என்று அடைவோம்
உய்வோம்.

புதன், ஜனவரி 11

திருக்கோவிலூர் அனுபவம்

 திருக்கோவிலூர் அனுபவம்

அன்று மழை. இடியுடன் கூடிய மழை. ஊழி பெருநீர் என்பார்களே அப்படி ஒரு மழை.
ஆழ்வார்கள் பாடிய பாசுரத்தில் உள்ளது போல் அப்படி ஒரு மழை.
         கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்
             கதுவாய்ப்பட நீர்முகந்து ஏறி எங்கும்
         குடவாய் பட நின்று மழை பொழியும்
             கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
கடலில் இருக்கும் எல்லாத் தண்ணீரையும் மேகங்கள் மொண்டு கொண்டு அப்படியே மழையாய் பெய்தால் எப்படி இருக்குமோ அந்த அளவு மழை பொழியும் நாள்.இருட்டோ கண்ணனைப் மையிருட்டு. எடுத்து ஒட்டிக கொள்ளலாம் போல இருட்டு. யார் முன்னர் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாத இருட்டு. அந்த சமயத்தில், எங்கு ஒதுங்குவது என்று தெரியாமல், சரி இந்த இடைகழி (இடைகழி என்றால் தெரியாதவர்கள்
வீட்டில் உள்ள முன்னோர்களைக் கேட்கவும்.அதனை ரேழி என்றும் அழைப்பர்.) நமக்குப் போதும்  என்று, அந்த சிறிய இடத்தில் மழைக்காக ஒதுங்குவோம் என நினைத்து ஒதுங்கினார்.
அப்போது பார்த்து மற்றொருவரும் அருகில் வந்து, முன்னவரிடம், "நானும் ஓதுங்கலாமா?"
என்று வினவினார்.
முன்னர் ஒதுங்கின நபரும்
"ஒருவர் உறங்கலாம் ,இருவர் நிற்கலாம். எனவே நீங்களும் உள்ளே வாருங்கள்"
என்று வந்தவருக்கு இன்முகம் தந்து அருளினார்.
மழையோ நின்றபாடில்லை.
அந்த சமயம் பார்த்து, மூன்றாமவர், அதே இடத்துக் வந்து, யாரோ இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, அவர்களிடம்,
"நாமோ ஒரு ஏழை, வெளியே மழை எனவே இந்த இடத்தில் நாம் ஒதுங்கலமா?"
என்று வினவினார்.
முன்னர் ஒதுங்கி இருந்த இருவரும், கும்மிருட்டில் ஒருவருக்கொருவர் பார்த்துக்  கொள்வதாக நினைத்துக் கொண்டு,
"ஒருவர் உறங்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்." என்றனர்.
எவ்வளவு பெருந்தன்மை பாருங்கள். நாமளா இருந்தா என்ன பண்ணுவோம்? இங்கே ஒன்னும் இடம் கிடையாது. எங்களுக்கே இடம் கிடையாது, நீங்க வேறே ஹிம்சை பன்னாதிங்கோ வேறே எங்கேயாவது இடத்தைப் பார்த்துப் போமையா, என்போம்.மூவரும் அந்த இடைகழியில் சிறிது நேரத்தைப் போக்கினர்.
சிறிது நேரத்தில் மூவருக்கும் மூச்சு முட்டத் தொடங்கியது. ஏனெனில் நாலாவதாக ஒருவர் வைத்திருப்பதை முவரும் உணர்ந்தார்கள்.
முதலாமவர், "யாரப்பா இது, இப்படி நெருக்குவது? மூன்று பேருக்கு மேல நிற்கமுடியாத இடத்தில் நாலாவது நபர?" என்றார்.
இரண்டாமவர், "இந்த இருட்டில் யார் வந்துள்ளார் என்பதை விளக்கை
ஏற்றிப் பார்த்து விடுவோம். அது சரி விளக்குக்கு எங்கே போவது?"
முதலாம்வர்,  "விளக்கு என்பதே விளக்கத்தானே? இல்லாத ஒன்றை வைத்து நாமே ஏற்ற முடியுமா பார்ப்போம்." என்று சிந்தித்துக் கொண்டே இருக்கும் போது, "ஓம் நமோ நாராயணாய " என்ற எட்டு எழுத்து மந்திரத்தில் "நம" என்ற "ந" என்றது "இல்லை", "ம" என்றதும், "இல்லை"
"இல்லை இல்லை", எல்லாம் எனதில்லை, எல்லாம் பரம்பொருள் தானே கொடுத்தது, எனவே  அவனை வைத்தே விளக்கை ஏற்றுவோம்"
என்று சிந்தித்து,
"உலகத்தேயே அகல் விளக்காய் ஏற்றி, அதில் சுழ்ந்த கடலையே நெய்யாக்கி, கதிரவனேயே  நெருப்பாக்கி (திரியாக்கி), சக்கரம் கொண்ட முதல்வனின் திருவடிக்கு சொல் மாலை சூட்டி, மனித குலத்தின் இருளை நிக்குவோம்",
என்று விளக்கில் இருந்தே விளக்கை எடுக்கிறார்
         வையம் தகளியா வார்கடலே நெய்யாக
                  வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
         சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
                  இடராழி நீங்குகவே என்று!
என்று முதல் பாசுரம் தோன்றியது.
உடனே இரண்டாமவர், முதல் விளக்கிலிருந்து விளக்கை எடுத்து, தன் பங்குக்கு
       "வாழ்வைத் தாங்கும் அன்பை அகல் ஆக்கி, இறைவனிடம் ஆர்வம் ஒன்றையே நெய்யாக்கி
சிந்தனையையே திரியாக்கி, நாராயணனுக்கு ஞானத் தமிழில் சொன்னேன்"
என்று ,
            அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
                இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
            ஞானச் சுடர்விளக் கேற்றினேன்! நாரணற்கு
                ஞானத் தமிழ்புரிந்த நான்
அந்த இரண்டு விளக்குகளும்  வந்திருப்பவன் யார்  என்பதை உணர்த்திவிட்டன.
மூன்றாமவர்  உடனே,
   " உலகனைத்தும் ஆளும் மகாலக்ஷ்மியைக் கண்டேன், அதுவும் ஒப்பிலாத அப்பன் திரு
மேனியில்,திருமார்பில் கண்டேன், சங்கு சக்கரங்களுடன் பொன்னாழி கண்டேன்,
             திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
                 அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
             பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
                  என்னாழி வண்ணன்பால் இன்று
மூவரும் உணர்ந்து கொண்டனர் வந்திருப்பது திருமால். தங்களை உய்யக்
கொள்வதற்குதான் வந்திருக்கிறான்  என்று உணர்ந்தனர்.
ஆக இத்தனை நேரம் நாம் சொல்ல வந்தது முதலாழ்வார்கள் பொய்கையாழ்வார்,
பூத்தாழ்வார், பேயாழ்வார்  ஆகியோர்களைப் பற்றித்தான். இடைகழி என்ற இடம்
திருகொவிலூர் திவ்யஸ்தலம் தான்.
ஆம், திவ்யப் பிரபந்தம் பிறந்த இடம் தான் திருகோவிலூர். பிரபந்தங்களுக்கு ஆரம்பம் திருக்கோவிலூர்.
உலகளந்த பெருமான் தன் கையில் சக்கரத்தையும் சங்கையும் மாற்றிப் பிடித்துள்ளான்.
ஆம் வலக்கையில் சங்கையும், இடக்கையில் சக்கரத்தையும் பிடித்துள்ளான்.
பூங்கோவல் நாச்சியார் என்பது தாயாரின் திருநாமம். இன்றைக்கெல்லாம் தாயாரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நம்முடைய கண் தாயாருக்கு பட்டு விடும் போல அவ்வளவு அழகு போங்கள்.
முதலாழ்வார்கள் மூவரும் மூன்று திருவந்தாதிகளைப் பாடி உள்ளார்கள்.


ஆக மூன்று ஆழ்வார்களுக்கும் இடம் கொடுத்த இடைகழி 2012 ம் ஆண்டு ஜனவரி திங்கள்  8 ம் தேதி எங்களுக்கும் இடம் கொடுத்தது என்றால் எங்கள் பாக்கியம்.
ஆம் நாங்கள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண சபா அன்பர்கள்
சுமார் 45 பேர், பாண்டிச்சேரி ஸ்ரீ. ஜனார்த்தனன்  தலைமையிலான சஹஸ்ரநாம சபா நடத்தும்  அகண்ட பாராயனத்தில் கலந்து கொண்டோம். அவர்கள்தான் திருக்கோவிலூர் பூங்கோவல் நாச்சியார்
சமேத தேகளிசன், (உலகளந்த திருவிகரமனுக்கு மற்றொரு பெயர்) சந்நிதியில் 12 முறை  சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்யும் பாக்கியம் பெற்றோம்.
அதிலிருந்து சில காட்சிகள் இந்து இடம் பெற்றுள்ளன.

திருக்கோவிலூர் திருவிக்ரமன்
திருக்கோவிலூர் சியர் ஸ்வாமிகள்
திருக்கோவிலூர் திருவிக்ரமன் கோபுரம்


மகளிர் அணி
மகளிர் அணி
ஆடவர் அணி
மகளிரணி
புதன், ஜனவரி 4

யார் மீது குற்றம்? என் மீது தான்!

யார் மீது குற்றம்? என் மீதுதான்!!!
ஸ்ரீ உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உரையில் இருந்து எடுத்தது. அவர்களுக்கு அடியேனுடைய
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருவன் தப்பு செய்தால், அதனைத் தான்தான் செய்தது என ஒத்துக் கொண்டால் அவன் உத்தமனாம்.
அவனே தான் தவறு செய்துவிட்டு தான் தவறு செய்யவில்லை என்று அடம் பிடித்தால் அவன் உண்மையானவன் இல்லையாம்.
அவனே தான் தவறு செய்யாவிட்டாலும், தான் தவறு செய்துவிட்டதாக மற்றவர் சொன்னால் அவன் கொண்டாடப் படவேண்டியவனாம்.அவன்தான் உத்தம புருஷனாம்.
இதற்கு உதாரணமாக பரதனைக் கூறுகிறார்  ஸ்வாமிகள்.
எப்படிங்கிரீர்களா? பார்ப்போம்.
அயோத்தியில் ஒரு காட்சி.
மந்தரை (கூனி), ராமனுக்கு அடுத்த நாள் பட்டாபிஷேகம் நடக்கப் போகிறது என்பதைக் கேள்விப் படுகிறாள். ராமன் சிறுவனாக இருந்த போது,உண்டி வில்லை வைத்து விளையாடும் போது கூனி மீது தவறுதலாக விழுந்து விடுகிறது. இதனைப் பார்த்த நண்பர்கள் கேலி செய்கிறார்கள்.
கூனிக்கு கோபம பொத்துக் கொள்கிறது.ஆனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. தக்க தருணத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறாள்.
தற்போது நேரம் வந்துவிட்டது என்று அறிந்து உடன் கைகேயியை நோக்கி ஓடுகிறாள்.
கைகேயியிடம் பலவிதத்திலும் அவளது மனத்தைக் கரைத்து, பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்றும், ராமனைக் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தசரதன் கொடுத்த  வரங்களை வைத்துக் கேள்  என்று அவளை கரைக்கிறாள்.
வேறு வழில்லாமல் தசரதனும் கைகேயிக்கு வரங்களைக் கொடுத்துவிடுகிறான்.
ராமன் மீது அடங்காப் பற்று கொண்ட குலசெகரபெருமான்
  வந் தாளி னினை வணங்கி வளநகரம்
    தொழுதேத்த மன்ன னாவான்
  நின்றாயை, அறியணைமே லிருந்தாயை
   "நெடுங்கானம் படரப் போகு"
 என்றாள், எம் இராமாவோ! உனைபயந்த
  கைகேசி தன்சொற் கேட்டு,
 நன்றாக நானிலத்தை யாள்வித்தேன்
  நன்மகனே! உன்னை நானே.
என்று கைகேயின் வரத்தைக் கேட்டு தசரதன் புலம்புவதாகப் பத்துப்
பாசுரங்களை அமைத்துள்ளார்."தந்தை சொல் மிக்க மாத்திரம் இல்லை " என்று தந்தையின் ஆணைக்கு இரங்க, தன் தம்பி இலக்குவணன் மற்றும் சீதையுடன் காட்டுக்கு எகுகிறான் ராமன். இந்த விபரங்களைக் கேட்ட பரதன், தன் மாமன் வீட்டிலிருந்து கடிதாக அயோத்திக்கு வருகிறான்.
யாரால் இந்தத் தவறு நடந்து இருக்கும் என்று தனக்குள் கேள்வியை கேட்கிறான்.
"எல்லாவற்றுக்கும் மந்தரை தான் காரணமாக இருக்க வேண்டும். அவள் தான் என் தாயிடம் போய் ராமனிடம் இருந்த கோபத்தால், ராமனின் பட்டாபிஷேத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக, எனக்கு பட்டம் கட்டவேண்டும் என்று கேட்டு இருக்கிறாள்.
எனவே இதற்கெல்லாம் காரணம் மந்தரை தான்."
"இருக்காது,இருக்காது,அவள் என்ன செய்வாள், என் மீது கொண்ட பாசத்தாலும், என் தாயாரின் மீது கொண்ட அன்பினாலும் அவள் அப்படிக் கேட்டிருப்பாள். என் தாயாருக்கு எங்கே புத்தி போயிற்று? ராமனும், பரதனைப் போல என் மகன் தான். பரதன் நாட்டை ஆண்டாள் என்ன, ராமன் நாட்டை ஆண்டாள என்ன, என்று மந்தரையிடம் சொல்லி இருக்கவேண்டாமா?
மந்தரையை இவ்வளவு தூரம் பேச விட்டிருக்கலாமா? எனவே என் தாயார் தான் குற்றம் புரிந்தவர்கள். அவர்களை மன்னிக்கவே முடியாது"
"ச்சே,ச்சே, தாயாரைப் போய் குற்றம் சொல்கிறேனே? தாயை குற்றம் சொல்லி விட்டு எந்த நரகத்திற்கு நான் போகவேண்டும்? அன்னை எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்னை வளர்க்க? பிள்ளைப் பாசத்தால் மந்தரை சொன்னவுடன் அவர்களையும் அறியாமல் எனக்குப் பட்டம்கட்ட வேண்டும் என்று கேட்டிருப்பார்கள்."பின்னே யார் தான் காரணமாக இருக்க வேண்டும்?"
"எல்லாவற்றுக்கும் என் தகப்பனார் தான் காரணம். அவர்கள் சொல்லி இருக்க வேண்டாமா? மூத்த மகன் இருக்கும் போது இளைய மகனுக்கு பட்டம் கட்டலாமா? தன் தாயைக் கடிந்து கொண்டிருக்க வேண்டாமா? தாயை சமாதானப் படுத்தி ராமனுக்குத் தான்  பட்டாபிஷேகம் என்று சொல்லி இருக்க வேண்டாமா? எல்லாவற்றுக்கும் தந்தை தான் காரணம்"
"இருக்காது, இருக்காது. தந்தை என்ன செய்வார்? தாய்க்கு கொடுத்த வரம் அவரை ஒன்றும் செய்ய விடவில்லை.அவர் என்ன சொன்னாலும்
என் தாயார் கேட்கிற நிலையில் இருந்து இருக்க மாட்டார். அதனால் தான் இத்தனை விபரீதமும். அவரைக் குற்றம் சொல்லி என பயன்?
"தமையன் ராமன் இதற்கெல்லாம் காரணம்.அவர் தந்தைக்குச் சொல்லி இருக்க வேண்டாமா? மூத்த மகன் இருக்கும் போது இளையவனுக்கு பாட்டாபிஷேகம் செய்வது எங்கும் நடக்காது. தன்னுடைய உரிமையை நிலை நாட்டி இருக்க வேண்டாமா?"
"தமையன் என்ன செய்வான்? அவன் என்றைக்கு தந்தைக்கு எதிராக செயல்ப்பட்டு இருக்கிறான்? தாயும், தந்தையும் இரு கண்கள் அல்லவா? அவன் எள் என்றால்,எண்ணையாக செயல்படுபவன். தந்தை சொல் கேட்காத மகன் என்ற பெயரை பெறுவானா? எனவே அவன் செய்ததும் சரிதான்.
"பின் யார் தான் காரணம்? மந்தரை, தன் தாயார், தந்தை, மற்றும் தமையன் என்று யாருமே  காரணமில்லை என்றால் யார் தான் காரணமாகும்?
"காரணம் இல்லாமல் காரியம் நடந்து இருக்குமா? எல்லாவற்றுக்கும் நான் தான் காரணம். இவ்வளவு விஷயங்கள் அடந்து இருக்கும் போது நாம் இந்த இடத்தில் இல்லாதது தான் காரணம். நான் இங்கே இருந்திருந்தால் தன் தாயை அனுப்பி இருப்பேனா? தாயை தந்தையிடம்  வரம் கேட்க அனுமதித்திருப்பேனா? என்னையே நாம் நொந்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?"
எனவே எல்லாவற்றுக்கும் தன் மேலேயே தவறை போட்டுக்கொள்கிறான்.
இவ்வாறு தான் தவறு செய்யாவிட்டாலும் தவறைத் தன் மீது அனுமதிக்கும் பரதன் எல்லோரையும்  விடச் சிறந்தவன் தானே?

திங்கள், ஜனவரி 2

கோவர்த்தனம்


கோவர்த்தனம்:
ராமனின் பாதுகைகளுக்கு ஏற்பட்ட பாக்கியம் கோவர்த்தன மலைக்கும் ஏற்பட்டுள்ளது.
எப்படிங்கிறிகளா?
ராமனுக்கு பட்டாபிஷேகம் கிடையாது,பரதனுக்குதான் பட்டாபிஷேகம் செய்யவேண்டும், ராமன் 14 ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டும், என்று கைகேயி தசரதனிடம் வரம் வேண்டுகிறாள். மாமன் வீட்டுக்குச் சென்ற பரதன், உடனே நாட்டுக்குத் திரும்புகிறான். தன்னுடைய தாயார் மூலம் விஷயத்தைக் கேட்டு கோபம கொள்ளுகிறான். தாயாரைக் கடிந்து கொண்டு ராமனைப் பார்த்து நாட்டுக்குத் திரும்புவதற்கு விண்ணப்பம் செய்கிறான்.ராமனும் பரதனை பலவிதத்திலும் சமாதானம் செய்து நாட்டுக்குத் திரும்பி செல்லும்படி கேட்டுக்கொள்கிறான். இருந்தும் சமாதானம் ஆகாத பரதன், கடைசியாக ராமனின் பாதுகையை விரும்பிக் கேட்கிறான். அதை வைத்துக் கொண்டு அதுவே ராமன் என்ற எண்ணமாகக் கொண்டு நாட்டை ஆள்கிறேன் என்று சொல்லி ராமனின் பாதுகையை தன்னுடைய சிரத்தின் மேல் வைத்துக் கொண்டு நாட்டுக்குத் திரும்பிகிறான். ஆக ராமனின் பாதுகை பரதனின் சிரசுக்கு ஏறியது.
ஒருமுறை புலஸ்திய மகரிஷி த்ரோனாச்சல மலையை அடைந்தார்.அந்த மலையின் அழகையும் அதன் புதல்வனான கோவர்த்தன மலையின் அழகையும் ரசித்து, அதனை தன்னுடன் காசிக்கு எடுத்துச் செல்லும் நோக்குடன் த்ரோனாச்சலத்திடம் அனுமதி பெற்றார். கோவ்ர்த்தனமலை ரிஷியுடன் செல்ல ஒரு நிபந்தனை விதித்தது.அதாவது தன்னை தூக்கிச் செல்லும் போது வழியில் எங்கு கீழே வைத்தாலும் அங்கேயே நிலைத்து விடுவேன் என்பதுதான் அது. நிபந்தனைக்கு உட்பட்டு, ரிஷி தன தபோபலத்தால் தூக்கிக் கொண்டு போகும் போது, விருந்தாவனத்தைக் கடக்கும் போது,மலை கனத்துப் போக, ரிஷியும் தூக்க முடியாமல் கீழே வைத்தார்.மறுபடியு, தூக்க முடியாமல் போக, "நீ தினமும் எள்ளளவு தேய்ந்து போவாய்" என சாபம் இடுகிறார். மலையும் கண்ணனின் கைகளில் ஏற நினைத்து, இந்த சாபத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டது. தினமும் தேய்ந்து கொண்டே வந்து, தற்போது 80 அடி உயரமே உள்ளது. இது இப்படி இருக்க, ஆய்ப்பாடியில் ஆண்டுதோறும் இந்திரனுக்கு சோறு சமைத்துப் படைப்பார்கள். கண்ணன் பிறந்த பிறகு , இதனைத் தடுத்து, "எல்லா நன்மைகளும் செய்யும் கோவர்த்தனமலைக்கே இனி சோற்றைப் படைப்போம்," என்று கூறுகிறான். ஆயர்களும் அவ்வாறே ஒத்துக் கொண்டு கோவர்த்தன மலைக்கே படைத்தார்கள். கோபமடைந்த இந்திரன் ஏழு நாட்களுக்கு அடை மழையை பொழிந்து ஆயர்பாடியை வெள்ளமாக்கினான். இந்த ஆபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றவேண்டும் என ஆயர்கள் கண்ணனை இறைஞ்ச கண்ணனும் தன சிறு விரல் நுனியால் கோவர்த்தன மலையை அனாயாசமாக தூக்கி குடையாகப் பிடித்தான்.குன்றேடுத்து மாரி காத்ததை அறிந்து அவமானப்பட்ட இந்திரன் கண்ணனிடம் மன்னிப்பு வேண்டி கண்ணன் கையில் இருந்த கோவர்த்தன மலைக்கும், கண்ணனுக்கும் "கோவிந்த பட்டாபிஷேகம்" செய்தான். இதனால் கண்ணனுக்கு "கோவிந்தன்" என்ற பட்டப்பெயர் கிடைத்தது. ஆக ராமன் பாதுகைக்குக் கிடைத்த பாக்கியம் கோவர்த்தன மலைக்கும் கிடைத்தது என்று அதைத்தான் முன்னர் சொன்னோம். இந்த சோறு படைக்கும் உத்சவம் "அன்னக் கூடை உத்சவம்" என்று பல கோயில்களில் இன்றும் நடைபெறுகிறது.
 கோவர்த்தன மலைக்கு திருமஞ்சனம்  நடைபெறுதல் 
இதனை பெரியாழ்வார்,    
    அட்டுகுவி சோற்றுப் பருப்பதமும்
                   தயிர் வாவியும் நெய்யளரும் அடங்க
    பொட்டதுற்றி மாரிப்பகை புணர்த்த
                 பொருமா கடல்வண்ணன் பொருத்தமலை
     வட்டத்தடங்கண் மடமான்கன்றினை
                     வலைவாய்ப் பற்றிக்கொண்டு குறமகளிர்
     கொட்டைத்தலைப்பால் கொடுத்து வளர்க்கும்
                     கோவர்த்தனம் என்னும் கொர்ரக்குடையே."
என்று ஆநிரைகள், மற்றும் ஆய்ப்பாடியில் உள்ள எல்லோரையும் தன குடைக்குள் கொண்டுவந்து எல்லோரையும் காத்தான் என்று பரவசமாகப் பாடுகிறார். 21 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த மலையை "பரிக்ரமா", அதாவது ப்ரதிக்ஷிணம் செய்வது சிறந்தது.நாங்கள் போய் இருந்த போது சிலர் பக்தியுடன் கீழே விழுந்து ஸாஷ்டாங்கமாக ப்ரமாணம் செய்து கொண்டே வலம் வருகிறார்கள். பெரியாழ்வார் தன்னுடைய திருமொழியில் 12 பாசுரங்கள் கோவர்த்தனத்து எனப் பாடியுள்ளார். பரிக்ரமா செய்து கொண்டே இந்த மலையைச் சுற்றி உள்ள எல்லா இடங்களையும் பார்த்து விடலாம்.இங்கு உள்ள முக்கியமான சில இடங்களைப் பார்ப்போம்.

குசும் ரோவர் 

1.குஸும் சரோவர்:
கோட்டை கொத்தளங்களுடன் அழகிய புஷ்கரணி கம்பீரமாகக் காட்சி தருகிறது.கண்ணன் இக்குளத்தில் மலர்ந்து இருக்கும் மலர்களைப் பறித்து கொபியர்களுக்குச் சுட்டி மகிழ்வானாம்.இங்கு உத்தவருக்கு ஓர் விக்கிரஹம் உள்ளது.இந்த அனுபவத்தை கண்டு வியந்த உத்தவர் "இங்குள்ள செடி கொடிகளுள் ஒன்றாகப் பிறக்கமாட்டோமா?" என்று மயங்கினாராம்.
2.நாரத வனம்:
நாரதர் தன ஆண் உருவத்திலேயே கண்ணனை சேவிக்க கோவர்த்தனம் வந்தார்.ஆனால் பிரேம பாவத்தில் உள்ள பெண்களுக்கே கண்ணன் சேவை சாதிப்பான் என்று கேள்விப்பட்டு வ்ருந்தா தேவியால் அருளப்பட்டு பெண் உருக்கொண்டு கண்ணனை தரிசித்த இடம்.
3,கிரிதரிசனம்:
கிரிவாத்தின் போது சில இடங்களில் மலை உயர்ந்தும், சில இடங்களில் தாழ்ந்தும் காட்சி அளிக்கிறது. பலரும் மிக்க மரியாதையோடு கால் படாமல் கையால் தொட்டே மலையை நமஸ்கரிக்கிறார்கள்
4.அனியோரா:
பெரியாழ்வார் பாடிய அன்னக்கூட உத்சவம் நடந்த இடம்.
5.மானசி கங்கா:
கங்கை கண்ணனின் லிலைகளைப் பார்ப்பதற்காக யமுனையிடம் வேண்டி உருவான இடம் மானாசி கங்கா.

கோவிந்த குண்டம் 
6.கோவிந்த குண்டம்:
குன்றெ டுத்து  மாரி காத்ததை அறிந்து அவமானப்பட்ட இந்திரன் கண்ணனிடம் மன்னிப்பு வேண்டி கண்ணன் கையில் இருந்த கோவர்த்தன மலைக்கும், கண்ணனுக்கும் "கோவிந்த பட்டாபிஷேகம்" செய்தான். இதனால் கண்ணனுக்கு "கோவிந்தன்" என்ற பட்டப்பெயர் கிடைத்தது.
7.உத்தவ டிலா:
இவ்விடத்தில் உத்தவர் தாமே ஆசைப்பட்டபடி புல்லாகவும்,செடி கொடிகளாகவும் கிடப்பதாக ஐதீகம். 8.ஸ்யாம குண்டம் மற்றும் ராதா குண்டம்: கண்ணன் காலை உருவில் வந்த அரிஷ்டாசுரனைக் கொன்றதால், வனுக்கு தோஷம் ஏற்பட்டதால் பரிகாரமாக புனித நதிகளில் நீராட வேண்டும் ஏன் கோபிகைகள் சொல்ல,கண்ணன் சிரித்துக் கொண்டே, எல்லா புனித நீர்களையும் இங்கு வரவழைத்தான் அதுவே ஸ்யாம குண்டம் எனபட்டது. ஆனால் கண்ணன் கோபியர்களுக்கு தோஷம் வந்துவிட்டது என்று சொல்லி அவர்களும் புனித நீராட புனித நதிகள் "ராதா குண்டம்' என்று ஆயின. 9.ஜிஹ்வா ஸிலா:
கோவர்த்தன மலையின் நாக்கு இவ்விடத்தில் உள்ளது. அதுவே ஜிஹ்வா ஸிலா எனப்படுகிறது.
10.ஸ்யாம்குடி:
இது மரங்களடர்ந்த "ரத்னா ஸிம்ஹாசனம் " என்னும் இடத்திற்கு அருகில் உள்ளது. இங்கே கருப்பு வண்ணக் கண்ணன் கருப்பு நிற கஸ்தூரியை உடல் முழுதும் பூசிக்கொண்டு கறுத்த ஆடை அணிந்து விளையாடினான். கோபிகைகளால் கூட அடையாளம் காண முடியவில்லையாம்.