திங்கள், ஜனவரி 2

கோவர்த்தனம்


கோவர்த்தனம்:
ராமனின் பாதுகைகளுக்கு ஏற்பட்ட பாக்கியம் கோவர்த்தன மலைக்கும் ஏற்பட்டுள்ளது.
எப்படிங்கிறிகளா?
ராமனுக்கு பட்டாபிஷேகம் கிடையாது,பரதனுக்குதான் பட்டாபிஷேகம் செய்யவேண்டும், ராமன் 14 ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டும், என்று கைகேயி தசரதனிடம் வரம் வேண்டுகிறாள். மாமன் வீட்டுக்குச் சென்ற பரதன், உடனே நாட்டுக்குத் திரும்புகிறான். தன்னுடைய தாயார் மூலம் விஷயத்தைக் கேட்டு கோபம கொள்ளுகிறான். தாயாரைக் கடிந்து கொண்டு ராமனைப் பார்த்து நாட்டுக்குத் திரும்புவதற்கு விண்ணப்பம் செய்கிறான்.ராமனும் பரதனை பலவிதத்திலும் சமாதானம் செய்து நாட்டுக்குத் திரும்பி செல்லும்படி கேட்டுக்கொள்கிறான். இருந்தும் சமாதானம் ஆகாத பரதன், கடைசியாக ராமனின் பாதுகையை விரும்பிக் கேட்கிறான். அதை வைத்துக் கொண்டு அதுவே ராமன் என்ற எண்ணமாகக் கொண்டு நாட்டை ஆள்கிறேன் என்று சொல்லி ராமனின் பாதுகையை தன்னுடைய சிரத்தின் மேல் வைத்துக் கொண்டு நாட்டுக்குத் திரும்பிகிறான். ஆக ராமனின் பாதுகை பரதனின் சிரசுக்கு ஏறியது.
ஒருமுறை புலஸ்திய மகரிஷி த்ரோனாச்சல மலையை அடைந்தார்.அந்த மலையின் அழகையும் அதன் புதல்வனான கோவர்த்தன மலையின் அழகையும் ரசித்து, அதனை தன்னுடன் காசிக்கு எடுத்துச் செல்லும் நோக்குடன் த்ரோனாச்சலத்திடம் அனுமதி பெற்றார். கோவ்ர்த்தனமலை ரிஷியுடன் செல்ல ஒரு நிபந்தனை விதித்தது.அதாவது தன்னை தூக்கிச் செல்லும் போது வழியில் எங்கு கீழே வைத்தாலும் அங்கேயே நிலைத்து விடுவேன் என்பதுதான் அது. நிபந்தனைக்கு உட்பட்டு, ரிஷி தன தபோபலத்தால் தூக்கிக் கொண்டு போகும் போது, விருந்தாவனத்தைக் கடக்கும் போது,மலை கனத்துப் போக, ரிஷியும் தூக்க முடியாமல் கீழே வைத்தார்.மறுபடியு, தூக்க முடியாமல் போக, "நீ தினமும் எள்ளளவு தேய்ந்து போவாய்" என சாபம் இடுகிறார். மலையும் கண்ணனின் கைகளில் ஏற நினைத்து, இந்த சாபத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டது. தினமும் தேய்ந்து கொண்டே வந்து, தற்போது 80 அடி உயரமே உள்ளது. இது இப்படி இருக்க, ஆய்ப்பாடியில் ஆண்டுதோறும் இந்திரனுக்கு சோறு சமைத்துப் படைப்பார்கள். கண்ணன் பிறந்த பிறகு , இதனைத் தடுத்து, "எல்லா நன்மைகளும் செய்யும் கோவர்த்தனமலைக்கே இனி சோற்றைப் படைப்போம்," என்று கூறுகிறான். ஆயர்களும் அவ்வாறே ஒத்துக் கொண்டு கோவர்த்தன மலைக்கே படைத்தார்கள். கோபமடைந்த இந்திரன் ஏழு நாட்களுக்கு அடை மழையை பொழிந்து ஆயர்பாடியை வெள்ளமாக்கினான். இந்த ஆபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றவேண்டும் என ஆயர்கள் கண்ணனை இறைஞ்ச கண்ணனும் தன சிறு விரல் நுனியால் கோவர்த்தன மலையை அனாயாசமாக தூக்கி குடையாகப் பிடித்தான்.குன்றேடுத்து மாரி காத்ததை அறிந்து அவமானப்பட்ட இந்திரன் கண்ணனிடம் மன்னிப்பு வேண்டி கண்ணன் கையில் இருந்த கோவர்த்தன மலைக்கும், கண்ணனுக்கும் "கோவிந்த பட்டாபிஷேகம்" செய்தான். இதனால் கண்ணனுக்கு "கோவிந்தன்" என்ற பட்டப்பெயர் கிடைத்தது. ஆக ராமன் பாதுகைக்குக் கிடைத்த பாக்கியம் கோவர்த்தன மலைக்கும் கிடைத்தது என்று அதைத்தான் முன்னர் சொன்னோம். இந்த சோறு படைக்கும் உத்சவம் "அன்னக் கூடை உத்சவம்" என்று பல கோயில்களில் இன்றும் நடைபெறுகிறது.
 கோவர்த்தன மலைக்கு திருமஞ்சனம்  நடைபெறுதல் 
இதனை பெரியாழ்வார்,    
    அட்டுகுவி சோற்றுப் பருப்பதமும்
                   தயிர் வாவியும் நெய்யளரும் அடங்க
    பொட்டதுற்றி மாரிப்பகை புணர்த்த
                 பொருமா கடல்வண்ணன் பொருத்தமலை
     வட்டத்தடங்கண் மடமான்கன்றினை
                     வலைவாய்ப் பற்றிக்கொண்டு குறமகளிர்
     கொட்டைத்தலைப்பால் கொடுத்து வளர்க்கும்
                     கோவர்த்தனம் என்னும் கொர்ரக்குடையே."
என்று ஆநிரைகள், மற்றும் ஆய்ப்பாடியில் உள்ள எல்லோரையும் தன குடைக்குள் கொண்டுவந்து எல்லோரையும் காத்தான் என்று பரவசமாகப் பாடுகிறார். 21 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த மலையை "பரிக்ரமா", அதாவது ப்ரதிக்ஷிணம் செய்வது சிறந்தது.நாங்கள் போய் இருந்த போது சிலர் பக்தியுடன் கீழே விழுந்து ஸாஷ்டாங்கமாக ப்ரமாணம் செய்து கொண்டே வலம் வருகிறார்கள். பெரியாழ்வார் தன்னுடைய திருமொழியில் 12 பாசுரங்கள் கோவர்த்தனத்து எனப் பாடியுள்ளார். பரிக்ரமா செய்து கொண்டே இந்த மலையைச் சுற்றி உள்ள எல்லா இடங்களையும் பார்த்து விடலாம்.இங்கு உள்ள முக்கியமான சில இடங்களைப் பார்ப்போம்.

குசும் ரோவர் 

1.குஸும் சரோவர்:
கோட்டை கொத்தளங்களுடன் அழகிய புஷ்கரணி கம்பீரமாகக் காட்சி தருகிறது.கண்ணன் இக்குளத்தில் மலர்ந்து இருக்கும் மலர்களைப் பறித்து கொபியர்களுக்குச் சுட்டி மகிழ்வானாம்.இங்கு உத்தவருக்கு ஓர் விக்கிரஹம் உள்ளது.இந்த அனுபவத்தை கண்டு வியந்த உத்தவர் "இங்குள்ள செடி கொடிகளுள் ஒன்றாகப் பிறக்கமாட்டோமா?" என்று மயங்கினாராம்.
2.நாரத வனம்:
நாரதர் தன ஆண் உருவத்திலேயே கண்ணனை சேவிக்க கோவர்த்தனம் வந்தார்.ஆனால் பிரேம பாவத்தில் உள்ள பெண்களுக்கே கண்ணன் சேவை சாதிப்பான் என்று கேள்விப்பட்டு வ்ருந்தா தேவியால் அருளப்பட்டு பெண் உருக்கொண்டு கண்ணனை தரிசித்த இடம்.
3,கிரிதரிசனம்:
கிரிவாத்தின் போது சில இடங்களில் மலை உயர்ந்தும், சில இடங்களில் தாழ்ந்தும் காட்சி அளிக்கிறது. பலரும் மிக்க மரியாதையோடு கால் படாமல் கையால் தொட்டே மலையை நமஸ்கரிக்கிறார்கள்
4.அனியோரா:
பெரியாழ்வார் பாடிய அன்னக்கூட உத்சவம் நடந்த இடம்.
5.மானசி கங்கா:
கங்கை கண்ணனின் லிலைகளைப் பார்ப்பதற்காக யமுனையிடம் வேண்டி உருவான இடம் மானாசி கங்கா.

கோவிந்த குண்டம் 
6.கோவிந்த குண்டம்:
குன்றெ டுத்து  மாரி காத்ததை அறிந்து அவமானப்பட்ட இந்திரன் கண்ணனிடம் மன்னிப்பு வேண்டி கண்ணன் கையில் இருந்த கோவர்த்தன மலைக்கும், கண்ணனுக்கும் "கோவிந்த பட்டாபிஷேகம்" செய்தான். இதனால் கண்ணனுக்கு "கோவிந்தன்" என்ற பட்டப்பெயர் கிடைத்தது.
7.உத்தவ டிலா:
இவ்விடத்தில் உத்தவர் தாமே ஆசைப்பட்டபடி புல்லாகவும்,செடி கொடிகளாகவும் கிடப்பதாக ஐதீகம். 8.ஸ்யாம குண்டம் மற்றும் ராதா குண்டம்: கண்ணன் காலை உருவில் வந்த அரிஷ்டாசுரனைக் கொன்றதால், வனுக்கு தோஷம் ஏற்பட்டதால் பரிகாரமாக புனித நதிகளில் நீராட வேண்டும் ஏன் கோபிகைகள் சொல்ல,கண்ணன் சிரித்துக் கொண்டே, எல்லா புனித நீர்களையும் இங்கு வரவழைத்தான் அதுவே ஸ்யாம குண்டம் எனபட்டது. ஆனால் கண்ணன் கோபியர்களுக்கு தோஷம் வந்துவிட்டது என்று சொல்லி அவர்களும் புனித நீராட புனித நதிகள் "ராதா குண்டம்' என்று ஆயின. 9.ஜிஹ்வா ஸிலா:
கோவர்த்தன மலையின் நாக்கு இவ்விடத்தில் உள்ளது. அதுவே ஜிஹ்வா ஸிலா எனப்படுகிறது.
10.ஸ்யாம்குடி:
இது மரங்களடர்ந்த "ரத்னா ஸிம்ஹாசனம் " என்னும் இடத்திற்கு அருகில் உள்ளது. இங்கே கருப்பு வண்ணக் கண்ணன் கருப்பு நிற கஸ்தூரியை உடல் முழுதும் பூசிக்கொண்டு கறுத்த ஆடை அணிந்து விளையாடினான். கோபிகைகளால் கூட அடையாளம் காண முடியவில்லையாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக