செவ்வாய், ஜனவரி 31

விசா பெருமாள்!!!!!!

அழ்கியமனவாளன் 


விசா பெருமாள்!!!!
"என்ன ராஜு, விசா பெருமாளை தரிசிக்கப் போலாமா?" விட்டுக்கு வந்த என் தம்பியிடம் நான் கேட்டேன்.
கொஞ்சம் குழப்பத்தோடு என்னை ஏறிட்டுப் பார்த்தான்.
"என்னடா, புதுசா சொல்றே? ஸ்ரீரங்கம் வந்த என்னை ஸ்ரீ ரங்கநாதனை தரிசித்தாயா?
என்று கேட்டால் சரியாக இருக்கும். அதென்ன புதுசா விசா பெருமாள்?"
என் தம்பி குழப்பத்தோடு என்னிடம் வினவினான்.
குறுக்கே வந்த என் தங்கை மாலி, (எங்க அப்பா அவளுக்கு ஹேமமாலினி-ன்னு  லக்ஷ்மி அஷ்டோத்திர நாமாவளி படிக்கும் போது வச்ச பேரைத்தான் நாங்க அப்படி சுருக்கி வச்சுட்டோம்)
"அதென்னடா, புதுசா இருக்கு.நானும் கேள்விப் பட்டதில்லையே"
"உங்க ரெண்டு பேருக்கிட்டேயும் காரணமாத்தான் சொல்றேன். அங்க போய் 
அவருக்கு திருமஞ்சனம் பண்ணி ஒரு அர்ச்சனை பண்ணி
தரிசனம் பண்ணிட்டு வாங்க, உங்க கஷ்டம் நிச்சயம் காணாமல் போகும். "

ஸ்ரீ ரங்கநாத பெருமாள், குலசேகர பெருமாள், சாரங்கபாணி பெருமாள் இப்பிடின்னு  கேட்டு இருக்கிறோம், இதென்ன புதுசா விசா பெருமாள் -ன்னு நினைக்கிறிர்களா?
ஆமாம் இது புதுசுதான், ஆனா பழசு தான். என்னய்யா குழப்புறே? நீங்க சொல்றது  கேக்கிறது.
வேறே ஒன்னும் இல்லை, என்னுடைய நண்பரின் மாப்பிளை அமெரிக்காவில் இருந்து விசா புதுப்பிக்க  வந்திருந்தார் விசாவிற்கு சென்று நேர்முகத் தேர்வு முடிந்து  இதோ விசா வந்து விடும், அதோ வந்து விடும் நாளை எண்ணிக் கொண்டிருந்தது  தான் மிச்சம். விசா வருவதாகக் காணோம். அந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக எங்கள் வாட்ச்மேன் வந்து சேர்ந்தார்.
அவர் ஒருநாள் என்னிடம் வந்து, "சார், எங்கள் ஊருக்கு ஒருநாள் வந்து எங்கள் பெருமாளைப் பாருங்கள். அவ்வளவு அழகாக இருப்பார். பார்த்தால் உங்கள் கண்களை அவரிடமிருந்து  எடுக்கமாட்டீர்கள். நினைத்ததெல்லாம் கொடுக்ககூடிய பெருமாள் சார்." என்று என்னிடம் கூறினார்.
நான், "ஆகட்டும் பார்க்கலாம், இப்போது நேரமில்லை" என்று அவரைத் தட்டிக் கழித்தேன்.
இரண்டு நாட்கள் ஆயிற்று. மீண்டும் வாட்ச்மேன் என்னைப் பார்த்து, "என்னிக்கு வரிங்க சார்"  நாளைக்குப் போகலாமா சார்?" என்று பிடிவாதம் பிடித்தார். அந்த நேரத்தில் அவரை ஏதோ  சொல்லித் தட்டிக் கழித்தேன். அவரைப் பார்ப்பதையே தவிர்த்தேன் என்றால் பாருங்கள்.
இரண்டு மூன்று நாட்கள் அவர் வரவில்லை. அப்பாடா! என்று பெருமூச்சு விட்டுக்கொண்டேன். ஆனால் என் மனம் என்னை அழுத்தியது. "வாட்ச்மேன் சாதாரண ஆள் என்பதால் தானே  நீ போகாமல்  இருக்கிறே? இதுவே ஒரு பெரிய பணக்காரனோ அல்லது ஒரு ஜோச்யக்காரரோ  சொல்லி இருந்தால் போகாமல் இருப்பாயா? அவர் என்ன உன்னை அவர் விட்டுக்கா  வரச் சொல்றார்? கோவிலுக்குத் தானே? போய் விட்டு வரவேண்டியது தானே? என்ன  உன் அந்தஸ்த்து குறைந்தது விடப் போகிறதா? கோவிலுக்கு போன புண்ணியமாவது  உனக்கு கிடைக்குமே" என்றெல்லாம் நினைக்கத் தோன்றியது.
என் மனைவியிடம் இந்த சம்பவங்களைச் சொன்னேன். எந்தக் கோவிலுக்குன்னாலும், எப்போ போகனுன்னாலும் இவன் எப்ப கூப்பிடுவான் என்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த  என் மனைவி, "அதுக்கென்ன நாளைக்கே போய் பார்த்துவிட்டு வரலாம்" என்றாள்.

அடுத்த நாள் வாட்ச்மேனிடம் "நாளை உங்க ஊருக்கு வருகிறோம். கோவில் அர்ச்சகரிடம்  சொல்லி வையுங்கள்." என்று சொல்லிவிட்டு, அதேபோல அடுத்த நாள் நாங்கள் கிளம்பினோம்.
நான், என் நண்பன், அவன் மாப்பிள்ளை சகிதம் ஒரு வேன் வைத்துக்கொண்டு கிளம்பினோம். அர்ச்சகரும் எங்களுக்காக காத்திருந்தார். சும்மா சொல்லக் கூடாது, பெருமாள் சுமார் பனிரெண்டு  அடி உயரமான, தீர்க்கமான, பார்த்தால் பார்த்துக் கொண்டுன்றிருக்குமான ஆஜானுபாகுவான  சிலை. அமுதத்தை பொழியும் கண்கள், புன்முறுவல் பூக்கும் அதரம், நீண்ட தோள்கள்,
வாருங்கள் உங்களுக்கு அபயம் அளிக்கக் காத்திருக்கிறேன் என்று சொல்லும் அபய ஹஸ்தம்,
இத்தனை நாள் பார்க்காமல் விட்டோமே என்று நினைக்கத் தோன்றியது. அருகிலேயே  ஸ்ரீதேவி பூதேவி சகிதம் நமக்குக் காட்சி அளிக்கிறார்.

"தோள்களா யிரத்தாய்! முடிகளா யிரத்தாய்!
   துணைமலர்க் கண்களா யிரத்தாய்,
 தாள்களா யிரத்தாய்! பேர்களா யிரத்தாய்!!
  தமியனேன்  பெரிய அப்பனே!"
என்று திருவாய்மொழியில் ஆழ்வார் பாசுரத்தைப் போல நமக்குக் காட்சி அளித்தார் பெருமாள்.

அர்ச்சகரும் அர்ச்சனை செய்து, கோவிலின் பெருமைகளை விளக்கினார்.
பெருமாளின் பெயரும் சுந்தராஜன் என்கிற அழகியமணவாளன் என்றும், ஸ்ரீரங்கம்  அரங்கநாதர், அன்னிய படையெடுப்பின் போது பல இடங்களிலும் இருந்து விட்டு  (அது தனிக்கதை) ஸ்ரீரங்கம் திரும்பும் வழியில் சிறிது காலம் இங்கு தங்கி இருந்தார் எனவும்  அர்ச்சகர் சொன்னார்.
அதனால் தான் ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு அழகியமனவாளன்  என்று மற்றொரு பெயர் உண்டு என்றார்.
இந்த ஊருக்கே அழகியமணவாளம் என்று பெயர். இவர் நாம்
வேண்டியதெல்லாம் அருள் பாலிக்கின்ற பெருமாள் என்றும், அவரிடம் நாம் வேண்டிக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
நாங்களும் வேண்டிக் கொண்டு ஊர் திரும்பினோம்.
அன்று மாலையே நண்பரும் எனக்கு தன்னுடைய மாப்பிள்ளைக்கு விசா வந்து விட்டது  என்றும் போன் செய்தார். அடுத்த வாரத்தில் ஒரு நாள் மீண்டும் போய் திருமஞ்சனம்  செய்ய வேண்டும் எனவும் என்னையும் வரவேண்டும் என்றும் சொன்னார். அப்போது தான் எனக்கு வாட்ச்மேன் ஞாபகம் வந்தது. கேட்டால் இரு நாட்களாக வேலைக்கு  வரவில்லை என்றார்கள்.
இரண்டு நாட்கள் கழித்து கேட்டபோது அவன் உடல்நலமில்லாமல் காலமாகி விட்டான் என்று கேள்விப் பட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எங்களை அவன் மூலம அந்த அழகிய மணவாளப்  பெருமாள் வரவழைத்து அருள்பாலித்து உள்ளார். என்னே அவன் கருணை!!!
அதற்குப் பிறகு எங்கள் கண்கண்ட தெய்வம் அழகிய மணவாளப்பெருமாள் தான்.

இந்த பெருமாளைப் பார்த்த பிறகு தான் என்னுடைய நண்பரின் மாப்பிள்ளைக்கு விசா  கிடைத்ததால் தான் நாங்களே இந்த பெருமாளுக்கு நாங்க இந்தப் பெயரை வைத்தோம்.
திருச்சியில் இருந்து மணச்சநல்லூர் போய், அங்கிருந்து கோபுரபட்டி என்ற கிராமத்திற்கு  போகிற வழியில் அழகியமணவாளம் உள்ளது.
எங்கள் வீட்டிற்கு வருபவர்கள் எல்லோரும் அவரை ஒருதடவை தரிசிக்காமல் செல்வதில்லை  என்றாள் பார்த்துக் கொள்ளுங்கள்
ஏன் இந்த விபரங்களை எழுதிக்கொண்டு இருக்கும் போதே மும்பையில் இருந்து என் தங்கையிடமிருந்து ஒரு போன்.
"ஒரு சந்தோஷ சமாசாரம், பாபு"
"சொல்லு"
"பத்து வருஷமாக பெரியவளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது உனக்குத் தெரியுமே, நான் அங்கு உன்னோடு அழகியமணவாளப் பெருமாளிடம் வேண்டிக் கொண்டது  இப்போ பலித்து விட்டது பாபு. அவள் இப்ப மாசாம இருக்காள்"
"மிக்க சந்தோஷம்.மாலினி, வாழ்த்துக்களை அவளிடம் சொல்லு" என்று போனை வைத்தேன்.

என்ன அழகியமணவாளம் கிளம்பிட்டிங்களா??
உங்களுக்கும், வேண்டியவர்களுக்கும் விசா கிடைக்க அந்த அழகியமணவாளன் அருள் தரட்டும்.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகியமணவாளன்

2 கருத்துகள்: