புதன், ஜனவரி 4

யார் மீது குற்றம்? என் மீது தான்!

யார் மீது குற்றம்? என் மீதுதான்!!!
ஸ்ரீ உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உரையில் இருந்து எடுத்தது. அவர்களுக்கு அடியேனுடைய
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒருவன் தப்பு செய்தால், அதனைத் தான்தான் செய்தது என ஒத்துக் கொண்டால் அவன் உத்தமனாம்.
அவனே தான் தவறு செய்துவிட்டு தான் தவறு செய்யவில்லை என்று அடம் பிடித்தால் அவன் உண்மையானவன் இல்லையாம்.
அவனே தான் தவறு செய்யாவிட்டாலும், தான் தவறு செய்துவிட்டதாக மற்றவர் சொன்னால் அவன் கொண்டாடப் படவேண்டியவனாம்.அவன்தான் உத்தம புருஷனாம்.
இதற்கு உதாரணமாக பரதனைக் கூறுகிறார்  ஸ்வாமிகள்.
எப்படிங்கிரீர்களா? பார்ப்போம்.
அயோத்தியில் ஒரு காட்சி.
மந்தரை (கூனி), ராமனுக்கு அடுத்த நாள் பட்டாபிஷேகம் நடக்கப் போகிறது என்பதைக் கேள்விப் படுகிறாள். ராமன் சிறுவனாக இருந்த போது,உண்டி வில்லை வைத்து விளையாடும் போது கூனி மீது தவறுதலாக விழுந்து விடுகிறது. இதனைப் பார்த்த நண்பர்கள் கேலி செய்கிறார்கள்.
கூனிக்கு கோபம பொத்துக் கொள்கிறது.ஆனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. தக்க தருணத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறாள்.
தற்போது நேரம் வந்துவிட்டது என்று அறிந்து உடன் கைகேயியை நோக்கி ஓடுகிறாள்.
கைகேயியிடம் பலவிதத்திலும் அவளது மனத்தைக் கரைத்து, பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்றும், ராமனைக் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தசரதன் கொடுத்த  வரங்களை வைத்துக் கேள்  என்று அவளை கரைக்கிறாள்.
வேறு வழில்லாமல் தசரதனும் கைகேயிக்கு வரங்களைக் கொடுத்துவிடுகிறான்.
ராமன் மீது அடங்காப் பற்று கொண்ட குலசெகரபெருமான்
  வந் தாளி னினை வணங்கி வளநகரம்
    தொழுதேத்த மன்ன னாவான்
  நின்றாயை, அறியணைமே லிருந்தாயை
   "நெடுங்கானம் படரப் போகு"
 என்றாள், எம் இராமாவோ! உனைபயந்த
  கைகேசி தன்சொற் கேட்டு,
 நன்றாக நானிலத்தை யாள்வித்தேன்
  நன்மகனே! உன்னை நானே.
என்று கைகேயின் வரத்தைக் கேட்டு தசரதன் புலம்புவதாகப் பத்துப்
பாசுரங்களை அமைத்துள்ளார்."தந்தை சொல் மிக்க மாத்திரம் இல்லை " என்று தந்தையின் ஆணைக்கு இரங்க, தன் தம்பி இலக்குவணன் மற்றும் சீதையுடன் காட்டுக்கு எகுகிறான் ராமன். இந்த விபரங்களைக் கேட்ட பரதன், தன் மாமன் வீட்டிலிருந்து கடிதாக அயோத்திக்கு வருகிறான்.
யாரால் இந்தத் தவறு நடந்து இருக்கும் என்று தனக்குள் கேள்வியை கேட்கிறான்.
"எல்லாவற்றுக்கும் மந்தரை தான் காரணமாக இருக்க வேண்டும். அவள் தான் என் தாயிடம் போய் ராமனிடம் இருந்த கோபத்தால், ராமனின் பட்டாபிஷேத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக, எனக்கு பட்டம் கட்டவேண்டும் என்று கேட்டு இருக்கிறாள்.
எனவே இதற்கெல்லாம் காரணம் மந்தரை தான்."
"இருக்காது,இருக்காது,அவள் என்ன செய்வாள், என் மீது கொண்ட பாசத்தாலும், என் தாயாரின் மீது கொண்ட அன்பினாலும் அவள் அப்படிக் கேட்டிருப்பாள். என் தாயாருக்கு எங்கே புத்தி போயிற்று? ராமனும், பரதனைப் போல என் மகன் தான். பரதன் நாட்டை ஆண்டாள் என்ன, ராமன் நாட்டை ஆண்டாள என்ன, என்று மந்தரையிடம் சொல்லி இருக்கவேண்டாமா?
மந்தரையை இவ்வளவு தூரம் பேச விட்டிருக்கலாமா? எனவே என் தாயார் தான் குற்றம் புரிந்தவர்கள். அவர்களை மன்னிக்கவே முடியாது"
"ச்சே,ச்சே, தாயாரைப் போய் குற்றம் சொல்கிறேனே? தாயை குற்றம் சொல்லி விட்டு எந்த நரகத்திற்கு நான் போகவேண்டும்? அன்னை எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்னை வளர்க்க? பிள்ளைப் பாசத்தால் மந்தரை சொன்னவுடன் அவர்களையும் அறியாமல் எனக்குப் பட்டம்கட்ட வேண்டும் என்று கேட்டிருப்பார்கள்."பின்னே யார் தான் காரணமாக இருக்க வேண்டும்?"
"எல்லாவற்றுக்கும் என் தகப்பனார் தான் காரணம். அவர்கள் சொல்லி இருக்க வேண்டாமா? மூத்த மகன் இருக்கும் போது இளைய மகனுக்கு பட்டம் கட்டலாமா? தன் தாயைக் கடிந்து கொண்டிருக்க வேண்டாமா? தாயை சமாதானப் படுத்தி ராமனுக்குத் தான்  பட்டாபிஷேகம் என்று சொல்லி இருக்க வேண்டாமா? எல்லாவற்றுக்கும் தந்தை தான் காரணம்"
"இருக்காது, இருக்காது. தந்தை என்ன செய்வார்? தாய்க்கு கொடுத்த வரம் அவரை ஒன்றும் செய்ய விடவில்லை.அவர் என்ன சொன்னாலும்
என் தாயார் கேட்கிற நிலையில் இருந்து இருக்க மாட்டார். அதனால் தான் இத்தனை விபரீதமும். அவரைக் குற்றம் சொல்லி என பயன்?
"தமையன் ராமன் இதற்கெல்லாம் காரணம்.அவர் தந்தைக்குச் சொல்லி இருக்க வேண்டாமா? மூத்த மகன் இருக்கும் போது இளையவனுக்கு பாட்டாபிஷேகம் செய்வது எங்கும் நடக்காது. தன்னுடைய உரிமையை நிலை நாட்டி இருக்க வேண்டாமா?"
"தமையன் என்ன செய்வான்? அவன் என்றைக்கு தந்தைக்கு எதிராக செயல்ப்பட்டு இருக்கிறான்? தாயும், தந்தையும் இரு கண்கள் அல்லவா? அவன் எள் என்றால்,எண்ணையாக செயல்படுபவன். தந்தை சொல் கேட்காத மகன் என்ற பெயரை பெறுவானா? எனவே அவன் செய்ததும் சரிதான்.
"பின் யார் தான் காரணம்? மந்தரை, தன் தாயார், தந்தை, மற்றும் தமையன் என்று யாருமே  காரணமில்லை என்றால் யார் தான் காரணமாகும்?
"காரணம் இல்லாமல் காரியம் நடந்து இருக்குமா? எல்லாவற்றுக்கும் நான் தான் காரணம். இவ்வளவு விஷயங்கள் அடந்து இருக்கும் போது நாம் இந்த இடத்தில் இல்லாதது தான் காரணம். நான் இங்கே இருந்திருந்தால் தன் தாயை அனுப்பி இருப்பேனா? தாயை தந்தையிடம்  வரம் கேட்க அனுமதித்திருப்பேனா? என்னையே நாம் நொந்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?"
எனவே எல்லாவற்றுக்கும் தன் மேலேயே தவறை போட்டுக்கொள்கிறான்.
இவ்வாறு தான் தவறு செய்யாவிட்டாலும் தவறைத் தன் மீது அனுமதிக்கும் பரதன் எல்லோரையும்  விடச் சிறந்தவன் தானே?













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக