வெள்ளி, ஜூலை 6

அஞ்சு குழி, மூணு வாசல்!!

அஞ்சு குழி, மூணு வாசல்!!
அஞ்சு குழி மூணு  வாசல்
அதென்னங்க அஞ்சு குழி மூனு வாசல், அப்பிடிங்கிறிங்களா?
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
பல சிறப்புக்களைக் கொண்டதுங்கறது எல்லாருக்கும் தெரியும். ஆயிரங்கால் மண்டபம், அதில் நடக்கும் வைகுந்த ஏகாதசியாகட்டும், பங்குனி உத்திரம் அன்று நடக்கும்  ரங்கநாதர், ரங்கநாயகி சேர்த்தியாகட்டும், கிராமத்து மக்கள் எல்லாரும் ஒன்று கூடி சேர்ந்து கொண்டாடும் சித்திரைத் தேராகட்டும், எல்லாம் உலகப் பிரசித்தி பெற்றவை  இல்லையா?
அது போல கோயில்ல ஒவ்வொரு இடமும் ஆயிரம் கதைகளைச் சொல்லும். சொல்லிக் கொண்டே போகலாம். அதிலே அஞ்சு குழி மூணு வாசல்ன்னு ஒரு இடம். அங்க அஞ்சு  குழி இருக்கும். பக்கத்திலேயே மூணு வாசல் இருக்கு. வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் கை விரல்களை அதில் வைத்துப் அங்கிருந்து நேராகப் பார்ப்பார்கள்.
"என்னய்யா பார்க்கரே?"
" ஒண்ணும் தெரியலையே? ஏதோ  நம்ம விரலை இந்த அஞ்சு குழியிலே வச்சுப் பார்க்கச் சொல்றாங்க, எதித்தாப்பலே வாசல் தெரியுதா? அப்படின்னு கேட்கிறாங்க, உம் தெரியுதுன்னு சொல்றதைத் தவிர ஒண்ணும் புரியலே."
"இதப் பார்க்கறப்ப, ஒரு சினிமாவிலே செந்தில், மலைக்கு மேல சாமி எனக்குத் தெரிகிறார், உங்களுக்குத் தெரிகிறாரா? என்று கேட்டுவிட்டு, மேலும் அவரவர் மனைவிகள் பதிவிரதைகள்ன்னா உங்களுக்கும் கடவுள் தெரிவார் என்று சொல்வார். இதைக் கேட்ட எல்லாரும் கடவுள் எங்களுக்கும்
தெரிகிறார் என்று பொய் சொல்வார்கள். அது போலத்தான் வாசல் தெரியுதான்னு கேட்டா வேற  என்ன சொல்றது?"
அந்த சமயம் அங்கு வந்த ஊர் பெரியவர்,
 "அப்படி இல்லங்க, இந்த அஞ்சு குழி, மூணு வாசல் மிகப்  பெரிய வாழ்க்கைத் தத்துவத்தைக் கொண்டுள்ளது, இந்த ஊரில் உள்ள எல்லாருக்கும் இது
தெரியும்"
அப்படின்னார்.
நான்,
 "அப்படி என்ன தத்துவங்க, சொல்லுங்க நாங்களும் தெரிந்துக்கறோம்"
என்று  சொல்லி அவரிடம் விளக்கச் சொன்னோம்.
"நீங்க பாத்திருப்பிங்க, அந்த இடத்திலே அஞ்சு குழி இருக்கும், அதுலே நம்ம அஞ்சு விரலையும் விட்டு, எதித்தாப்லே இருக்கும் வைகுந்த வாசலைப் பாக்க வேண்டும். நம்முடைய உடம்புல உள்ள அஞ்சு புலன்களையும் அடக்கினால், அதாவது கண், காது, மூக்கு, வாய், மனம்  இவைகளை அடக்கினால், தத்வம், ரசஸ், தமஸ் ஆகிய முக்குணங்களைத் தாண்டினால்  கண்ணனை அடையலாம் என்பது ஒரு விளக்கம்.
மற்றொரு விளக்கமும் உண்டு.
இதில் "அஞ்சு" என்பது ஐம்புலங்களையும் குறிக்கும். "மூன்று" என்பது, 1. அசித்,
அதாவது ஐம்புலன்களால் பெறப்படும் அனுபவம், அதுக்கு பேர் ஐச்வர்ய அனுபவம்,
2. சித் என்றால் ஜீவாத்மா தான் பெரிது என்ற கைவல்ய அனுபவம்,,
3. ஈஸ்வரன் என்கிற பரமாத்மா தான் உயர்ந்தது என்கிற தத்துவம்,
அதாவது ஐம்புலன்களால் பெறப்படும் அனுபவம், 
மற்றும் உடம்பு தான் பெரிசு, பரமாத்மா என்று ஒண்ணும் கிடையாது
போன்றவற்றைத் தள்ளிவிட்டுப் பார்த்தால், பரமாத்மா என்கிற உயர்ந்த விஷயம் புலப்படும்
அதாவது குழிக்கு அருகில் உள்ள இரு வாசல்களும் அசித், சித் என்பதை குறிக்கும்.
பக்கத்தில் உள்ள இரு வாசல்களை தவிர்த்து நேராக உள்ள வாசலை பார்த்தால்  வைகுந்த வாசல் தெரியும். இதைத்தான் அஞ்சு குழி மூணு வாசல் சொல்லுது.  
ஆக மொத்தத்தில் அந்த இடம் "அஞ்சும் குழி" ன்னு கூட வைத்துக் கொள்ளலாம்."
"நல்ல விளக்கங்க, நிச்சயமாக மனதில் வைப்போமுங்க,நன்றி"
அது சரி, எங்களை மாதிரி வெளியூரில் உள்ளவர்களுக்கு அந்த இடம் எங்க இருக்குன்னு  சொல்றது கேட்குது.
பெருமாள் சன்னிதியில் இருந்து தாயார் சந்நிதியை நோக்கிப் போகும் போது 
அஞ்சு குழி
மூணு வாசலி்ல் இருந்து பார்த்தால்
தெரியும்
 வைகுந்தம்
தன்வந்திரி சந்நிதிக்கு அருகாமையில் இருக்கு. மறக்காமல் பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக