பெயரில் என்ன இருக்கிறது? பெயரில் தான் இருக்கிறது !!!!
பாற்கடலில் ஒரு காட்சி.
பரந்தாமன்,மகாலக்ஷ்மி இருவரும் பாம்பணையில் பள்ளி கொண்டு இருக்கின்றனர்.
பரந்தாமன் ஏதோ நினைவில்,
"ஹா,ஹா " என்று சிரிக்கிறார்.
"எதற்கு சிரிக்கிறிர்கள்" மகாலக்ஷ்மி பரந்தாமனைப் பார்த்து வினவினாள்.
"இல்லை, ஒரு விஷயம் நினைத்துப் பார்த்தேன். அதை நினைத்து நினைத்து சிரிப்பு வருகிறது.
நீயும் அதைக் கேட்டால் உனக்கும் சிரிப்பு வரத்தான் செய்யும்", பரந்தாமன் மகாலக்ஷ்மியிடம் கூறுகிறான்.
"அப்படி என்ன பெரிய விஷயம் நடந்து விட்டது, இப்படிச் சிரிப்பதற்கு? எனக்கும் சொல்லுங்களேன்
நானும் தெரிந்து கொள்கிறேன்." மகாலக்ஷ்மி பரந்தாமனைப் பார்த்து வினவினாள்.
"சொர்க்கத்தில் நடந்த விஷயத்தை அங்கிருந்து வந்தவர்கள் சொன்னார்கள்.அதை நினைத்தேன்.
நீயும் தெரிந்து கொள்" மகாவிஷ்ணு ஒரு பின்னூட்டம் இடப் போகிறார் என்பதைத் மகாலக்ஷ்மி தெரிந்து கொண்டாள்.
சொர்க்கலோகத்தை நோக்கி போவோம்.
"நான் இருப்பது சொர்க்கலோகமா அல்லது நரகலோகமா?"
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் பூவுலத்தில் இறந்தபின் மேல் லோகத்திற்கு
வந்தவுடன்,அங்கிருந்த கிங்கரர்களிடம் மேற்கண்டவாறு
வினவினான். புவியில் அவன் செய்யாத அக்கிரமங்கள் இல்லை. கடவுள இல்லை என்ற கொள்கை உடையவன், கடவுளை இப்படித்தான் தூற்றுவது என்றில்லை, அப்படித் தூற்றுவான் அவனுக்கு சொர்க்கம் அல்லது நரகம் என்பது உண்டு என்பதில் நம்பிக்கை இல்லை. கடவுளிடம் கொண்ட வெறுப்பு காரணமாக தன்னுடைய மகனுக்கு "கடவுள் இல்லை", என்று
பெயர் சூட்டினான்.அவனைக் கூப்பிடும் சாக்கில் கடவுளைத் திட்டலாம் என்பது அவன் எண்ணம்.
ஆனால் நடந்ததோ வேறு. மகன் பள்ளிக்குச் செல்லும் போது அவன் நண்பர்கள் அவனைக்
"கடவுள், கடவுள்" என்றுதான் அழைப்பார்கள்,ஏனெனில் உலகில் உள்ளோரின் வழக்கமே பொதுவாக பெயர்களை குறைப்பதுதான்.
அது போகட்டும், விஷயத்திற்கு வருவோம்.
அவனுக்கும் வயதாகியது, உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையில் வீழ்ந்தான். மகனும் அவனை நன்றாகத் தான் பார்த்துக் கொண்டான். தகப்பனுக்குச் செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் ஒன்று விடாமல் செய்தான்.
சர்க்கரை வியாதியினால் உடலில் புண் உண்டாகி பேசக் கூட முடியாமல்,
"சீயினால் செறிந்தேறிய புண்மேல்
செற்ற லேறிக் குழம்பிருந்து, எங்கும்
ஈயினாலரிப் பூண்டு மயங்கி
எல்லை வாய்ச்சென்று சேர்வதன் முன்னம்,
வாயினால் நமோ நாரணா வென்று
மத்த கத்திடைக் கைகளைக் கூப்பிப்
போயினால் பின்னை, இத்திசைக் கென்றும்
பிணைகொ டுக்கிலும் போகவொட் டாரே."
என்று பெரியாழ்வாரின் பாசுரத்திற்கு ஏற்ப புண்ணில் ஈமொய்க்கும் போது,
தன மகனை "கடவுள் இல்லை" இங்கே வா என்று அழைக்க முடியாமல், "கடவுள்" என்றே கடைசிக் காலத்தில் அழைத்தான். அத்துடன் அவனின் ஆயுட்காலம் முடிந்தது.
"நமனும்முற் கலனும் பேச
நரகில்நின் றார்கள் கேட்க,
நரகமே சுவர்க்க மாகும்
நாமங்களுடைய நம்பி"
என்று திருமாலை பாசுரத்தில் சொன்னது போல,நரகத்தயே சுவர்க்கமாக்கும் நாம் அவன் கடவுள் என்று கூப்பிட்ட பிறகு அவன் செய்த பாவங்களை மன்னித்து அவனை சுவர்க்கத்திற்கு அனுப்பாமல் இருக்க முடியுமா?, எனவே அவனை சுவர்க்கத்திற்கு அனுப்பிவிட்டோம்.அங்கு தான் அவன் மேலே சொன்ன வார்த்தைகளைக் கூறினான். அவன் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று. அதை நினைத்துக் கொண்டிருந்தேன் சிரிப்பு வந்து விட்டது" என்று மகாலக்ஷ்மியிடம் நடந்தவற்றைக் விபரித்தார் பரந்தாமன். மகாலஷ்மிக்கும் கேட்டவுடன் சிரிப்பு வந்தது.
ஆக பெயரில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு பதில் நாம் கொடுத்த "பெயரில்தான் இருக்கிறது!!! "
என்று நான் மாற்றிய தலைப்பு சரிதானே?பெரியாழ்வார் என்ன என்ன பெயர் இட வேண்டும் என்று ஒரு பட்டியலே தொடுத்துள்ளார்.
அதைப் அடுத்த பகுதியில் காண்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக