திங்கள், ஜூலை 23

கிளிப் பேச்சுக் கேட்க, வா?


கிளிப் பேச்சுக் கேட்க, வா?
என்னங்க இது தலைப்பு, கிளிப் பேச்சுக் கேட்கவான்னு. நீங்க சொல்றது கேட்குது, என்ன கிளி  ஏதாவது சொல்லுமா, அத நம்ம கேட்கிறதான்னு. அந்த மாதிரி கிளி பேச்சக் கேட்டது எவ்வளவு  பலைனைக் கொடுத்து இருக்குன்னு இந்த கதை முடிவிலே நீங்களே ஒத்துப்பிங்க பாருங்க! 
அது சரி விஷயத்துக்கு வாங்கிறிங்க.
கிளிக்கு அந்தக் காலத்தில் இருந்து முக்கியத்துவம் நிறையக கொடுத்து இருக்காங்க.
இராமானுஜர் கிளி வளர்த்தாராம், அதற்குக் குலசேகரன் என்று பெயர் வைத்தாராம்.
  "இன்னமுதம் ஊட்டுகேன் இங்கே வா பைங்கிளியே
    தென்னரங்கம் பாடவல்ல சீர் பெருமாள்
      பொன்னன் சிலை முதலியர்வேள் எங்கள் குலசேகரன் என்றே கூறு"
 அத போல "எல்லே இலங்கிளியே இன்னும் உறங்குதியோ" என்று ஆண்டாளும்
 "சொல்லெடுத்து தங்கிளியே சொல்லே" என்று திருமங்கையாழ்வாரும் கிளியை பற்றி  நிறையப் பேர் பாடியுள்ளார்கள் .
அதென்ன குயில் தானே நன்னாப் பாடும் என்பார்கள், நீ கிளி நன்னாப் பாடுன்னு சொல்றே?
அப்படின்னு சொல்றது கேட்குது
குயில் பாடித்துன்னா இன்று பூரா கேட்டுண்டே இருக்கலாம், ஆனா கிளி பாடினா அப்படி  இல்லை, அதன் குரல் கரகரன்னு, ஏதோ தகரத்திலே கீர்ராப்போலே இருக்கும் இல்லையா? ஆனா கிளி பேசறது நன்னா இருக்கும் என்பது முன்னோர்கள் வாக்கு. நாமா என்ன  சொல்லறமோ அத திருப்பிச் சொல்லும்.
அப்படித்தான் கிளி சொன்னது ஒரு திருப்புமுனை ஏற்படுத்தி இருக்குன்னாப் பாருங்க.
அதென்ன திருப்பு முனை?
  "காவேரி விரஜா சேயம் வைகுந்தம் ரங்க மந்திரம்
   ஸ வாஸுதேவோ ரங்கேசய  பிரத்யட்சம் பரமம் பதம்"
இப்படின்னு சொன்னதையே திருப்பித்திருப்பிச் சொல்லிண்டு இருந்தது கிளி.
எங்கே தெரியுமா?
தர்ம வர்மா பரம்பரையில் வந்த கிள்ளிச் (கிளிச்) சோழன் வேட்டைக்கு வந்த

 கிளிச்சோழன்  கிளி சொல்வதை
கேட்டல்
போது  ஒரு மரத்தடியில் படுத்து இருந்த போது, மரத்தில் இருந்த கிளி மேலே சொன்ன  ஸ்லோகத்தை அவன் கேட்கும்படி சொன்னது.
சோழனுக்கு ஆச்சர்யம் தாங்க முடியலை.
என்னவோ கிளி சொல்லுதே கேட்போம்ன்னு யோசித்தான்.
"இதோ இங்கே இருக்கே காவிரி அதுதான் வைகுந்தத்தில் உள்ள விரஜை நதி.
விமாநம் தான் ரங்க மந்திரம், வாசுதேவன் தான் ரங்கநாதனாக இருக்கான்
இது தான் பூலோகத்திலே உள்ள வைகுந்தம்"
இப்படிங்கற மாதிரி அவனுக்குப் புரிந்தது
உடனே அடுத்த பகுதிய கிளி சொல்லித்து,
  "விமாநம் பிரணவாகாரம் வேத ஸ்ருங்கம் மகாத்புதம்
     ஸ்ரீ ரங்க சாயி பகவான் ப்ரண வார்த்த ப்ரகாசக:
"ஓம் என்ற ப்ரணவாகாரத்துக்கு உரியது தான் விமாநம், நான்கு வேதம் தான் மேலே உள்ள  கலசங்கள் உள்ளே ஸ்ரீ ரங்கநாதன், இவற்றை உணர்த்துவதற்காக சயனித்துக் கொண்டு இருக்கிறான்."
கிளிச் சோழனுக்கு ஒண்ணும் புரியலே, எதுக்காக கிளி இதே சொல்லணும், அப்படின்னு  தூங்கிப் போனான். அன்னிக்கு ராத்திரி அவன கனவுலே

கனவில் அரங்கன் தன்னை உணர்த்தும் காட்சி
பெருமான் தான் யார் என்பதை  உணர்த்தினான்.
மறுநாள் முதல் மண் மேடிட்டு இருந்த பகுதிகளை நீக்கினான், விமானம் கொஞ்சம்  கொஞ்சமாக வெளியே தெரிந்தது.
ஆக பெருமான் கிளி ரூபமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்னாப் பாருங்க?
இப்பச் சொல்லுங்க "கிளிப் பேச்சுக் கேட்க, வா" அப்படிங்கற தலைப்பு சரிதானே?
அதுக்காகத்தான் ஸ்ரீரங்கத்திலே கிளி மண்டபம்ன்னு அந்த இடத்துக்குப் பெயர்.   உடனே கிளம்புங்க .

பாற்கடலில் இருந்து ரங்கவிமானம் 
  
அரங்கன்

வெள்ளி, ஜூலை 6

அஞ்சு குழி, மூணு வாசல்!!

அஞ்சு குழி, மூணு வாசல்!!
அஞ்சு குழி மூணு  வாசல்
அதென்னங்க அஞ்சு குழி மூனு வாசல், அப்பிடிங்கிறிங்களா?
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
பல சிறப்புக்களைக் கொண்டதுங்கறது எல்லாருக்கும் தெரியும். ஆயிரங்கால் மண்டபம், அதில் நடக்கும் வைகுந்த ஏகாதசியாகட்டும், பங்குனி உத்திரம் அன்று நடக்கும்  ரங்கநாதர், ரங்கநாயகி சேர்த்தியாகட்டும், கிராமத்து மக்கள் எல்லாரும் ஒன்று கூடி சேர்ந்து கொண்டாடும் சித்திரைத் தேராகட்டும், எல்லாம் உலகப் பிரசித்தி பெற்றவை  இல்லையா?
அது போல கோயில்ல ஒவ்வொரு இடமும் ஆயிரம் கதைகளைச் சொல்லும். சொல்லிக் கொண்டே போகலாம். அதிலே அஞ்சு குழி மூணு வாசல்ன்னு ஒரு இடம். அங்க அஞ்சு  குழி இருக்கும். பக்கத்திலேயே மூணு வாசல் இருக்கு. வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் கை விரல்களை அதில் வைத்துப் அங்கிருந்து நேராகப் பார்ப்பார்கள்.
"என்னய்யா பார்க்கரே?"
" ஒண்ணும் தெரியலையே? ஏதோ  நம்ம விரலை இந்த அஞ்சு குழியிலே வச்சுப் பார்க்கச் சொல்றாங்க, எதித்தாப்பலே வாசல் தெரியுதா? அப்படின்னு கேட்கிறாங்க, உம் தெரியுதுன்னு சொல்றதைத் தவிர ஒண்ணும் புரியலே."
"இதப் பார்க்கறப்ப, ஒரு சினிமாவிலே செந்தில், மலைக்கு மேல சாமி எனக்குத் தெரிகிறார், உங்களுக்குத் தெரிகிறாரா? என்று கேட்டுவிட்டு, மேலும் அவரவர் மனைவிகள் பதிவிரதைகள்ன்னா உங்களுக்கும் கடவுள் தெரிவார் என்று சொல்வார். இதைக் கேட்ட எல்லாரும் கடவுள் எங்களுக்கும்
தெரிகிறார் என்று பொய் சொல்வார்கள். அது போலத்தான் வாசல் தெரியுதான்னு கேட்டா வேற  என்ன சொல்றது?"
அந்த சமயம் அங்கு வந்த ஊர் பெரியவர்,
 "அப்படி இல்லங்க, இந்த அஞ்சு குழி, மூணு வாசல் மிகப்  பெரிய வாழ்க்கைத் தத்துவத்தைக் கொண்டுள்ளது, இந்த ஊரில் உள்ள எல்லாருக்கும் இது
தெரியும்"
அப்படின்னார்.
நான்,
 "அப்படி என்ன தத்துவங்க, சொல்லுங்க நாங்களும் தெரிந்துக்கறோம்"
என்று  சொல்லி அவரிடம் விளக்கச் சொன்னோம்.
"நீங்க பாத்திருப்பிங்க, அந்த இடத்திலே அஞ்சு குழி இருக்கும், அதுலே நம்ம அஞ்சு விரலையும் விட்டு, எதித்தாப்லே இருக்கும் வைகுந்த வாசலைப் பாக்க வேண்டும். நம்முடைய உடம்புல உள்ள அஞ்சு புலன்களையும் அடக்கினால், அதாவது கண், காது, மூக்கு, வாய், மனம்  இவைகளை அடக்கினால், தத்வம், ரசஸ், தமஸ் ஆகிய முக்குணங்களைத் தாண்டினால்  கண்ணனை அடையலாம் என்பது ஒரு விளக்கம்.
மற்றொரு விளக்கமும் உண்டு.
இதில் "அஞ்சு" என்பது ஐம்புலங்களையும் குறிக்கும். "மூன்று" என்பது, 1. அசித்,
அதாவது ஐம்புலன்களால் பெறப்படும் அனுபவம், அதுக்கு பேர் ஐச்வர்ய அனுபவம்,
2. சித் என்றால் ஜீவாத்மா தான் பெரிது என்ற கைவல்ய அனுபவம்,,
3. ஈஸ்வரன் என்கிற பரமாத்மா தான் உயர்ந்தது என்கிற தத்துவம்,
அதாவது ஐம்புலன்களால் பெறப்படும் அனுபவம், 
மற்றும் உடம்பு தான் பெரிசு, பரமாத்மா என்று ஒண்ணும் கிடையாது
போன்றவற்றைத் தள்ளிவிட்டுப் பார்த்தால், பரமாத்மா என்கிற உயர்ந்த விஷயம் புலப்படும்
அதாவது குழிக்கு அருகில் உள்ள இரு வாசல்களும் அசித், சித் என்பதை குறிக்கும்.
பக்கத்தில் உள்ள இரு வாசல்களை தவிர்த்து நேராக உள்ள வாசலை பார்த்தால்  வைகுந்த வாசல் தெரியும். இதைத்தான் அஞ்சு குழி மூணு வாசல் சொல்லுது.  
ஆக மொத்தத்தில் அந்த இடம் "அஞ்சும் குழி" ன்னு கூட வைத்துக் கொள்ளலாம்."
"நல்ல விளக்கங்க, நிச்சயமாக மனதில் வைப்போமுங்க,நன்றி"
அது சரி, எங்களை மாதிரி வெளியூரில் உள்ளவர்களுக்கு அந்த இடம் எங்க இருக்குன்னு  சொல்றது கேட்குது.
பெருமாள் சன்னிதியில் இருந்து தாயார் சந்நிதியை நோக்கிப் போகும் போது 
அஞ்சு குழி
மூணு வாசலி்ல் இருந்து பார்த்தால்
தெரியும்
 வைகுந்தம்
தன்வந்திரி சந்நிதிக்கு அருகாமையில் இருக்கு. மறக்காமல் பாருங்கள்.

வெள்ளி, ஜூன் 8

எங்க ஊர்!!!!

எங்க ஊர்!!!! பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள்?  ,
விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் என்பது அர்ச்சை நிலை,
திருபாற்கடல் ஒரு நிலை, மண்மீது உழல்வாய் என்று அவதாரங்கள் நிலை,
இவற்றுள் எங்கும் மறைந்து உழல்வாய் என்ற அந்தர்யாமி நிலை. இந்த ஐந்து நிலைகளில்  எளிமையான் நிலை அர்ச்சாவதாரம் என்ற அர்ச்சை நிலை. என்னன்னு கேட்கிறிங்களா?
பாருங்க, வைகுந்த பெருமானைப் போய் உடனே பார்த்துவிட்டு வரமுடியுமா?
யாரை வேணா கேளுங்க,108 திவ்ய தேசத்தை பார்த்தாச்சா, அப்படின்னு?
வைகுந்தம், திருபாற்கடல் இவற்றைப் பார்த்தாச்சா?-ன்னு கேளுங்க. என்ன பதில் வரும்?
வராது!!!
வைகுந்தம் போய் விட்டு வந்து
   "நாம் வைகுந்தம் போய்விட்டு வைத்தேன், நீங்க பார்த்தாச்சா?"
என்று சொல்ல முயுமா? அதுசரி, திருபாற்கடலைப் போய், பெருமாளைப் பார்த்துவிட்டு  பாற்கடலில் நீந்திவிட்டு வந்தேன்னு சொன்னா யார் நம்புவாங்க.
அந்த இரு நிலைகளும் இந்த உடலோடு போய் பார்க்க முடியாதுன்னு
எல்லாருக்கும் தெரியும். அதுசரிய்யா ராமன், கண்ணன், போன்ற அவதாரங்களை பார்த்தேன்னு சொன்ன, நாம என்ன கேட்போம், "என்ன சினிமா பார்த்தியா?"
அப்படின்னு தானே கேட்கத் தோன்றும். இல்லையா பின்னே? அவதாரங்கள் எல்லாம்  நம்ம காலத்திலேயா நடந்தது? காலத்தால் போகமுடியாத நிலைகள் அவை  என்ன அவதாரங்கள் நடந்த இடமான அயோத்தி, மதுரா, துவாரகா போன்ற  இடங்களைப் போய் பார்த்து அனுபவித்து விட்டு வந்து மகிழலாம்.
"நான் பெருமானை நேத்தி ஏன் கனவுல வந்தார்" என்றும், நமக்குள்ளே
உள்ளார் என்று சொல்லமுடியுமா? ஆழ்வார்கள் எல்லாம் தான் ஏன் மனதுக்குள் பெருமான்  வந்தார் என்று சொல்ல முடியுமே தவிர, நம்மைப் போல் உள்ளவர்கள், ஏழைகள்
 "இன்னிக்கு என்ன சமையல் பண்ணே? என்ன நகை வாங்கினே?" என்று சொல்ல  முடியுமே தவிர பெருமாள் நமக்குள்ளே உள்ளார் என்று சொன்னால் யாரும் நம்பாட்டார்கள்.
இப்படி பெருமானின் ஐந்து நிலைகளில், நான்கு நிலைகள் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலைகள்.
அப்ப ஜந்தாவதான நிலை அர்ச்சாவதார நிலை தான் நமக்கு ஏத்த நிலை.
திருமங்கைஆழ்வார் சொல்றாராம், ஜீவன் இந்த உடலோட வைகுந்தத்துக்கு
போகமுடியாதாம், அது இந்த நாட்டிலேயே இல்லை, போனா திரும்பி வரமுடியாதாம்,
இப்படி இருக்கும் போது தரையில் கிடக்கும் முயல் மாமிசத்தை விட்டு, ஆகாயத்திலே  போற காக்கை மாமிசத்துக்க்கு ஆசைப் படுவது போல இருக்குன்னு சொல்றார். முயல் மாமிசம் என்பது அர்ச்சையாம், காக்கை மாமிசம் என்பது வைகுந்த்தமாம்.
அப்படி பெருமை கொண்டது அர்ச்சாவதாரம் என்கிற விக்கிரஹ ருபத்தில் நிலை.
ஆம், அப்படிப் பெருமை கொண்டவர் தான் எங்கள் ஊர் லக்ஷ்மி நாராயணன் பெருமாள்.



பெருமாள் கோயில்

லக்ஷ்மியை தனது இடப்பக்கத்தில் ஏந்திக் கொண்டு பக்தர்களை ரக்ஷித்துக் கொண்டிருக்கிறார்.
இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். சிறிய வடிவம் கொண்டவர் தான்  எங்கள் ஊரில் குடி கொண்டிருக்கும் லக்ஷ்மி நாராயணன்.
ஆனால் கீர்த்தி  அதிகம் கொண்டவர். கேட்டதெல்லாம் அருளுபவர். ஏன் கேட்காமலேயே கூட  கொடுக்கக்கூடியவர் தான். அவரை ஒரு தடவை பார்த்து உங்கள அபிலாஷைகளை சொல்லி விட்டு வாருங்கள், பின்னர் பாருங்கள் உங்கள் வாழ்க்கை எப்படிச் செல்கிறது என்று.
அதோட மட்டும் இல்லை, ஆஞ்சநேயருக்கும் கோயில் இருக்கு. பெருமாள் கோயில்  குளத்தின் கரையில் எல்லாருக்கும் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
 அனுமார் கோவில்

சிவன்கோவில்

சிவன்கோவில்
இதைத் தவிர சிவன் கோயில் ஒன்றும் உள்ளது. அதுவும் குளத்தின் தென்கரையில் உள்ளது.
அது சரிய்யா, உங்கள் ஊர் எங்கே இருக்குன்னு கேட்பது, காதுலே விழுது.

ஹிரன்யகசிபுவை கொல்வதற்கு எல்லாரும் கூடிப் பேசினாங்களே,

ராமானுஜர் திருமந்திரத்தை தான் உயிர் போனாலும் பரவாயில்லை, மற்ற எல்லாரும் உய்ய வேண்டி கோபுரத்தின் உச்சியிலே நின்னு "ஓம் நமோ நாராயணாய" என்று சொன்ன,

பெரியாழ்வார் கிருஷ்ணன் இந்த ஊரில் தான் பிறந்தான் என்று எண்ணிக் கொண்டு "வண்ண மாடங்கள் சூழ்" என்று திருப்பல்லாண்டு பாடிய, திருக்கோஷ்டியூர் அருகிலும்,

பிள்ளையாருக்கு உகந்த கோயில் கொண்டிருக்கும் பிள்ளையாற்பட்டிக்கு அருகிலும்,

ஆகிய இரண்டுக்கும் நடுவில் உள்ளதுதான் எங்கள் ஊர்.

                    " வண்டினம் முரலும் சோலை, மயிலினம் ஆளும் சோலை
              கொண்டால் மீதனவும் சோலை,குயிலினம் கூவும் சோலை"

குயில்களும் மயில்களும் துள்ளி விளையாடும் இடமா? உங்கள் ஊர்?
வண்டுகள் ரீங்காரம்செய்யும் இடமா? கெண்டை மீன் துள்ளி விளையாடும் ஆறுகள் பாயும் இடமா?
அப்படியும் இருக்குமோ, இப்படியும் இருக்குமோ? என்று கற்பனையில் நினைக்காதிர்கள்!!
வறண்ட செம்மண பூமி, மழை பெய்தால் தான் புல் பூண்டுகள் முளைக்கலாமா என்று நினைக்கும் இடம். ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து, வானம் இருண்டால் வாழ உலகினில் பெய்தால்தான் அங்கு உள்ளவர்கள் வாழ்வு மலர முடியும்.
அப்படிப்பட்ட ஊர் தான் எங்க ஊர் நெடுமரம். என்ன மரமெல்லாம் பெரிசா வளந்திருக்குமோ?
அப்படின்னு கேட்கிறிங்களா?
அதெல்லாம் ஓண்னுமில்லைங்க, ஏதோ பேர் வச்சுட்டாங்க நெடுமரம்ன்னு, அவ்வளவுதாங்க.
அப்படிப்பட்ட ஊர்ப்பத்தி சொல்லணும்.
எங்க அப்பாவுக்கு பெரிய சம்பளம்ன்னு என்னும் அப்ப கிடையாது, அதனாலே
மூத்த பிள்ளையான நான் படிக்க!!!! முதல்லே போன பள்ளிக்கூடம், இப்ப எப்படி மாறி இருக்கு பாருங்க. என்ன ஆச்சர்யக்குறி நிறையப் போட்டிருக்குன்னு பார்க்கிறிங்களா?


ஆமா,அந்தப் பள்ளிக்கூடத்திலேயே முழுசா ஒரு வருஷம் படிச்சிருப்பேனான்னு எங்க அம்மாவைக் கேட்டாத்தான் தெரியும்.
அந்த பள்ளிக்கூட மாணவர்களுக்கு என்னவெல்லாம் சொல்லித் தருகிறார்கள் என்பதை அந்த விளம்பரத்தைப் பார்த்தாலே தெரியும்.
மாணவர்கள் முன்னேறி விடுவார்கள் இல்லையா? இதிலென்ன சந்தேகம்!!!





அந்த ஊர் மக்களுக்கு, ஏன் ஜாதி பேதம் இன்றி, எல்லாருக்கும் குடிக்கத் தேவையானத்  தண்ணீரைத் தரும் குளம், அந்த அம்மன் கோயில் குளம்தாங்க. என்னுடைய பாட்டி குளத்துத் தண்ணிரை எடுத்து வந்து ஏதோ கொட்டையை வைத்து கடைவார்கள்!
கேட்டால் தேத்தாங்கொட்டை என்பார்கள். எப்படித் தெளிந்து இருக்கும் தெரியுமா?
இப்ப நாம காசு கொடுத்து வாங்கும் தண்ணிர், அதனிடம் பிச்சை வாங்க வேண்டும்.ஆனால் இப்ப அந்த குளத்துத் தண்ணீரை யாரும் பயன்படுத்துகிறார்களா என்பது  சந்தேகம்தான்! 

மலையரசி அம்மன்.

அதுதான் அந்த அம்மனோட பேரு!
இதுலே என்ன விசேஷம்ன்னா, கோயில்ல அம்மனுக்குன்னு எந்த சிலையும் கிடையாது.
அம்மனை பெண்களும் போய் பார்க்கறது வழக்கம் இல்லை. ஆச்சர்யமாக இல்லை!
அம்மனனுக்கு மாலை கட்டிப் போட்டால், நாம வேண்டிக்கிறது எல்லாம் நடக்கும். இது  இந்நாள் வரை நடந்துண்டு இருக்கும் வழக்கம்.
ஆழ்வார்கள் யாரும் பெருமாள் மேல் பாசுரங்கள் பாடயுள்ளனரா என்றால் இல்லை என்றே  சொல்லவேணும்.
ஆனால் இந்த அம்மனை கவியரசு கண்ணதாசன்  தன்னுடைய பாடல்களில் பாடியுள்ளார் என்பது அதைவிட ஆச்சர்யம்.
முன்னாலே சொன்னோமே பெருமாள் கோயில் குளம்ன்னு, அந்தக் குளத்தில்
அக்கிரஹாரத்தைச் சேர்ந்த பெண்கள் தாங்கள் விட்டுப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போய் தேய்த்து, பின்னர் அங்கேயே குளித்து விட்டு வருவார்கள் அப்ப எப்படி இருந்ததோ  அப்படியே தான் இப்போதும் உள்ளது. ஒரு மாற்றமும் இல்லை, குளத்தில்!
மாற்றம், அக்கிரஹாரத்தில் தான்!
போலீஸுக்கு சொல்லித்தான், அக்கிரஹாரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.!
அது மட்டுமா? அக்கிரஹாரத்தில் இருந்த மக்களையும் தான்.
அந்தப் லக்ஷ்மி நாராயணன் தான் அவர்கள் மனதில் சென்று அவர்களை இங்கு வரவழைக்க  வேண்டும்.
ஆனால் வருஷத்து இரு தடவை கோவிலில் நடக்கும் விஷேஷத்துக்கு வந்து விடுவார்கள்
அப்படித்தான் இந்த வருஷம் கோவிலில் குடமுழுக்கு நடந்து ஏழாவது வருஷ பிரதிஷ்டா  தினம் 5-6-2012 அன்று நடைபெற்றது. திருமஞ்சனம் மற்றும் ஹோமங்கள் நடைபெற்றன.

ஹோமத்தில் கலந்து கொண்ட சில அன்பர்கள்


ஹோம திரவியங்கள் பிரதக்ஷிணம்
ஹோமம்

திருவெள்ளறை அர்ச்சகர்கள் வெகு சிறப்பாக நடத்தினர்.
அதிலேருந்து சில காட்சிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
என்ன!!நெடுமறம் நோக்கி கிளம்பிட்டீங்களா?

வியாழன், மே 24

திருவள்ளூர்!!!!! ஏன் அந்தப் பெயர்?

திருவள்ளூர்!!!!! ஏன் அந்தப் பெயர்?

ஒரு விட்டுக்கு விருந்தாளி வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்?
என்ன செய்யவேண்டும்?
முதலில் கதவின் வெளியில் ஒரு பூட்டைத் தொங்கவிடச்
செய்ய வேண்டும், அப்படிங்கற!! அப்பத்தான் விட்டுலே ஆள் இல்லைன்னு நினைத்து  வரவங்க உடனே திரும்பிப் போவாங்க!
பீன்ஸ் என்ன விலை தெரியுமா?
கிலோ 85 ரூபாய்ங்க.
10 ரூபாய்,15 ரூபாய் வித்த காய்கறி எல்லாம் இப்ப நூறு
ரூபாய் விக்குதுங்க! ஆமாய்யா காய்கனி விக்கற விலையிலே நமக்கே
ஆகாரம் கிடைக்குமான்னு தெரியலே, இதுலே வரவங்களே என்ன செய்ய வேண்டும்
அப்படிங்கிறிங்க!!
அப்படிச் சொல்லாதிங்க" இது நான்.
"விதுரர் மகாபாரதத்தில் திருதிராஷ்டிரனுக்கு உபதேசம் செய்யறார், பல நீதிகளை  உபதேசம் செய்யறார். அவன் தன் பிள்ளைகள் தான் உசந்தவங்க,
தன் தம்பி பசங்களுக்கு எதுவும் போய் சேரக் கூடாது என்பதில் கறாராக இருக்கிறார்,
அதனாலே தூக்கம் வராமல் கஷ்ட படும்போது விதுரரைக் கூப்பிட்டு,
"விதுரா, ராத்திரியில் தூக்கம் வரவில்லை,என்ன செய்யலாம்?"
விதுரருக்குத் தெரியும், இவருக்கு ஏன் தூக்கம் வரலைன்னு, இருந்தாலும் தனக்கு தெரிந்த  நீதியை திருதிராஷ்டிரனுக்கு உபதேசம் செய்கிறான்.
"திருதிராஷ்டிரா,வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை எப்படி உபசரிக்கனும்ன்னு சொல்றேன்  கேளு"
என்று சொல்கிறார் விதுரர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்று திருவள்ளூர். இது தொண்டை நாட்டு திவ்ய ஸ்தலங்களில்  முக்கியமானது ஆகும். இந்த ஸ்தலம் அகோபில மடத்தின் நிர்வாகத்தின் கீழே வருகிறது.
அதன் பழமையான பெயர் "திரு எவ்வுள் ஊர்" என்பது தான் ஆகும்.
"எவ்வுள்" என்றால்  "எந்த அறை?" என்று அர்த்தம் ஆகும்.
பகவான் ஒரு ரிஷியைப் பார்த்து கேட்டதால் அதற்கு
அந்த பெயர் ஏற்பட்டது. நாளடைவில் மருவி "திருவள்ளூர்" என்று மாறி விட்டது.
திருத்தாவநாசினிதிருக்குளம்திருத்தாவநாசினி  என்ற பெயரில் புஷ்கரணிஉள்ளது. இதில் அமாவாசை தோறும  வெல்லம் கரைப்பார்களாம். நோய்வாய் பட்டவர்களின் நோய் தீர்ந்து விடுமாம்.
இந்த பெருமாளின் மற்றொரு பெயர் வைத்திய வீரராகவன் ஆகும்.
ஆம், எல்லா நோய்களையும் நீக்கும் பெருமாள் இவர். ஆம், உலகம் என்ற
சம்சார நோயையும் நீக்குவார்
தீக்ஷாரண்யம்  என்பது பழைய பெயர்.
மூலமூர்த்தி புஜங்க சயனத்தில் ஆதிசேஷன் மேல் எழுந்தருளி உள்ளார். உற்சவமூர்த்தி வீரராகவப் பெருமாள்  என்று பெயர். வேதாந்த தேசிகர் இந்த திவ்ய தேசத்தைப் பற்றி விரிவாக எழுதி உள்ளார்.

விருந்தாளி வரும் போது என்ன செய்ய வேண்டும்?
வருபவரை நாம் எழுந்து வரவேற்கவேண்டும், தங்களுக்கு என்ன வேண்டும் என்று  கேட்க வேண்டும், குடிக்க, தாகத்து நீர் கொடுக்க வேண்டும் என்பன முக்கியமானது ஆகும்.
சாலி ஹோத்ர மகரிஷி ரொம்ப நாளாக "சாலி" என்ற நெல் மணிகளைக் கொண்டு  பிள்ளை பேறு வேண்டி பெருமாளை நினைத்து தியானம் செய்து கொண்டிருந்தார்.
பெருமானும் அவர் முன்னால் வந்து
,"உமக்கு என்ன வேண்டும்"
என்று கேட்டார்.
மகிரிஷியும் விஷயத்தைக் கூற, பெருமானும்,
"திருத்தவநாசினி கையில் இருந்து கொண்டு என்னை வணங்கி வாரும்"
என்று சொல்லி விட்டு மறைந்து விடுகிறார்.
நீண்ட நாட்கள் ஆன பிறகு, பெருமான்,ஒரு வயோதிக உருவத்தை எடுத்துக் கொண்டு,  ரிஷியின் முன்னே தோன்றினான்.
களைத்துப் போய் இருந்த பெருமானைப் பார்த்து மகரிஷி, அவர் திருவடிகளை அலம்பி,
"என்ன சாப்பிடுகிறீர்?",என்று கேட்டார்.
உடன் பெருமான், "என்ன கொடுத்தாலும் தேவலை"
ரிஷியும், தன்னிடம் உள்ள மாவு பக்ஷணத்தை பாதி ஆக்கி, மறுபாதியை பெருமானிடம்  கொடுத்தார். பெருமானும் வாங்கி சாப்பிட்டு விட்டு, "இன்னும் பசியாரவில்லை, இன்னும்  வேண்டும்" என்றார்.
ரிஷியும் தன்னிடம் இருந்த பாதியில், அதனைப் பாதியாக்கி ,பெருமானிடம் கொடுத்தார். அதையும் பெற்றுக் கொண்டு சாப்பிட்டுவிட்டு, "களைப்பாக உள்ளது, நான் படுக்க வேண்டும்'
என்னால் எங்கும் நடக்க முடியாது, நான் ஓய்வடுக்க "எவ்வுள்?""
திருஎவ்வுள்?

"இதோ இந்த இடத்திலேயே படுக்கலாமே?"
உடனேயே சடக்கென ரிஷியின் தொடையையே தலையனையாகக் கொண்டு
படுத்துக் கொண்டார்.
அப்பத்தான் ரிஷிக்கு, வந்திருப்பது பகவான் என்று தெரிந்து கொண்டார். உடனே பகவானிடம்
"இங்கேயே தங்கி எல்லாருக்கும் அனுக்கிரகம் செய்ய வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார்.
அன்று முதல் அங்கேயே இருந்து காட்சி அளிக்கிறார்.



வைத்யவீரராகவன்
ஆக பெருமானே கூட ஒருநாள் விருந்தாளியாக வரலாம். அதனால் வருகின்ற விருந்தாளியை  முக மலர்ச்சியுடன் வரவேற்க வேண்டும், ஆசனம் கொடுக்க வேண்டும், ஆகாரத்தைக்  கொடுக்க வேண்டும்
அதனால் தானோ என்னவோ கிராமங்களில் எல்லாம் வாசலில் ஒரு திண்ணை வைத்துக் கட்டி இருப்பார்கள். இரவில் வருகின்ற வழிப் போக்கன் தங்கி படுத்துச் செல்ல ஏதுவாக  இருக்கும்.
" இப்ப புரிஞ்சதுங்க, என்ன கஷ்டம் வந்தாலும் வரும் விருந்தாளிகளை உபசரிக்கிறேங்க?"
 விஜய்  தொலைக்காட்சியில் .உ..வே .ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து எடுக்கப் பட்டது

வெள்ளி, ஏப்ரல் 20

விருப்பன் திருநாள்.



விருப்பன் திருநாள்.
விஜயநகர பேரரசின் சங்கமகுல மன்னன் இரண்டாம் ஹரிஹரன், அவருடைய புதல்வரான  விருப்பன்ன உடையார் பெயரில் கி.பி.1383ல் ஏற்படுத்தப்பட்டத் திருவிழா சித்திரை பிரம்மோத்ஸ்வம். கி.பி.1371ல், நாற்பத்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வடதேசத்தவர்களின்
ஆக்கிரமிப்புத் தொல்லையால் ஸ்ரீரங்கத்தை விட்டு சென்ற அரங்கன், தமிழகத்தைச் சுற்றி விட்டு  மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பினான். ஆனால் கர்ப்பகிரஹமும்மற்றைய மண்டபங்களும் பாழடைந்த நிலையில் இருந்ததால், அவற்றை எல்லாம் விருப்பண்ண உடையார் துலாபாரம் ஏறி (இது  நடந்தது கி.பி.1377ல்) தந்த பதினேழாயிரம் பொற்காசுகளைக் கொண்டு கோயில் மண்டபங்கள்  சிரமைக்கப்பட்டன. பின்னர் கி.பி.1383ல் , அதாவது 60 ஆண்டுகளுக்குப்பிறகு உத்சவம்  கண்டருளினார். பின் கோயிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டவர் கிருஷ்ணராய உத்தம நம்பி.
மேலும் விருப்பண்ண உடையார் 51கிராமங்களை தருமமாகத் தந்தார். இந்தப் பெருவிழா பல  ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றதால் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை  சிறப்பித்தனர்.
இந்த விழாவில் கொடி ஏற்றத்தன்று கோயில் கணக்கப்பிள்ளைநம்பெருமாள் திருவாணைப்படி அழகிய மணவாளன் (பக்கத்தில் உள்ள கிராமம். நம்பெருமாள் ஸ்ரீரங்கம் திரும்புவதற்கு முன்  சில நாட்கள் இந்த கிராமத்தில் தங்க நேரிட்டது. அந்த ஊர் மக்கள்அந்த கிராமத்தை நம்பெருமாளுக்கு
சாசனமாக எழுதித் தந்தனர்.) கிராமத்தை குத்தகைக்கு விடுவதாக பட்டயம் எழுதுதல் முக்கியமான  நிகழ்ச்சியாகும்.
மேலும் தேர் அன்று, பாமர மக்கள் தங்கள் நிலங்களில் விளைந்த தான்யங்களையும், பசுமாடு, கன்றுகளையும்  நம்பெருமாளுக்குக் காணிக்கையாக கோயில் கொட்டாரத்தில் சேர்ப்பர். மேலும் தேரடியிலும்,
கோயில் கொடிமரத்தின் அடியிலும் பலர் தலையில் தேங்காய்களை உடைத்துக் கொள்வது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சித்திரை தேருக்கு முதல் நாள் காலையில் நம்பெருமாள்  வெள்ளிக்குதிரையில் வீதிவலம்  வருவதை
"குதிரை வாகனமேறிமன்னர்கள் பலரும் புரிய ஒளிவீசும் நவரத்தினங்கள் இழைத்த ஆபரணங்களை அணிந்து கொண்டு கஸ்தூரி ரெங்கராஜா பவனி வருகிறார்!! வணங்குவோம் வாரீர்!!" எனப்
புலவர்கள் வாழ்த்துவர்.
"அரங்கநாதன் குதிரை மீதேறி பவனி வருவதே தனி அழகு.கடிவாளத்தை பிடித்து அமர்ந்து  இருக்கும் ஒய்யாரம், புன்சிரிப்பு, மக்களை நலம் விசாரிக்கும் முறை, தேரைப் பார்வை இடும்  முறை, இவை யாவும் அயோத்தியில் சக்கரவர்த்தித் திருமகன் அரச வீதி உலா வருவது போல  இருக்கும்" என்று மற்றொரு புலவர் பாடுகிறார்.
மாலையில் தங்கக் குதிரையில் வீதிகள் வலம் வருகிறார். ஒவ்வரு நாளும் காலையிலும்  மாலையிலும் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்த பிறகு நான்முகன் கோபுர வாயிலில்  அமுது படைக்கப்படும். விஜயநகர சொக்கநாத நாயக்கரால் நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில்  திருஷ்டி
(இறைவனுக்கே) கழிக்க திருவந்திக்காப்பு ஆகும்.பின்னர் வாகன மண்டபத்தில் படிக்ளைந்து, நம்பெருமாள் முன்னர் கார்த்திகை கோபுர வாசலில் திவ்யப் பிரபந்தம் சாத்து முறை ஆகும்.அதன்பின் நம்மாழ்வார்
சந்நிதியில் இயற்ப்பா சாற்று முறை ஆகும்.
நம்பெருமாள் ரக்ஷாபந்தனம் செய்து கொண்ட பின் விழா முடிந்து தீர்த்தவாரி  வரை கண்ணாடி  அறையில் எழுந்தருளி இருப்பார். காலைப் புறப்பாடு மற்றும் மாலை புறப்பாடும் பெருமான்  திருமேனியில் வெயில் படாவண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.
ஏழாம் திருநாள் அன்று, நெல் அளவை அன்று கோயில் முறைகாரர் (காரளப்பான்) திருவரங்கம்  ஒன்று, பெரிய கோயில் இரண்டு, மூன்று  என்று தங்க மரக்காலால் அளவு சொல்லி  நெல் அளப்பார். 
இவ்வளவு பெருமை கொண்ட அரங்கன் விருப்பன் திருநாளில் இன்று (20-04-2012), தேர்.
இந்த திருநாட்களைக் காண ஒரு முறை ஸ்ரீரங்கம் வரவேண்டும். விழா, மக்களின் பக்தி  உணர்வோடு நடைபெறுவதைக் கண்குளிரக் காணவேண்டும். அதற்கு அந்த அரங்கன்  அருள் புரிய வேண்டும்.
ஸ்ரீரங்கம் தேர் தேர் நகர் முயற்சி

ஞாயிறு, ஏப்ரல் 15

புண்டரீகர் என்ன செய்தார்?

ஸ்தல சயன பெருமாள் 2ஸ்தல சயனப் பெருமாள் கோயில்

புண்டரீகர் என்ன செய்தார்?
புண்டரீகர் திருக்கடல்மல்லை அதாவது மகாபலிபுரம் என்ற ஊரில் இருந்தார். அவர் பெருமாள்
கடலில் (திருப்பாற்கடலில்) பள்ளிகொண்டு இருக்கிறார் என்ற நினைப்பில் நேரே கடலுக்குப்
போனார், தான் கையையே கொட்டாங்குச்சியைப் போல் செய்து கொண்டு கடல் நீர் முழுவதையும்
எடுத்து கரையில் கொட்ட ஆரம்பித்தார்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் இவர் என்ன செய்கிறார் என்று,
"புண்டரிகரே, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று வினவினர்.
அவரும் " பெருமாள் கடலில் சயனித்து கொண்டிருக்கிறார் இல்லையா, அதனால் எல்லா
நீரையும் வெளியே எடுத்துக் கொட்டிவிட்டு அந்த சயனக் கோலத்தைப் பார்க்க ஆசைப் பட்டு
இதனை செய்து கொண்டிருக்கிறேன்", என்று பதில் கூறினார்.
இதனைக் கேட்டவுடன் மக்களுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. இப்படிக் கூட
கலங்குவார்களா? ஆனால் கலங்கினால்தான் பக்தி. நாமெல்லாம் தெளிவாக உள்ளோம்.
இதேபோல உதாரணம் மற்றொன்று உண்டு.
மகாபாரதத்தில் கண்ணன் விதுரரின் குடிசைக்கு வருகிறான். விதுரர் எல்லாம் நன்றாக உள்ளதா
ஒருதடவைக்கு இருதடவை சரி பார்க்கிறார். கண்ணன் உட்காரும் ஆசனப்பலகையை நன்றாகத்
துடைத்து விட்டு, பலதடவை கையால் தடவிப் பார்க்கிராறாம்.
பாரதம் எழுதிய வியாசர், இந்த பக்தியை நினைந்து வியக்கிராராம்! 
இவர் வீடு, இவர் மனை. எதற்காக தடவித் தடவிப் பார்க்கவேண்டும்?
இவர் இருப்பது துரியோதணன் வீட்டில்,  அவன் கொடுக்கும் சோற்றைத் தான் இத்தனை நாள்
சாப்பிட்டுஉள்ளார். அவன் என்ன செய்தான், பள்ளம் வெட்டி அர்ச்சுனன் போன்றவர்களை சிறை
பிடிக்கப் பார்த்தான், பொய் ஆசனம் இட்டு கண்ணனைப் பிடிக்கப் பார்த்தான், அதேபோல
எங்காவது தனக்குத் தெரியாமலேயே ஆசனத்தில் முள் வைத்து இருப்பேனோ? என்ற நினைப்பில்
தான் பலதடவை ஆசனத்தை தடவிப் பார்த்தார்.
அவ்வளவு பக்தி கண்ணன் மேல்!
அது போலத்தான் புண்டரிகர்!!
ஆதிசேஷன் மேல் சயனத்திருந்த பெருமாள் யோசித்தார். இவருக்கு காட்சி கொடுப்பதென்று.
"ஆம், உள்ளே இருந்தால் எப்போது இவன் என்னை சேவிப்பான்? நேரமில்லை, உடனே
புறப்படுவோம்". எல்லாவற்றையும் மறந்தார்,

ஆம் ஆதிசேஷனையும் தான்.
நேரே வந்து தரையில் படுத்துக் கொண்டு புண்டரிகருக்குக் காட்சி அளித்தார்.
அதனால்தான் ஸ்தல சயனப் பெருமாள் என்று பெயர். திருக்கடல் மல்லை பெருமாள்
"ஸ்தல சயன[ பெருமாள்"  எனப்படுவார்.
பெருமாள் 27 திவ்ய தேசத்தில் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.

ச்தலசயனப் பெருமாள்பெருமாள் புன்டரிகருக்கு காட்சி
அவற்றில் ஆதிசேஷன் இல்லாமல் நிலத்தில் ஸ்தல சயனப் பெருமாளாக ( தரை கிடந்தான்)
சேவை சாதிக்கும் தலம். மனித உருவில் வந்ததால் சங்கு சக்கரங்களும் இல்லை,
ஸ்ரீதேவி , பூதேவியும் நாபியில் இருந்து பிரம்மனும் இல்லை. புண்டரீக முனிவர் சமர்பித்த
ஆயிரம் இதழ் தாமரையில் திருவடிகளை வைத்த வண்ணம் சேவை சாதிக்கின்றார்
பெருமாள்.
ஆதி சேஷன் இல்லாமல் தரையில் நான்கு திருக்கரங்களுடன்,
வலத் திருக்கரத்தை திருமார்பில் ஞான முத்திரையாக, கிழக்கு நோக்கிய திருமுக
மண்டலத்துடன், ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு பெருமாள் சேவை
சாதிக்கின்றார்

திங்கள், மார்ச் 19

ஊர் கூடி தேர் இழுப்போம்!!!!!

ஊர் கூடி தேர் இழுப்போம்!!!!!
முக்திக்கு சுலபமான வழி!!
பிறந்தவர்கள் எல்லோரும் இறக்கத்தான் போகிறார்கள். ஆழ்வார் சொல்கிறார், மனிசரின் வயது நூறு  எனக்கொண்டால், அதில் பாதி வருடம் தூக்கத்திலேயே போய் விடுமாம். மீதி உள்ள  ஆண்டுகளில், பிணி, மூப்பு, பாலகன், அதாகும் போன்று ஆண்டுகள் பதினைந்து போய்  விடுமாம். இதில் பகலில் தூங்குவதையும் சேர்த்துக் கொண்டால் நாம் உயிர் வாழ்வது மிகக்
குறைந்த ஆண்டுகள் தான்.
நாம் செய்த பாப புண்ணியங்களுக்கு ஏற்ப, இறந்த பின் நரகமோ அல்லது சொர்க்கமோ  கிடைக்கப் போகிறது.
"உன் கடைசி ஆசை என்ன?" ன்னு
வயதானவர்களைக் கேட்டுப் பாருங்கள்,
"எங்கும் சுற்றி ரங்கனைச் சேர்" என்பார்கள். அதுபோல
"கடைசிக் காலத்திலே என்னைக் கொண்டு போய் பாடுவான்துறையிலே
சேத்துடுங்கப்பா" என்பார்கள்.
அதென்ன பாடுவாந்துரைங்கிங்களா? திருமங்கை மன்னன் படித்துறை, கொள்ளிடத்தின் கரையில் உள்ளது.
இது திருமங்கை ஆழ்வார் பற்றியது.
திருமங்கை மன்னன் அரங்கனால் ஆட்கொள்ளப்பட்டபின், அவனுக்காக பல இடங்களிலும்  பொன், பொருள் இவற்றைத் திருடி, திருவரங்கத்தின் திருமதிளைக் கட்டினான். இவர்  பெயரில் "ஆலீ நாடன் திருச்சுற்று" ஒரு திருச்சுற்று உள்ளது.  மதில் கட்டுவதற்கு உதவிய கம்மாளர்களுக்கு பாக்கி கொடுக்க முடியாமல், படகில் ஏற்றி  ஆற்றில் தள்ளினார். எப்படி இருக்கு பாருங்கள்!
பெருமானின் அருளால், எதிர்த்து வந்த அவர்களின் பேரன்களை, காவேரி நீராழி மண்டபத்தில் நின்று கொண்டு, இறந்து போனவர்களை அழைக்கச் சொன்னார். பித்ருக்கள் அனைவரும்  பெருமாளோடு அங்கு தோன்றி
"நாங்கள் ஆழ்வார் அருளோடு பெருமாளோடு சுகமாக  இருக்கிறோம் நீங்களும்  ஆழ்வாரையே தஞ்சமாக பற்றி இருங்கள்"
என்று கூறினர்.
அப்போது நம்பெருமாள் ஆழ்வாரை பார்த்து
 " உம் விருப்பத்தைக் கேளும்" என வினவ
ஆழ்வார்,
      "தங்கள் தசாவதாரங்களை காண்பிக்கவேண்டும்"
என்றார். மேலும் "என்ன விருப்பம்?" என பெருமான் கேட்க,
"நம் பக்தர்களுக்கு உயர் கதி அளிக்கவேண்டும்', என ஆழ்வார் கேட்க,
"உம் வாளை வேகமாக வீசும், அது எங்கு விழுகிறதோ அங்கு இறுதிச் சடங்குகளை  செய்பவர்களுக்கு உயர்கதி அளிப்போம்",
என்றான் அரங்கன்.
ஆழ்வார் தான் வாளை வேகமாக வீச, அது வடதிருக்காவிரியின் கரையில் விழ, அங்கு  "பாடிய வாளன் துறை" என்ற பெயரோடு இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடமாயிற்று.
அதைத் தான் "பாடுவாந்துரை, பாடுவந்துறை" என்று சொல்லுகிறார்கள்.
அப்படி பாடுவாந்துரையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றால் முக்தி நிச்சயம்.
அதற்காகவவாது ஸ்ரீரங்கத்தில் இறக்க வேண்டும் என்று பலரும் விருப்பப்படுவார்கள்
பாடுவாந்துறை:
நன்றி: கிஞ்சித்காரம் ட்ரஸ்ட் 2012 நாட்காட்டி
அந்தப் பாடுவாந்துரையில் இறுதிச் சடங்குகள் நடத்த ஏதுவாக, அந்திம ஸம்ஸ்காரங்களையும் வருடாந்திர ஸ்ரார்த்த காரியங்களையும் செய்ய வசதியாக தர்ம சிந்தனை உடைய  சிலரால்

"ஸ்ரீ திருமங்கை மன்னன் சாரிடபிள் ட்ரஸ்ட்"
 2008 ஆண்டு பதிவு செய்யப்பட்டு  முதல் கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. கொள்ளிடக்கரையில் 11000 சதுர அடி, ஒரு தர்ம சிந்தனை  கொண்ட குடும்பம் மூலமாக தானமாக பெறப்பட்டு, ட்ரஸ்ட் பெயரில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.
நித்ய விதிகளுக்கு அறைகள், கிணறு, கரைப்பதற்கு குளம், தீட்டு இல்லாமல் காரியங்கள்  நடத்த தனியான இடம், கழிவறைகள், தடையில்லாத மின்சாரம் போன்றவைகளுக்கு  நன்கொடைகள் எதிர்பார்க்கிறார்கள்.
ராமனுக்கு அணில் செய்தது போல், ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். இதில் அளிக்கப்படும் நன்கொடைகள் 80G பிரிவின் படி வருமான வரி விலக்கு உண்டாம்.
மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
                 ஸ்ரீ திருமங்கை மன்னன் சாரிடபிள் டிரஸ்ட்
                 23, ராஜாஜி தெரு, ரெங்கநகர், ஸ்ரீரங்கம்,திருச்சி-620006
                 போன்:0431-2433078,
                E-Mail:stmmtrust@yahoo.com
ஆக ஸ்ரீரங்கத்தில் இருந்தாலும் சொர்க்கம், மறைந்த பின்னும் சொர்க்கம்.
அதனால் தான் ஸ்ரீரங்கத்தை பூலோக சொர்க்கம் என்கிறார்களோ?