வெள்ளி, ஏப்ரல் 20

விருப்பன் திருநாள்.



விருப்பன் திருநாள்.
விஜயநகர பேரரசின் சங்கமகுல மன்னன் இரண்டாம் ஹரிஹரன், அவருடைய புதல்வரான  விருப்பன்ன உடையார் பெயரில் கி.பி.1383ல் ஏற்படுத்தப்பட்டத் திருவிழா சித்திரை பிரம்மோத்ஸ்வம். கி.பி.1371ல், நாற்பத்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வடதேசத்தவர்களின்
ஆக்கிரமிப்புத் தொல்லையால் ஸ்ரீரங்கத்தை விட்டு சென்ற அரங்கன், தமிழகத்தைச் சுற்றி விட்டு  மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பினான். ஆனால் கர்ப்பகிரஹமும்மற்றைய மண்டபங்களும் பாழடைந்த நிலையில் இருந்ததால், அவற்றை எல்லாம் விருப்பண்ண உடையார் துலாபாரம் ஏறி (இது  நடந்தது கி.பி.1377ல்) தந்த பதினேழாயிரம் பொற்காசுகளைக் கொண்டு கோயில் மண்டபங்கள்  சிரமைக்கப்பட்டன. பின்னர் கி.பி.1383ல் , அதாவது 60 ஆண்டுகளுக்குப்பிறகு உத்சவம்  கண்டருளினார். பின் கோயிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டவர் கிருஷ்ணராய உத்தம நம்பி.
மேலும் விருப்பண்ண உடையார் 51கிராமங்களை தருமமாகத் தந்தார். இந்தப் பெருவிழா பல  ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றதால் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை  சிறப்பித்தனர்.
இந்த விழாவில் கொடி ஏற்றத்தன்று கோயில் கணக்கப்பிள்ளைநம்பெருமாள் திருவாணைப்படி அழகிய மணவாளன் (பக்கத்தில் உள்ள கிராமம். நம்பெருமாள் ஸ்ரீரங்கம் திரும்புவதற்கு முன்  சில நாட்கள் இந்த கிராமத்தில் தங்க நேரிட்டது. அந்த ஊர் மக்கள்அந்த கிராமத்தை நம்பெருமாளுக்கு
சாசனமாக எழுதித் தந்தனர்.) கிராமத்தை குத்தகைக்கு விடுவதாக பட்டயம் எழுதுதல் முக்கியமான  நிகழ்ச்சியாகும்.
மேலும் தேர் அன்று, பாமர மக்கள் தங்கள் நிலங்களில் விளைந்த தான்யங்களையும், பசுமாடு, கன்றுகளையும்  நம்பெருமாளுக்குக் காணிக்கையாக கோயில் கொட்டாரத்தில் சேர்ப்பர். மேலும் தேரடியிலும்,
கோயில் கொடிமரத்தின் அடியிலும் பலர் தலையில் தேங்காய்களை உடைத்துக் கொள்வது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சித்திரை தேருக்கு முதல் நாள் காலையில் நம்பெருமாள்  வெள்ளிக்குதிரையில் வீதிவலம்  வருவதை
"குதிரை வாகனமேறிமன்னர்கள் பலரும் புரிய ஒளிவீசும் நவரத்தினங்கள் இழைத்த ஆபரணங்களை அணிந்து கொண்டு கஸ்தூரி ரெங்கராஜா பவனி வருகிறார்!! வணங்குவோம் வாரீர்!!" எனப்
புலவர்கள் வாழ்த்துவர்.
"அரங்கநாதன் குதிரை மீதேறி பவனி வருவதே தனி அழகு.கடிவாளத்தை பிடித்து அமர்ந்து  இருக்கும் ஒய்யாரம், புன்சிரிப்பு, மக்களை நலம் விசாரிக்கும் முறை, தேரைப் பார்வை இடும்  முறை, இவை யாவும் அயோத்தியில் சக்கரவர்த்தித் திருமகன் அரச வீதி உலா வருவது போல  இருக்கும்" என்று மற்றொரு புலவர் பாடுகிறார்.
மாலையில் தங்கக் குதிரையில் வீதிகள் வலம் வருகிறார். ஒவ்வரு நாளும் காலையிலும்  மாலையிலும் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்த பிறகு நான்முகன் கோபுர வாயிலில்  அமுது படைக்கப்படும். விஜயநகர சொக்கநாத நாயக்கரால் நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில்  திருஷ்டி
(இறைவனுக்கே) கழிக்க திருவந்திக்காப்பு ஆகும்.பின்னர் வாகன மண்டபத்தில் படிக்ளைந்து, நம்பெருமாள் முன்னர் கார்த்திகை கோபுர வாசலில் திவ்யப் பிரபந்தம் சாத்து முறை ஆகும்.அதன்பின் நம்மாழ்வார்
சந்நிதியில் இயற்ப்பா சாற்று முறை ஆகும்.
நம்பெருமாள் ரக்ஷாபந்தனம் செய்து கொண்ட பின் விழா முடிந்து தீர்த்தவாரி  வரை கண்ணாடி  அறையில் எழுந்தருளி இருப்பார். காலைப் புறப்பாடு மற்றும் மாலை புறப்பாடும் பெருமான்  திருமேனியில் வெயில் படாவண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.
ஏழாம் திருநாள் அன்று, நெல் அளவை அன்று கோயில் முறைகாரர் (காரளப்பான்) திருவரங்கம்  ஒன்று, பெரிய கோயில் இரண்டு, மூன்று  என்று தங்க மரக்காலால் அளவு சொல்லி  நெல் அளப்பார். 
இவ்வளவு பெருமை கொண்ட அரங்கன் விருப்பன் திருநாளில் இன்று (20-04-2012), தேர்.
இந்த திருநாட்களைக் காண ஒரு முறை ஸ்ரீரங்கம் வரவேண்டும். விழா, மக்களின் பக்தி  உணர்வோடு நடைபெறுவதைக் கண்குளிரக் காணவேண்டும். அதற்கு அந்த அரங்கன்  அருள் புரிய வேண்டும்.
ஸ்ரீரங்கம் தேர் தேர் நகர் முயற்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக