சனி, மார்ச் 24

புராணம்

புராணம்


“நாளைக்கு நாம குடும்பத்தோட வெளியூர் போகப்போறோம், போற இடத்துல எல்லாம் சாப்பாடு கிடைக்குமான்னு தெரியல, அதனால சாப்பாடுக்கு என்ன பண்ணப்போற கோமளி?”
தன் மனைவியிடம் ராமநாதன், வெளியூரே அதிகமா போகாத மனுஷன், அடுத்த நாள் சொந்த ஊருக்கு செல்வதற்கு என்ன சாப்பாடு எடுத்துச் செல்வது பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்.
அவர் எச்சக்கையால காக்கா ஓட்டாதவர். போயிட்டு திரும்ப நாலு நாளாவது ஆகும். நாலு நாட்கள் ஹோட்டல்ல சாப்பிடுவார்ன்னா நினைக்கிறீங்க, சே,சே, அந்த மாதிரி நல்லதெல்லாமா ராமநாதன் செய்வார்.
கோமளிக்கு யாரத்தெரியுமோ தெரியாதோ,  வீட்டுக்காரர்  பத்தி நன்னாத் தெரியும். அவர்  எள்ளுன்னா இவங்க எண்ணையா இருப்பாங்க. 
“நான் அதப்பத்தி நன்னா யோசிச்சுடேங்க, நாலு நான் என்ன, ஒரு வாரம் ஆனாலும் கவலைப்பட வேண்டாங்க, நா பண்ற சாப்பாடு கெட்டே போகாதுங்க”
“அத எப்படி பண்றது எல்லாம் உனக்குத் தெரியுமா?
“என்ன அப்படி கேட்டுடீங்க? என்ன எனக்கு சமையலே பண்ணத்தெரியாத மாதிரி சொலறீங்க. எத்தன வருஷமா என் சமையல சாப்பிடுறீங்க. நான் பண்ணற சமையல எத்தன பேர் மெச்சறாங்க, தெரியுமா?”
 ( மனசுக்குள்ள ராமநாதன் தலையில் அடித்துக் கொள்கிறார், “இவ சமையல நீ மட்டும் தான் மெச்சிக்கணும். அன்னைக்கு ஹல்வா கிண்டறேன்னு சொல்லிட்டு, என்னிடம் இலுப்பசட்டிய கொடுத்து சட்டியில இருந்ததை நா எடுக்கப்பட்ட பாடு எனக்குத் தானே தெரியும். இப்ப என்ன பண்ணப் போராளோ?”
“அப்படி என்ன சாதம், ஒருவாரம் ஆனாலும் கெட்டுப்போகாதது?”
“ ஃபிரிட்ஜ் எல்லாம் இல்லாத காலத்திலேயே ஃபேமஸ் ஆனதுன்னா பாத்துக்கங்க. வெளியே வெச்சு இருந்தாலும் கெட்டுப் போகாதது”
“உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என அறு சுவைகளும் அதில் உண்டுங்க.”
“அத சாதமா வடிக்கறதே. ஒரு கலைங்க. புதுசா கல்யாணம் ஆன தம்பதிகள் மாதிரி பிண்ணிப் பிணைந்து இருக்ககூடாது. கையில ஒட்டக்கூடாது. குக்கர்ல வைக்கற போது அதிகமா விசில் சத்தம் வராம பாத்துக்கணும். வெளியே எடுத்தவுடன் உடனே பயன்படுத்தாம கொஞ்ச நேரம் ஆற உடணும். அது மட்டும் இல்லிங்க, நீங்க பெரிய அம்பானி மாதிரி பணக்காரனா இருந்தாலும் நல்லெண்ணெய் தாங்க பயன்படுத்தணும், வேற எந்த எண்ணெயையும் பயன்படுத்தக் கூடாதுங்க. வேணா நாட்டுசெக்கு எண்ணெய்ன்னு எங்க பாத்தாலும் பீத்திக்கிறாங்களே, அந்த நல்லெண்ணெய் பயன்படுத்தலாங்க. இந்த ஆகாரம் ஏகபத்தினி விரதம் கொண்டவன்.”
“அது மட்டும் இல்ல,இந்த சாதத்துல கலக்குறதுக்குன்னு தனியா ஒரு பேஸ்ட்ட முன்னாலேயே தயார் பண்ணி வச்சிக்கணும்ங்க.”
“டூத் பேஸ்டா, அது வேறயா?'
'ஆமாங்க, டூத் பேஸ்ட் இல்லீங்க, இத தயார் பண்றதுல தான் ஒரு பொண்ணோட சாமர்த்தியம்  இருக்கு”
ராமநாதன் மனசுக்குள், “அது தான் உனக்கு கிடையாதே”
“அடுத்து புளிங்க.  நேற்று முளைத்த தீபா பேரவை போல புதுப்புளி கூடாதுங்க!  கலைஞர் போன்ற பழம் புளியே இது ஏத்துக்குங்க. கருப்பா இருக்குற புளிய தண்ணி கலந்து நன்னா கரச்சு கெட்டியாப் பண்ணிக்கணும். தேவைக்கு ஏற்ப நல்ல காரசாரமான. குண்டு மிளகா, நிலக்கடலை ,பெருங்காயம்,  கட்டியா இருந்தா உசிதம்,  கொஞ்சம் வெந்தயம், கட்லப்பருப்பு ,விரளி மஞ்சள பொடி பண்ணி  நன்னா காய்ந்த  நல்லெண்ணய்ல போட்டு வதக்கிட்டு, முன்னால சொன்ன கரச்ச புளிக்கரைசல அதுல ஊத்தி நன்னா கொதிக்க விடணும்.  பொறுமைதாங்க முக்கியம்.  கொதிக்க கொதிக்க, நன்னா சுண்டணும், விழுது மாதிரி கெட்டியா வரை கொதிக்க விடணும். நன்னா ஆறின பிறகு, முன்னால தனித் தனியாக ஒட்டாம இருக்குற சாதத்தில கொஞ்சம், இந்த விழுத போட்டு மேலோட்டமா களறனும். அழுத்தக் கூடாதுங்க. தனித்தனியா உதறி உதறியா, லைட் மஞ்ச கலர்ல சாதம் நல்லெண்ணெய் வாசனையோட மணக்க வரதப் பார்க்கறச்சேயே சாப்பிடணும் போல இருக்குங்க.”
“இதுக்கு பேரு ஃபிரைடு ரைஸ்ன்னு சொலவாங்களா கமலி?”
“இத எங்க ஊர் இன்னம்பூர் பெருமாள் கோவில் உற்சவத்தில் அப்பு மாமான்னு ஒருத்தர் பண்ணுவார் பாருங்க, அதுக்கு அடிதடியே நடக்கும்ன்னா பாத்துக்குங்க!!!!
“பெருமாள் கோவில்ல ஃபிரைடு ரைஸ் பண்ணமாட்டாங்களே?”
“ஆமாங்க, இந்த சாதத்துக்கு புளியோதரைன்னு பேருங்க!!!!”
“சே, இத்தன நாழி அதப்பத்தி தான் பேசிண்டு இருந்தியா? நான் என்னவோ புது டிஷ் எதேயோ சொலறேன்னு நினைச்சேன்.”
“ஆமாங்க, இந்த புளியோதரைய ஒருவாரம் வச்சுருந்தா கூட கெட்டுப்போகாதுங்க. அத விட அடுத்த நாள், இதுல தயிரை விட்டு சாப்பிட்டுப் பாருங்க, சூப்பரா இருக்கும்.”
“போதும் உன் புளியோதரை புராணம். இத நீ இத்தன வருஷத்துல ஒரு நாள் கூட நம்ம. வீட்டுல பண்ணினது இல்லையே?”
“”ஆமாங்க, இப்பத் தான் அடுத்த வீட்டு லக்ஷ்மி கிட்ட எப்படி பண்றதுன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டேங்க.”
“அப்ப நாங்கள்ளாம் எலின்னு சொல்லு”
“அப்படின்னா என்னங்க?”
“ புதுசா எதாவது மருந்து தயாரிக்கிறவங்க, அது சரியான மருந்தானான்னு எலிகளுக்கு கொடுத்து டெஸ்ட் பண்ணுவாங்களாம். அது மாதிரி, நீ பண்ணற புளியோதரைக்கு நாங்க தான் எலின்னு சொல்ல வரேன்!!!!”
“!,!,!,!”
“புளியோதரையும் சோறு, பொருத்தமான சாம்பாறு” ன்னு சொலவாங்களே, அதுமாதிரி இருந்தா சரி!!!!!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக