ஞாயிறு, மார்ச் 10

இன்னம்பூர் நினைவுகள்

பச்சைப் பசேல் என்று, பச்சைக் கம்பளம் விரித்தாற்ப் போல்
எஙகு பார்த்தாலும் வயல் வெளிகள். கீச்கீச் என்று குருவிகள் தங்கள்
கூட்டிலிருந்து வெளியே வரும் குரலோசை.
சுற்றிலும் தென்னை மரங்கள் சூழ்ந்த சோலை. எப்போது இந்த ஊரைப்
பார்ப்போம் என்று இளஞ்சூரியன் தன் பொன்னிற கிரணங்களை இந்த
ஊரை நோக்கி பாய்ச்ச்த் தயாராக இருக்கிறான். அந்தப் பொன்னிற காலை வேளை. அக்கிரஹாரத்து இளஞ்சிட்டுக்கள் தங்கள் வீட்டு வாசலைத் தெளித்து மாக்கோலம் போட்டுக் கொண்டு இருக்கும் சம்யம்.
இந்த மாதிரி இந்தக் காலத்திலும் ஒரு ஊர் இருக்கா என்று கேட்காதீர்கள்,
சாதாரண ஊர் அல்ல அது, 

அறுபத்து நாயன்மார்களில் ஒருவரால் பாடல் பெற்ற ஸ்தலம். அதுமட்டுமா முகமதிய படையெடுப்பின் போது  அரங்கனே திருவரங்கத்தில் இருந்து பல இடங்களுக்கும் சென்று
திருமலையில் தஞ்சம் அடந்த நேரத்தில், அங்கிருந்து கொண்டு
கொண்டு வரப்பட்ட ஸ்ரீனிவாசன் விக்கிரஹத்தை வைத்து கோயில் எழுப்பபட்ட ஊர்தான் அது.
இன்னம்பூர் தான் அந்த ஊர். 



இன்னம்பூர் சிவாலய வரலாறு

சிவாலய குருக்கள்

எழுத்தரிநாதர்

அழுத்தரிநாதர் சன்னிதி

தூரத்தில் எழுத்தரிநாதர்



அம்ம்பிகை சுகந்த குந்தாளாம்பாள்

எழுத்தரிநாதர்





 இது எங்க ஊர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குத் தனி பெருமை உண்டு. கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக் களம் எங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள திருபுறம்பியம் ஆகும்.
துர்வாச முனிவர் சாபத்தால் காட்டு யானையாகி அல்லலுற்றது ஐராவதம். ஷண்பக வனம் ஆகிய இன்னம்பூரில் உள்ள தாந்தோன்றி ஈசனை வழிபட்டு சாபம் நீங்கி ஒரு குளத்தை வெட்டியது. அந்த ஐராவதக் குளம் இந்தக் கோயிலுக்கு முன்னால் இப்பவும் உள்ளது.
சூரியன் ஆற்றல் பெறவேண்டி இத்தலத்து ஈசனை வழிபட்டுபேறு
பெற்றான் என்றும் கூறுவர். அவனுக்கு “இனன்” என்றும் பெயர் உண்டு.
இறைவனை சூரியன் நம்பி வழிபட்டதால், “இனன் நம்பு ஊர்” என்று
பெயர் ஏற்பட்டு “இன்னம்பூர்” என்று மாறிவிட்டது என்றும் சொல்வார்கள்.
அதற்குச் சான்றாக ஒவ்வொறு ஆண்டும் ஆவணி மாதம் 31ம் தேதியும்,
புரட்டாசி மாதம் 1,2 ஆகிய தேதிகளில் மற்றும் பங்குனி 13,14,15
ஆகிய தேதிகளில்சூரிய கிரணங்கள் இந்த பெருமானின் திருவடிகளில் படும்.
அதுமட்டுமா!!!!
அகத்திய முனிவர் இத்தலத்தை அடைந்த போது, இறைவன் அவருக்கு
தமிழிலக்கணம் உபதேசித்து அருளினார். அதலால் தான் இறைவனுக்கு
”எழுத்தறிநாதர்” என்ற பெயருடன் இத்தலத்தில் அருள் பாலிக்கிறார்.
ஒரு சமயம் சுதன்மன் என்ற அந்தணன் இப்பெருமானை பூசித்து,
நிர்வாகத்தையும் பார்த்து வந்தான்.அப்போது ஆண்டு வந்த மன்னன் தன்
நாட்டிலுள்ள கோயில்களின் வரவு செலவு கணக்குகளைக் கொண்டு வருமாறு எல்லா நிர்வாகிகளுக்கும் ஆணயிட்டான். சுதன்மனும் தன் பொறுப்பிலுள்ள இன்னம்பூர் திருகோயிலின் கணக்கினை மன்னன் முன் காட்டினான்.
மன்னனுக்கு சந்தேகம் வர மறுநாள் மீண்டும் வருமாறு பணீத்தான்.
நேர்மையும் சீலமும் உள்ள சுதன்மன் தான் தோன்றி ஈசனை போற்றிப்
பணிந்தான். இறைவனும் அன்பன் இடுக்கண் களைய தானே சுதன்மன்
வடிவிலே சென்று கணக்கினை வழுவின்றி எடுத்துரைத்தான்.மறுநாள் சுதன்மன் கனவில் தோன்றி நிகழ்ந்ததை எடுத்துரைத்தான். சுதன்மனும் இறைவன் திருவருளை வியந்து போற்றினார்.
அப்பர் பெருமானும் இதனை,
               “எழுதுங்கீழ்கணக்கு இன்னம்பர் ஈசனே”
என்று போற்றி பாடினார்.
   ”சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய்
        முடி பத்துடையான்றனைக் கனிய வூன்றிய காரணம்
     என்கொலோ இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே.”
-திருநாவுக்கரசர், தேவாரப்பதிகம்
    இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
         இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
    திருகோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
         தாழ்ந்து இறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே!
    என்னிலாரும் எனக்கினி யாரில்லை
         என்னு லும்மினி யானொரு வன்னுளன்
    என்னு ளேஉயிர்ப் பாயொஉறம் போந்துபுக்
         கென்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே.
                                                                                        திருநாவுக்கரசர்
 ஆரம்ப பள்ளிகளுக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு
நாக்கில் நெல்லாலும், படிக்கிற குழந்தைகளுக்கு பூவாலும் நாக்கில்
எழுதுகிறார்கள்.
இப்படி பெயர் பெற்ற ஊரில் இருந்து வந்தவன் நான் என்பதில் பெருமை
உண்டு.
அது மட்டுமா!!!!!
சிவன் கோயிலுக்கு மேற்கே சென்றால் வீரவல்லி வம்சத்தினர்
திருமலையில் இருந்து கொண்டு வந்த ஸ்ரீனிவாசன் விக்கிரஹத்தை
பிரதிஷ்டை செய்து ஒரு பெருமால் கோயில் கட்டி சமீபத்தில்
கும்பாபிஷேகம் விமரிசையாகச் செய்துள்ளார்கள்.
இந்த ஊரில் நானும் இருந்தேன், அதை இப்போது நினைத்தாலும் மனதில்
குதூகலம் வந்து விடும். எப்போது லீவு விடுவார்கள் என்று நாங்கள் காத்துக்கொண்டிருப்போம். நாங்கள் என்று சொன்னது, தம்பிகள், தங்கைகள், எங்கள் சித்தி மற்றும் எல்லோரும் தான்.
இன்னம்பூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு கிளம்பி விடுவோம்.
வீடுன்னா அது வீடய்யா? முன் பக்கத்திலிருந்து கொல்லைக்கட்டு வரை
ஒரு ஃப்ர்லாங்க் இருக்கும். வாசல் திண்ணை, ரேழி, கம்பிகள் கொண்ட
பெரிய முற்றம், சாமான் வைக்கும் அறை, சமையல் கட்டு, இரண்டாம் கட்டில் கிணறு, கிணற்றில் இருந்து சமைல்கட்டு தொட்டிக்கு நீர் செல்ல ஒரு அமைப்பு, பின்னால் நீண்ட தோட்டம், இப்படி இந்த வீட்டில் உள்ளவர்களைத் தேடவே பத்து நிமிஷம் ஆகும்ன்னா பாத்துக்குங்க, எவ்வளவு பெரிய வீடுன்னு?
வீட்டுலெ சமையல் பண்ணுவது ஒருவர் வேலை, பரிமாருவது மற்றோருவர், தரை துடைப்பது மற்றவர், இப்படி ஒவ்வொருவருக்கும் வேலை கொடுப்பதில் எங்க பாட்டிக்கு நிகர் யாரும் கிடையாது!
பகல் பூரா விளையாட்டு, மாலையில் வீட்டிலேயே நாடகம் போன்று ஏதாவது செய்து பொழுதைப் போக்குவோம். இதுக்கு நடுவிலெ பாட்டியின் வயலுக்குச் சென்று, கரும்புச் சாறு பிழியும் இடத்துக்குச் சென்று சொம்பு நிறைய் இஞ்சி கலந்த சார்றை  போட்டிபோட்டுக்கொண்டு குடிப்பதில் இருக்கும் ஆனந்தம், எழுத்தால் சொல்ல முடியாது. மாலையில் சிவன் கோயிலுக்கு போகும் வழியில் கோணமதகுன்னு ஒண்ணு வரும், அந்த தண்ணிரில் எல்லாரும் போட்டி போட்டுக்கொண்டு குதிப்பதில் உள்ள ஆணந்தம் எத்தனை கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காது!

இன்னம்பூர் பெருமாள் கோயில் தல வரலாறு

மார்கழி மாதத்தில் பெருமாள் கோயிலில் காலையில் சுடச்சுட பொஙகல்
கொடுப்பார்கள். அப்பு மாமா என்று பெயர் கொண்டவர், எங்களுக்குச்
சொந்தம்தான், எல்லோரையும் ஒரு பாத்திரம் கொண்டு வருணும்ன்னு
கண்டிப்பாக சொல்லிவிடுவார்.  ஆக எல்லார் கையிலும் ஒரு பாத்திரம்
இருக்கும்ன்னா பாத்துக்குங்க!
பஸ் நிக்கும் இடத்தில் ஒரு சாயபு கடை இருக்கும். அதுதான் அந்த ஊருக்கு ’வால் மார்ட்’. பெரிசுன்னு நினைக்காதிங்க், ஒரு சின்ன குடிசையில் கடை இருக்கும். பாட்டி எங்களை வேலை பாக்கச் சொல்லவேணுங்குறதுக்காக எதையாவது வாங்கி வரச் சொல்லுவாங்க.
கடைக்கார முஸ்லிம் எங்களைப் பார்த்து, “என்ன நீங்கள்ளாம் மண்டை
உடைஞ்ச அய்யர் வீட்டுப் பசங்களா?’ ன்னு கேள்வி கேட்டுட்டு சாமனை
கொடுப்பார்.

ஸ்ரீனிவாசப் பெருமாள்
பெருமாள் வீதிஉலா
ஸ்ரீனிவாசப் பெருமாள் மூலவருடன்
நாங்களும், ‘ஆமாம்’ ,ன்னு சொல்லிட்டு வாங்கி வருவோம், ஆனா இன்னிக்கு வரைக்கும் எங்கள் மூதாதையரில் யாருக்கு எப்போது மண்டை உடைந்ததுன்னு எங்கள் யாருக்குமே தெரியாத ’ஸஸ்பென்ஸ்’.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் எங்கள் ஊர் பெருமையை.
அப்படிப்பட்ட இன்னம்பூரில் ஸ்ரீனிவாசப்பெருமாளுக்கு ஒவ்வொரு
சிரவணத்தின் போதும் ஒவ்வொருவர் மண்டகப்படி நடக்கும். பெருமாள்

அக்கிரஹார வீதியில் உலா வருவார், வீட்டின் முன் நின்று அருள் பாலிப்பார்.
பின்னர் கோயிலின் முன் தீபம் ஏற்றுவார்கள், அர்ச்சனை முடிந்து புளியோதரை சுண்டல் பிரசாதம் வினியோகம் ஆகும்.
இந்த மாதச் ச்ரவணம் பாட்டியின் ஆணைப்படி, என்னோடது. போனேன்,
எல்லாம் நடக்கிறது எப்போதும் போல், ஆனால் அக்கிரஹாரத்தில் தான்
பேர் சொல்ல ஒரு பிராமணரைத் தவிர, வெறிச்சோடி, களையிழந்து
நிற்கிறது அக்கிரஹாரம். யாரைக் குறை கூறுவது, என்னையும் சேர்த்துத்தான்!!!
கேள்விபட்டேன், இன்ன்ம்பூரில் பல அடுக்கு ஃப்ளாட் கட்டப்போகிறார்களாம்! ஒரு நல்ல் ஊர் சிதைக்கபட இருக்கிறது!!!!!!!
எங்கிருக்கு இன்னம்பூர்?
கும்பகோணம்-ஸ்வாமிமலை செல்லும் பாதையில், புளியஞ்சேரியில் இறங்கி ரெண்டு கிலோமீட்டர் நடந்தால் இன்னம்பூர் வந்துவிடும்.
கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் 6ம் நம்பர் பஸ் திருபிறம்பியம் பஸ்ஸில்
இன்னம்பூர் என்று கேட்டு இறங்கிக் கொள்ளலாம்.
சிவனடியார்கள் எல்லாரும் பார்க்க வேண்டிய இடம், ஒரு முறை தான்
பார்த்து விட்டு வாருங்களேன்!!!!
இன்னம்பூர் பெருமாள் கோயில் கும்பாபிஷேக காட்சிகளின் வீடியோ லின்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
http://www.youtube.com/watch?v=iD_4
4If5aNc

வெள்ளி, ஜனவரி 11

கணக்கு விளையாட்டு

game show model



ஒரு சின்ன ஜோக்.
(a+b)n விரிவாக்கம் செய்ன்னு பையனிடம் கேட்டேன்
”இது என்ன சார் கஷ்டம், இப்ப பாருங்க சார்”,ன்னு எழுதிக் காட்டினானே
பார்க்கணும்.
(a      +     b)n போதுமா சார், இல்லை இப்படி வேணுமா சார்?
(a           +          b)n     போதுமா சார், இல்லை இப்படி வேணுமா சார்?
(a               +          b)n     போதுமா சார்?
எப்படி இருக்கு பையன் புத்திசாலித்தனம்!!!!!
இன்னொரு தடவை, ஆசிரியர் பையனிடம்,
”1+1=2,                 2+2=4 ”,    என்ன சரியா?
”சரி சார்”.
”இப்ப சொல்லு,  4+4  எத்தனை?”
”என்ன சார் நீங்க,   ஈசியான கேள்விக்கெல்லாம் நீங்க பதில் சொல்லிட்டு,
கஷ்டமான் கேள்விக்கு பதிலை எங்க்ளிடம் கேட்கிறீங்க” ன்னு சொன்னானே பார்க்கணும்!!!
இந்த கணக்கையாவது போடுவியான்னு பாருன்னு ஒரு படத்தை கொடுத்து இதுலெ ’x’ , எங்கிருக்குன்னு காமீ-ன்னு சொன்ன உடனே,

”இதோ இருக்கு பாருங்க சார்”
“என்ன கொடுமை சார்.”
இது மாதிரி கணக்கு பற்றிய ஜோக் நிறைய  சொல்லிக்கிட்டே போகலாம்.
ஏன்னா, நிறைய பேருக்கு கணக்குன்னா வேப்பெண்ணை சாப்பிடறது
மாதிரி கசக்கும்.
ஆனா இந்தச் சுட்டிக்கு கணக்கு அல்வா மாதிரி, ஈசியாக உள்ள போயிடும்.
ஆமாங்க, அவங்க  ஸ்ரேயான்னு பேரு. ஐந்தாவது வகுப்புதான் படிக்கிறாங்க.
அவங்க வகுப்புலே அவங்க ஆசிரியர்,
“கணக்குலே ஒரு கேம், அதாங்க  ஒரு விளையாட்டு தயார் பண்ணனும்.
அத கடையிலே போய் எல்லாம் வாங்கக்கூடாது. சொந்தமா மூளையைப்
பயன்படுத்தணும். நாலைந்து பேராவது விளையாடும்படி  இருக்க வேண்டும். சுறுசுறுப்பாகவும் இருக்கணும்”, போன்ற நிபந்தனையெல்லாம் சொல்லி
”யார் தயார்ன்னு”, கேட்டு இருக்காங்க. உடனே ஸ்ரேயா எழுந்து,
“நான் ரெடி பண்றேன், மிஸ்” சொல்லிட்டு அடுத்த ரெண்டு நாட்களுக்குள்ளே தயார் பண்ணிட்டாங்க்ன்னா பாருங்க.
அது சரிதான்யா, அந்த விளையாட்டு என்னன்னு கேட்கிறீங்க, தெரியுது,
அதத் தான் சொல்லப்போறேன்.
விளையாட்டு இதுதான்.
சதுரமான ஒரு போர்டு. அதுலெ சின்னச்சின்னதா
சதுரமான கட்டங்களை வரைந்து கொள்ளணும். முதல் கட்டம் start ன்னு
சொல்லக்கூடிய கட்டம். அடுத்தடுத்த கட்டங்கள்ள, சில இடங்களில்,
pick a card,  move two spaces, roll the dice, move 4 places left,
SIGN +, SIGN -,SIGN%,SIGN Multiplication, போன்றவற்றை
இடது புறத்தில் ஆரம்பித்து வலது புறமாகவும், மேலிருந்து கீழாகவும்
நம்ம வசதிக்கு ஏற்ப இடைவெளி விட்டு வரைந்து கொள்ளணும். (படம்-1)


படம்-1

முன்னதாக, நிறைய அட்டைகளில், பெருக்கல், கூட்டல், கழித்தல் மற்றும் வகுத்தல் போன்றவற்றை பயன்படுத்தி விடையைக் கண்டுபிடிக்கும் விதமாக தயார் செய்து கொள்ளவேண்டும். (படம்-2).

படம்-2,3

SIGN+ மாதிரி கட்டங்களுக்கு அடியில், பதில் சொல்லும்படியான
கஷ்டமான கேள்விகள் எழுதி, அதற்கு என நான்கு அட்டைகளில் பதில் தயார் செய்து கொள்ளவேண்டும். (படம்-3)
எப்படி விளையாடுவது?
சொக்கட்டான் காய்களை பயன்படுத்தி, யார் அதிகமான எண் பெறுகிறாறோ அவர் முதலில் ஆரம்பிக்க வேண்டும்.
STARTல் ஆரம்பித்து, இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமாகவும்,
மேலிருந்து கீழாகவும் செல்லும்படி, அவரவர்கள் பெறும் எண்களுக்கு
ஏற்ப, காய்களை நகர்த்த வேண்டும். எந்தக் கட்டத்தில் வருகிறார்களோ
அந்தக் கட்டத்தில் உள்ள நிபந்தனைக்கு பதில் சொல்ல வேண்டும்.
பதில் சரியாக இருந்தால் இரண்டு கட்டங்கள் வலது புறமாக நகர வேண்டும்.
தவறான பதில என்றால், அவர் தன்னுடைய இரண்டு முறைகளை
இழக்கிறார்.
 SIGN+ மாதிரி கட்டங்களுக்கு வரும்போது, அதன் அடியில் உள்ள
கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னால், அவருக்கு ஒரு சிறப்பு அட்டை கொடுக்க வேண்டும்.
தவறான பதில் என்றால்  தன்னுடைய இருமுறைகளை இழப்பார்.
யார் முதலில் நான்கு சிறப்பு அட்டைகளை முதலில் பெறுகிறார்களோ
அவர் வென்றவர் ஆகிறார்.
இந்த விளையாட்டில் என்ன சிறப்பு எனில்,
இந்த விளையாட்டை வயது ஏற்ப, படிப்புக்கு ஏற்ப, விளையாடும் நபர்களூக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பது தான்.
மிக சிறப்பான முறையில் விளையாட்டை அமைத்தத்ற்காக, ஸ்ரேயா ஆசிரியரிடம் பாராட்டு பெற்றுள்ளாள்.

Thumbnailநீங்களும் தான் தயார் செய்து ஒருமுறை விளையாடிப் பாருஙகளேன்,
அதற்குப் பிறகு எப்போது விடுமுறை வரும், விளையாடலாம் என்று
ஆவலோடு இருப்பீர்கள்.
இது பற்றிய வீடியோ லின்க் கொடுத்துள்ளேன், பாருங்கள்!!!!!


 http://www.youtube.com/watch?v=-kK06P3QyMQ&feature=share&list=UUqkakT_bOPdaTjy6mGY3ltw

ஞாயிறு, ஜனவரி 6

காதலாகிக் கசிந்து கண்ணீர் மலக

தாத்தா பேரன்





”தாத்தா, ஐ யம் கமிங் டு சீயங்கம், தாத்தா.”
முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு பேரன் என்னிடம் வந்து கூறினான்.
"என்னடி சொல்றான், இவன்”, பேரன் சொல்லும் மழலை எனக்கு புரியாததால் என் பெண்ணிடம் கேட்டேன். அவனுக்கு வயது மூணு தான். நான் என் பெண்ணுக்கு எல்லா அப்பாக்களும் அல்லது அம்மாக்களும் செய்யும் உதவிக்காக (ஆறு மாத கோர்ஸ், அதுக்குப் பிறகு இங்கு இருக்க
விடமாட்டார்கள்) அமெரிக்கா வந்த இடத்தில், கோர்ஸ் நடக்கும்
தருவாயில், என் பேரன் என்னிடம் பேசியது தான் மேலே சொன்ன
தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த வாக்கியம்.
“என்னப்பா, இது கூடவா உனக்கு புரியவில்லை, அவன் உன்னோட
ஸ்ரீரங்கத்துக்கு வரானாம்.”
“ஏண்டா, உன் அம்மா, அப்பா, அக்கா யாரும் வரமாட்டார்கள். நீ மட்டும்
வரயா?” இது நான்.
“நோ,நோ, ஐ யம் கமிங் டு சீயங்கம்”. அந்த ’நோ’ வை நீட்டிச் சொன்ன
அழகைப் பார்க்கவேண்டும்.
“அங்க வந்து என்னடா பண்ணபோறாய்?’
“சீயங்கம், ஒம்மாச்சி, காப்பாத்து”
“ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பெருமாள் கிட்ட காப்பாத்துன்னு கேட்கப் போறானாம்”

ஆனால் ஆறு மாதத்துக்கு முன்னால்.
விமான நிலையத்தில் வந்து இறங்கி வீட்டுக்கு வந்தவுடன்,
”தாத்தாகிட்ட போடா, இனிமேல் நாங்க ஆபிஸ் போன பிறகு தாத்தா தாண்டா உன்னோடு இருப்பா” என் பெண் தன் பையனிடம் கெஞ்சினாள்.
“நோ,நோ”, என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு கிட்ட வருவதற்கு அஞ்சினான் பேரன்.
“என்னப்பா இது, இப்படி பண்ணறான்”.
“விடுடி, பாத்துக்கலாம், ரெண்டு நாள் ஆனா எல்லாம் சரியாப் போயிடும்”
சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து, பெண்ணும் மாப்பிள்ளையும் வேலைக்குச் கிளம்பும் வரை பேரன் படுக்கையிலிருந்து எழுந்திருக்காமல் இருக்கவே,
“என்னப்பா பண்றது இப்ப?”
“அவனை எழுப்பி அவனிடம் ’நாங்கள் வேலைக்குப் போகப்போகிறோம்,
தாத்தாவுடன் இரு’ என்று சொல்லிவிட்டுப் போங்கள், நான் பார்த்துக்
கொள்கிறேன்,” என்று என் பெண்ணை சமாதானப் படுத்தினேன்.
 அவர்கள் பையனை சமாதானப் படுத்திவிட்டு ஆபீஸ் போன பிறகு,
”ஹேய், இங்க வாடா, பால் தரவா?” 

நான் பேரனிடம் பயம்
கலந்த மரியாதையுடன் கெஞ்சினேன்.
“யெஸ் தாத்தா, ஐ டிரின்க் மில்க், கிவ் மீ”, என்று நான்
எதிர்பார்க்காத வண்ணம் பாலை வாங்கி கிடுகிடுன்னு சாப்பிட்டான்.
“அப்பா, அம்மா, அக்காவெல்லாம் எங்கேன்னு தெரியுமாடா?”
“அம்மா ஆபீஸ், அப்பா ஆபீஸ், அக்கா ஃபூல்”. என்றானே பாக்கணும்.
ஸ்கூலுக்கு அக்கா போயிருக்காங்கிறதைத் தான், ”ஃபூல்” என்று
சொல்றானு சாயங்காலம் பெண் மொழி பெயர்த்த பிறகு தான் எனக்கு
அவன் பேச்சுப் புரிபட்டது.
பெண்ணும், மாப்பிள்ளையும் ஆபீஸிலிருந்து மணிக்கொருதரம் பேரன்
என்ன பண்றான்னு விஜாரித்துக் கொண்டே இருந்தார்கள்.
பத்து மணிக்கு சாப்பிட்டான். சிறிது நேரத்திலேயே, ‘ஆவ் கொண்டா
தாத்தா’, என்றான்.
’என்னடா சொல்றான் இவன்’, ஒன்னும் புரியாமல் நான் இருப்பதப் பார்த்து
அவனே நேரே படுக்கை அறைக்குப் போனான், போர்வையை எடுத்துக்
கொண்டு வந்தான், என் அருகில் வந்து, இது கூடத் தெரியவில்லையா
என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு ‘ஆவ் போத்தி விடு தாத்தா’ன்னு
சொல்லிவிட்டு படுத்துக் கொண்டான்.
மறுநாள், ‘தாத்தா, ஐ ஷூட் யூ”, என்று சொல்லிக்கொண்டு ஒரு துப்பாக்கியை
காண்பித்து, அதை பிளாஸ்டிக் குண்டுகளால் நிரப்பச் சொன்னான்.
நானும் எதோ விளையாட்டுத் தானே என்று நிரப்பிக் கொடுத்தேன்.
அத்தோடு விட்டானா? இல்லை! என்னைக் குறிவைத்து சுட வேண்டியது,
மீண்டும் நிரப்ப வேண்டியது. இதையே மீண்டும், மீண்டும் செய்ய வைத்து
எனக்கு எப்படா நிறுத்துவான் என்று ஆகிவிட்டது.
என்னடா இவன் பேரனுக்கு இதுகூட செய்யக் கூடாதா என்று நீங்கள்
கேட்பது என் காதில் விழுகிறது!
நீங்கள் நினைப்பது போல துப்பாக்கியில் குண்டை நிரப்புவது
அவ்வளவு சுலபம் அல்ல. ஏனெனில் அதை செய்வதற்குள் எனக்கு
போதும் போதென்றாகிவிட்டது.
ரெண்டு நாள் ஆகியிருக்கும். சாப்பாடு சாப்பிட்டு விட்டு படுக்கும் போது,
‘தாத்தா, யூ ஈட் தாத்தா, ஐ ஸ்லீப்’, என்றானே பாக்கணும்.
நாம எப்படிப் பழகறோமோ அதுக்குத் தகுந்தாற்போல் குழந்தைகள் தங்களை மாற்றிக் கொண்டு விடுகின்றன்ர் என்பது அப்போது தான் எனக்குப் புரிந்தது. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று பெரியவர்கள் சொன்னது சரிதான் போல.
அன்னைக்கு விடுமுறை என்பதால் எல்லோரும் வீட்டில் இருந்தார்கள்.
அப்போதும் போல நான் பேரனை பால் சாப்பிட கூப்பிட்டேன்.
‘நோ, ஐ யம் நாட் கமிங், ஐ வில் ஈட் அம்மா, யூ கோ அவுட்’, என்று சொல்லிக் கொண்டு அம்மாவிடம் போய் பால் சாப்பிடுவேன் என்று போய் விட்டான்.
நடுநடுவில் எனக்கு டைம் அவுட் கொடுத்துவிடுவான்.
அப்படின்னா என்ன்ங்கிரிங்களா?  என்னை ஒரு சேரில் உட்காத்தி
சிறிது நேரம் யாரும் என்னோடு பேசக் கூடாது.
அவன் அப்பா, அம்மாவிடம் செய்ய முடியாததை என்னிடம் செய்து
பார்த்து விடுவான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
இது மாதிரி பல சேட்டைகள்!!!
வீட்டில் அவர்கள் இருந்து விட்டால் என்னைப் பொருட்படுத்த மாட்டான்.
அன்று பூரா எனக்கு ஒரு மாதிரி இருக்கும். பெண்ணும்
‘வருத்தப் படாதே அப்பா, குழந்தைகள்னா அப்படித்தான் இருக்கும்,
நாளைக்கே உன்னிடம் வந்து விடுவான் பார்’ என்று என்னை
சமாதானப்படுத்துவாள்.
எனக்கும் இதுதான் யதார்த்தம், அதுக்குத் தகுந்தார்போல் நம்ம வாழ்க்கையை மாத்திக் கொள்ளணும் என்று புரிந்து கொள்வேன்.
கிளம்பும் நாளும் வந்தது.
“என்னடா, ஆர் யு கமிங் டு சீயங்கம், நாளைக்கு நான் ஊருக்குப் போகப்
போகிறேன்,’ என்றேன்.
“நோ தாத்தா, ஐ யம் நாட் கமிங், யூ கோ”. என்றானே பாக்கணும்.
எனக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.
பேரனுடன் இருந்த அந்த ஆறு மாதங்களை மனதில் அசைபோட்டுக்
கொண்டு கண்களில் நீர் மல்க, சென்னை நோக்கி, விமானத்தில் ஏறினேன்.
அடுத்த தடவை பார்க்கும் போது அவனும் பெரியவனாகி
விடுவான்,  நமக்கும் வயதாகிவிடும்,
மீண்டும் எப்போது இந்த அனுபவம் கிடைக்கும் என்று நினைப்பில்,
இதனை எல்லா தாத்தா பாட்டிகளுக்கும் அர்ப்பணம் செய்கிறேன்.

தாத்தா பேரனுடன்

திங்கள், டிசம்பர் 31

நாம் எங்கிருந்து வந்தோம்?




நாம் எங்கிருந்து வந்தோம்?
எங்கே போகப்போகிறொம்?
உலகம் 2012ல் அழியும்ன்னு சொன்னார்களே, ஏன் அழியவில்லை?
எப்போ அழியும்?
நம்மைப் போல வேறு கிரஹங்களில் எங்கும் மக்கள் இருக்கிறார்களா?
பறவை பறப்பதைப் பார்த்தல் நமக்கு என்ன தோணும்? ரைட் சகோதர்களுக்கு
என்ன தோணியது?
விமானங்கள் எப்படி பறக்கின்றன? என்ன தத்துவம்?
ராக்கெட் எப்படி ஏவுகிறார்கள்?
ஒண்ணுமில்லெ ஒரு சின்ன விஷயம், ராக்கெட்டில் எப்படி தங்கள் காலைக் கடன்களை கழிக்கிறார்கள்?
இப்படி சின்ன விஷயங்களில் இருந்து பெரிய விஷயங்கள் வரை விடை
தெரியணுன்னா, இங்கே போனால் தெரிந்து கொள்ளலாம்.
எங்கேன்னு கேட்பது காதுலெ விழறது.
கொஞ்சம் பொறுங்க!
அதுக்கு முன்னாலே மேலே சொன்னதுக்குக்கெல்லம் என்ன பதில்ன்னு
தெரிஞ்சுப்போம், என்ன நான் சொலறது சரிதானே?
உலகம் 2012ல் அழியும்ன்னு ஏக அமர்க்களம் பண்ணாங்கள்ள! இவங்களைப் போய் கேட்டா என்ன சொல்றாங்க
தெரியுமா?
நாம இருக்கிறது பால் வெளி மண்டலமாம். அத போட்டோ பிடித்து போட்டு இருக்காங்க. படம் பாருங்க!

அத ஒரு ஸ்கேல் நீளன்னு வச்சுப்போம். அதுலெ நாமெ இருக்கற சூரியக் குடும்பத்தை பேனாவால ஒரு புள்ளி
வைங்க. அந்தப் புள்ளிலே, சூரீயன், ஒன்பது கிரஹங்கள் நம்ம இருக்க்ற பூமி உள்பட, நட்சத்திரங்கள், எறிகற்கள்
எல்லாத்தையும் ஒரு புள்ளிலெ அடக்கிடலாமாம்!!! அப்ப்டின்னா அந்தப் புள்ளிலெ நீங்க எங்கே, நான் எங்கே?
அப்ப்டி இந்த மாதிரி பல பால்வெளி மண்டலங்கள் இருக்காம். இவை எல்லாம் உருவாக பல கோடி மில்லியன்
வருஷ்ங்கள் ஆச்சாம். அதே போல் அழியறதுக்கும் பல கோடி வருஷங்கள் ஆகுமாம். அதனாலெ கவலைப்
படாதிங்க, வாழ்க்கையை மகிழ்ச்சியா கொண்டாடுங்க. என்ன சரியா?
அதப் போல, நம்மைப் போல அல்லது நம்மை விட சிறந்தவங்க வேற கிரஹத்துல யாராவது இருக்காங்களான்னு
(அஙக எதாவது அழற தொடர் எதாவது ஒளி பரப்பறாங்களான்னு கேட்காதீங்க) ஆராய்ச்சி பண்ணறதுக்குன்னு ஒரு
விண்கலம் அனுப்பி இருக்காங்களாம். அதப் பத்தி விவரமா இந்த இடத்துலெ காண்பிச்சு இருக்காங்க.
தினம் நாமும் பறவைகள் பறப்பதை பார்க்கிறோம், என்னிகாவது யோசிச்சுறொப்போமா, அதெல்லாம் எப்படி
பறக்குதுன்னு?

ரைட் சகொதரர்கள் வீடு
அதெப்படி சார், ரைட் சகோதரர்களுக்கு மட்டும் நாமும் அப்படி பறக்கணும்ன்னு தோணிச்சு!
ரைட் சகோதரகள் விட்ட முதல் விமானம்

அதுதாங்க தனி மூளைங்கறது! அப்படி தோனினது நல்லதுக்குத் தான். ஆமாங்க, 
அவங்க கஷ்டப்பட்டதாலதான்
நம்ம ஜாலியா விமானத்துலெ பறக்க முடியுது!
அவ்ஙக எவ்வளவு கஷ்டப் பட்டாங்கங்கறதை பார்த்தா நாமல்லாம் ஒண்ணுமே பண்ணலீங்க.
அதப் போய் பார்க்கணும்!!!!

விமானம் பறக்கணும்ன்னா என்னன்ன விஷயம் முக்கியம்ன்னு நன்னா விளக்கி இருக்காங்க. விமானி உக்காந்து ஒட்டற
இடத்தை நாம பாக்கறமாதிரியும், பல பெரிய விமானங்களையும் அப்படியே பறக்கர மாதிரியே தொங்க விட்டு

இருக்காங்க. பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான இடம் இதுங்க.
விமானத்தைப் போலவே ராக்கெட் எப்படி விடறதுன்னும் விளக்கமா போட்டோக்களோட வச்சு இருக்காங்க.

  sky labன்னு விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உள்ளே எப்படி இருக்கும்ன்னு பாருங்கன்னு காட்டறாங்க.
முக்கியமான விஷயம் என்னன்னா, விண்வெளில நாம தட்டு, இலையெல்லாம் போட்டுண்டு சாப்பிடற மாதிரி
முடியாதாம். அதெ விட மலஜலம் எப்படிக் கழிப்பாங்கன்னு, ஒண்ணு விடாம யோசிச்சு வச்சுருக்காங்க பாருங்க,

 
விண்வெளியில் எப்படி மலஜலம்  கழிப்பார்கள்

நம்ம வடிவேலு சொல்லற மாத்ரி ரூம் போட்டு யோசிச்சு இருக்காங்க சார்!!
எல்லாத்தையும் விட பூமியை வெவ்வேறு துணைக்கோள்கள் எப்படி போட்டோ எடுத்து நிமிஷத்துக்கு நிமிஷம்
நமக்கு அனுப்பி நாம எப்படி அதுக்குத் தகுந்த மாதிரி நாம வாழ்க்கையை மாத்திக்கணும் என்பதையெல்லாம்
சொல்லாம சொலறாங்க பாருங்க அதையெல்லாம் பாத்துக்கிட்டே இருக்கலாம்.

இன்னும் நான் சொல்லாம விட்டது நிறையங்க!!!
இன்னைக்கெல்லாம் பாத்துகிட்டே இருக்கலாம். ஒருநாள் போறாதுங்க!!!
அது சரிங்க, இதெல்லாம் இங்கேன்னு கேக்கிறிங்களா?
வாஷிங்ட்ன் ஸ்மித்சோனியன் விண்வெளி ஆராய்ச்சி பற்றிய அருங்காட்சியகம் வாஷிங்டன் டீ.சி. அப்படிங்கறது
தான் அவங்களொட முகவரி. ஒரு தடவை போய் பார்த்துட்டு வாங்க.
(smithsonian national air and space museum, washinton D.C.)
அவ்ஙக்ளொட இணைய தள முகவரி http://www.si.edu/


புதன், டிசம்பர் 26

வெங்காயத்தை வச்சு என்ன பண்றது?

சூப்பும் கண்மனிகளாக வெங்காயம்

கண்ணில் நீர் வரவழைக்கும் பொருள்.
கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வைக்கும் மணமகளிடம்,
“என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன், என் பையன் கண்ணில்
நீ வராமல் பார்த்துக் கொள்வது உன் கையில் தான் இருக்கு”,
பையனின் தாயர்ர் சொல்கிறார்.
“கவலைப் படாதீங்க, அவர் வெங்காயம் உறிக்கும் போது மட்டும் கண்ணில் நீர் வருவதை என்னால் தடுக்க என்னால் முடியாது, அம்மா” என்கிறாள் மணமகள்.
இது எல்லா வீடுகளிளும் நடக்கும் அன்றாட நிகழ்ச்சி.
ஆமாம், வெங்காயத்தை உறிக்கும் போது கண்ணில் நீர் வருவது எதனால்?
வெங்காயத்தை உறிக்கும் போது அதிலிருந்து ஒரு விதமான என்சைம்
வெளிவருகிறது. அவை சல்ஃபனிக் அசிடை உருவாக்கி, வாயுவாக மாறி,
கண்ணின் நீர் திரவத்தை உருவாக்குகிறது. அது எரிச்சலை உண்டாக்குகிறது.
எப்படி எரிச்சல் இல்லாமல் செய்வதுங்கிறிங்களா?
முடியும்.
ஓடற தண்ணீரில் வெங்காயத்தை வைத்துக்கொண்டு உறிச்சிங்கன்னா,
இந்தப் பிரச்சனையை சமாளிக்கலாம். இல்லையா, வெங்காய வேரை கிள்ளாமல் உறிக்கணும். இல்லையா, ரெஃப்ரிஜிரேட்டரில் வெங்காயத்தை சிறிது நேரம் வைத்துவிட்டு பிறகு உறிங்க.
உறிக்கற போது ஃபேனை ஒடவிட்டு, அந்த வாயு கண்ணிலெ படாம
செய்யுங்க, அல்லது கண்ணாடி போட்டுண்டு உறிங்க.

ஆண்களுக்கு ஒரு நல்ல செய்தி!!!
நியூசிலாந்து விஞ்ஞானிகள் நமக்காக ‘கண்ணிலெ நீர் வராத” வெங்காயத்தை உருவாக்கி இருக்காங்களாம்.
ரொம்ப முக்கியமான விஷ்யம் என்னனா, வெங்காய உற்பத்திலெ சீனாவுக்கு
அடுத்து நாம உலகத்திலெ ரெண்டாவது இடத்துலெ இருக்கோம்!!!
அது சரி, வெங்காயத்தை வச்சுட்டு நாம என்ன பண்ணறது?
வெங்காயம் இன்னைக்கு சமையலுக்குப் பயன்படுத்தலேன்னா, பல வீடுகளில் சண்டை வருது தெரியுமா?
வெங்காயத்தை தக்காளியுடன் வதக்கி சட்னி பண்ணலாம். வெங்காயத்தை மெல்லிசா சீவி கடலைமாவுடன் சேர்த்து எண்ணையில் பொறித்து பஜ்ஜி பண்ணலாம்.
எத்தனை ரோடு கடையில் வெங்காய பக்கோடாவுக்கு வரிசை நிக்குது தெரியுமா?
என்ன வேணாலும் பண்ணலாம்!!
ஐயா, வெங்காயம் எங்கள் உயிருடன் கலந்த உறவு அய்யா!!!
அதனால் தான் வெங்காயத்தை அலங்கரித்து பல வடிவங்கள்ள ஒரு சிலர்  பண்ணி இருக்கிறார்கள். இதுக்காக போட்டி எல்லாம் நடக்குதுங்க!
பாருங்களேன், எப்படியெல்லாம் வெங்காயத்தை அலங்காரம் செய்ய முடியும்ன்னு காண்பித்து இருக்கிறார்கள்.



வெங்காய கடிகார்ம்

அணிலாக

சிலந்திகளாக

பெண்கள் பரேட்

செஃப்

ஊர்வனவாக

ராஜா ராணிகள்

எலிகளாக

புதன், நவம்பர் 7

எலக்‌க்ஷன் நடததராங்களாம்,எலக்க்ஷன்!!!!!



”தலையைச் சுற்றுதப்பா, இவங்களோட தொல்லை, எங்கப்பா நம்ம செசகரட்டரி?” 
வெள்ளை மாளிகையின் அறையில் இருந்து வெளியே வந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டே
ஒபாமா தன்னுடைய செகரட்டரியை சத்தம் போட்டு கூப்பிட்டார்.
அவருடைய மனைவி, இவருடைய சத்தத்தை பார்த்து,
“எதுக்காக இந்த சத்தம் போடூறீங்க, இதுவரை இப்படி உங்களைப் பார்த்ததில்லையே?”
“பின்ன என்ன, நம்ம ஊர்ல எலக்ஷ்ன் நடக்குது, அத பாக்க வாங்கன்னு போனவாரம் இந்தியாவில் உள்ள  முக்கியமான அரசியல் தலைவர்களை கூப்பிட்டிருந்தேன்.”
“அது சரிதானே, அதுக்கு ஏன் இவ்வளவு சத்தம்?”.
“இந்தியப் பிரதமர் அவங்க மாநிலத் தலைவர்களிடம் சொல்லி இருப்பார் போல, அவங்க உடனே தங்கள் முக்கியமான தொண்டர்களை அனுப்பி இருந்தாங்க, சரி இருக்கட்டும்ன்னு பார்த்தா, நம்மள ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்க போலத் தோணித்து, அதனாலெ தான் நம்ம செகரட்டரியைக் கூப்பிட்டேன், உடனே அவங்களை இந்தியாவுக்கு பேக் பண்ணி அனுப்பச் சொல்லலாம்ன்னு. அவஙகளோட இருந்த பழக்க தோஷம், கத்தித் தொலைச்சுட்டேன், சாரி   டியர், என்னை மன்னிச்சுடு”.
’உலகத்திலேயே பெரிய வல்லரசு நாடுன்னு உங்களச் சொல்லற போது, உஙகளையே ஒரு சிலர் வழி பண்ணிட்டாங்கன்னு சொல்றீங்க, அப்படி என்ன தாங்க நடந்தது, எனக்கும் சொல்லுங்களேன்.”
அழ மாட்டாக் குறையா ஒபாமா மனைவி.
”போன வாரத்தில் இருந்து நடந்தது இதுதான்”, பிளாஷ் பேக்கை விவரிக்கிறார் ஒபாமா.

 ஒபாமாவின் செகரட்டரி, “மிஸ்டர் ப்ரசிடெண்ட், இந்தியாவில் இருந்து நாம கூப்பிட்டு இருந்த
பத்து பேர் வந்து இருக்கிறார்கள், அவர்களை என்ன செய்வது?”
’ஐந்து பேரை நம்மோட போட்டியிடும் மிஸ்டர் ரோம்னியிடம் அனுப்பிவிடுங்கள், அவரிடம் முன்னதாகவே
சொல்லி இருந்தேன். மீதி ஐந்து பேரை நாம் எஙகெல்லாம் பிரசாரத்துக்குப் போவொமோ அங்கெல்லாம் அவரகளையும் அழைத்துச் செல்வோம்.” ஒபாமா தன் செகரட்டரியிடம் சொன்னார்.
“யெஸ் பிரசிடெண்ட்”.
மறுநாள் காலையில்,
“டேய் மாணிக்கம், எலக்‌ஷ்ன் இங்கெல்லாம் ஒருவாரம் நடக்குமாம், நமக்கு நல்ல வேட்டைதான்”.
“என்னடா கண்ணாயிரம் சொல்றே?”
“ஆமாண்டா, நம்மூர்ல செய்வொமே, ஒரு ஊர்லே லாரியிலே நம்மாட்க் களை ஏற்றி, கள்ள வோட்டு போடச் சொல்லிட்டு அவங்களை மற்றொறு ஊருக்குக் கொண்டு போய் ஒட்டுப் போடவைப்போமே, அது போல இஙக
ஒருவாரம் எலக்‌ஷன் நடப்பது ந்ல்லது தான். நம்ம தலைவர் ஒபாமாவிடம் சொல்லி ஆடகளை ரெடி பண்ணச் சொல்லிடுவோம். என்ன நான் சொல்றது சரிதானே மாணிக்கம்?”
”ஆங், சரியாச் சொன்ன கண்ணாயிரம். தலைவர் வர்ராரு, சொல்லிருவோம்”
"என்ன மிஸ்டர் மாணிக்கம், என்ன வேணும்?”
“கள்ள வோட்டு போடறதைப் பற்றி உங்ககிட்ட பேசலாம்ன்னு.......”
“அப்ப்டீன்னா?”
“இங்க ஒருவாரம் எலக்‌ஷன் நடக்குதில்ல, அத நமக்குச் சாதகமா மாத்திக்க கள்ள வோட்டு போட ஏற்பாடு செய்யலாம்ன்னு உங்க கிட்ட பேசலாம்ன்னு....”,விளக்கினான் மாணிக்கம்.
“சாரி, அந்தமாதிரி எல்லாம் இங்க செய்யமுடியாது”.
“பின்ன எதுக்கு ஒரு வாரம் எலக்‌ஷன் நடக்குது”.
“சில இடங்கள்ள குளிர் அதிகமாக இருக்கும்,வேலைக்குப் போகிறவர்கள் அவர்கள் வசதிக்கேற்ப எப்ப வேணும்ன்னாலும் வோட்டு போடட்டும்ன்னு தான் அப்படி ஒரு வசதி. அத இதுக்குப் 
போய் பயன்படுத்தறது சனநாயகத்தை குழி தோண்டறமாதிரி இல்லயா மாணிக்கம்.’
“அட போங்க தலைவா. இப்படி நீங்க இருந்தீங்கன்னா எபபடி ஜெயிப்பீங்க? இதெல்லாம் எங்க ஊர்ல்ல சகஜம் தலைவா”
“நாளைக்கு நியுயார்க்குல நானும் எதிர்கட்சித் தலைவர் ரோம்னியும் ஒரே மேடையிலெ பேசப் போறோம், அதுக்கு நீங்கெல்லாம் வரணும், உங்களோட வந்து இப்ப் ரோம்னியோட இருக்கிறவங்களும்
வராங்க. எப்படி நடக்குதுன்னு பாருங்க”, ஒபாமா மாணிக்கத்திடம்.
“சோடா பாட்டில், அழுகின முட்டை இதெல்லாம் தயார் பண்ண கொஞ்சம் பணம் தந்தா நல்லது”, மாணிக்கம்.
“இதெல்லாம் எதுக்கு”, ஒபாமா.
”எதிர்கட்சித் தலைவர் மேல வீசத்தான், அப்பத்தான் நாம  பலமானவங்கன்னு ராம்னியோ,ரோம்னியொ, யாரொ பேரு சொன்னிங்களெ, அவ்ங்களுக்குத் தெரியப் படுத்தத்தான்”.
“நோ,நோ, அப்படி செய்து விடாதீர்கள். ரெண்டு பேரும் நேருக்கு நேர் பேசி எங்க கொள்கையை மக்களுக்குத் தெரியப்படுத்துவோம். அத வச்சு எங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள். யாரு நல்லா பேசராங்க, அவ்ங்க கொள்கை என்னன்னு மக்களுக்கு தெரியும்.”
“என்ன அரசியலோ ஒண்ணுமே புரியலை இங்க. எங்க ஊர்லே இப்படியெல்லாம் நேருக்கு நேர் பேசவே மாட்டாங்க, கொள்கை, பாலிசி அப்படியெல்லாம் எங்ககிட்ட கிடையாது.
ஒரே கொள்கை எப்படி சுருட்டுறதுங்கறது , எப்படி மற்றவனைத் திட்டறது மட்டும் தான்.”
“குட் நைட், நாளை காலை பார்ப்போம்”, சொல்லிவிட்டு ஒபாமா படுக்கச் சென்றார்.

மறுநாள் மாலை. 
நியுயார்க்கில் தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்கள் எல்லாரும் தயாராக இருக்க,
மேடையில் ஒபாமாவும், ரோம்னியும் கைகுலுக்கிக் கொள்கிறார்கள்.
மெதுவாக, சத்தம் யாருக்கும் கேட்காமல்,
”ஹலோ ரோம்னி, எப்படி இருக்கீங்க?” ஒபாமா.
“ஹலோ மிஸ்டர் பிரசிடண்ட், அத ஏன் கேட்கிறிங்க, பெரும் தொல்லைங்க”, ரோம்னி ஒபாமாவிடம்.
“என்ன மிஸ்டர் ரோம்னி, என்ன பிரச்சினை?’.
”எல்லாம் நீங்க அனுப்பின ஆட்களால் தான்’, ரோம்னி.
“அப்படி என்ன பண்ணாங்க அவர்கள்”.
“இந்த மாதிரி நாம ரெண்டு பேரும் பேசப் போறோம், நீங்க வாங்க்ன்னு கூப்பிட்டா,”
“கூப்பிட்டா, என்னாச்சு,”
“பத்து டிரக்கு நிறைய ஆட்கள் கூப்பிட்டுகொண்டு வரணும், பணம் கொடுங்கன்னு ஒரே தொந்தரவாப் போச்சு. அது மாதிரியெல்லாம் கிடையாது. நிறைய பேரெல்லாம் வரமாட்டாங்க,
மொத்தமே 200 பேரதான் இருப்பாங்க, எப்படி நடக்குதுன்னு பாருங்க, உங்க ஊர்லெயும் இதெ மாதிரி செஞ்சா அரசியல் நன்னா இருக்கும் அப்படின்னு சொல்லி கூட்டிண்டு வரதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆச்சு”.
“இதுமட்டுமா, பணம் கொடுங்க, குடம், குத்துவிளக்கு, ஓட்டுப் போட பணம் கொடுக்கணும் அப்படி இப்படின்னு ஒரே தொந்தரவாப் போச்சு. நம்ம ரெண்டு பேர் பெயரையும் கெடுத்து விடுவாங்கன்னு நினைக்கிறேன், முதல்ல இவஙகளை பேக் பண்ணி இந்தியாவுக்கு
அனுப்ப வழியைப் பாருங்க, அப்புறமா எலக்‌ஷ்னை வச்சுப்போம்”.


போன வாரம் பூரா நடந்ததை பிளாஷ் பேக்காக தன் மனைவியிடம் புலம்பி ஒரு பெருமூச்சு விட்டார் ஒபாமா.
”சரியாத்தான் சொன்னார், ரோம்னி, முதல்ல இவங்களை பேக் பண்ணி அனுப்புற வழியைப் பாருங்க,’ 
ஒபாமா மனைவி.
வெள்ளை மாளிகையின் ஒரு அறையில், மாணிக்கம் தன் நண்பர்களிடம்,
“நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது, என்னய்யா எலக்‌ஷன் நடத்தறாங்க, ஒரு கல் வீச்சு கிடையாது, ஒரு பஸ்ஸை கொளுத்த விடமாட்டேங்கறாங்க, வோட்டுக்குப் பணம் கொடுக்க மாட்டேங்கறாங்க, கொடிக் கம்பம், தோரணம் கிடையாது, நாம எப்ப சம்பாதிப்பது,ஹூஹும், நமக்கு சரிப்பட்டு வராது, நாம் கிளம்ப வேண்டியது தான், பேக் பண்ணுங்கய்யா, என்னய்யா எலக்‌ஷன் நடத்தறாங்க”
இதெல்லாம் கேட்டுக் கொண்டே வந்த ஒபாமா, கோபமாக,
“செகரட்டரி, இவஙகளொட விசாவை எல்லாம் கேன்சல் செய்யுங்க் முதலில், இவஙகளை பிளேன்லெ ஏத்தி அவங்க நாட்டுக்கு அனுப்புங்க அப்பத்தான் நம்ம நாடு பொழைக்கும்”.

ஞாயிறு, நவம்பர் 4

இலையுதிர்காலம்!!!!!



tree with orange colour



அமெரிக்காவில் இலையுதிர்காலமாம் இப்போது!!!
இலையை உதிப்பதற்கு மனசில்லை போலிருக்கு!!!
இருக்கட்டும் மக்களுக்கு உணர்த்துங்கள்!!
எங்களைப் போல நீங்களும் இருங்கள்!!
உதிரும் போது கூட கலர்ஃபுல்லாக!!!!