ஞாயிறு, மார்ச் 10

இன்னம்பூர் நினைவுகள்

பச்சைப் பசேல் என்று, பச்சைக் கம்பளம் விரித்தாற்ப் போல்
எஙகு பார்த்தாலும் வயல் வெளிகள். கீச்கீச் என்று குருவிகள் தங்கள்
கூட்டிலிருந்து வெளியே வரும் குரலோசை.
சுற்றிலும் தென்னை மரங்கள் சூழ்ந்த சோலை. எப்போது இந்த ஊரைப்
பார்ப்போம் என்று இளஞ்சூரியன் தன் பொன்னிற கிரணங்களை இந்த
ஊரை நோக்கி பாய்ச்ச்த் தயாராக இருக்கிறான். அந்தப் பொன்னிற காலை வேளை. அக்கிரஹாரத்து இளஞ்சிட்டுக்கள் தங்கள் வீட்டு வாசலைத் தெளித்து மாக்கோலம் போட்டுக் கொண்டு இருக்கும் சம்யம்.
இந்த மாதிரி இந்தக் காலத்திலும் ஒரு ஊர் இருக்கா என்று கேட்காதீர்கள்,
சாதாரண ஊர் அல்ல அது, 

அறுபத்து நாயன்மார்களில் ஒருவரால் பாடல் பெற்ற ஸ்தலம். அதுமட்டுமா முகமதிய படையெடுப்பின் போது  அரங்கனே திருவரங்கத்தில் இருந்து பல இடங்களுக்கும் சென்று
திருமலையில் தஞ்சம் அடந்த நேரத்தில், அங்கிருந்து கொண்டு
கொண்டு வரப்பட்ட ஸ்ரீனிவாசன் விக்கிரஹத்தை வைத்து கோயில் எழுப்பபட்ட ஊர்தான் அது.
இன்னம்பூர் தான் அந்த ஊர். 



இன்னம்பூர் சிவாலய வரலாறு

சிவாலய குருக்கள்

எழுத்தரிநாதர்

அழுத்தரிநாதர் சன்னிதி

தூரத்தில் எழுத்தரிநாதர்



அம்ம்பிகை சுகந்த குந்தாளாம்பாள்

எழுத்தரிநாதர்





 இது எங்க ஊர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குத் தனி பெருமை உண்டு. கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக் களம் எங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள திருபுறம்பியம் ஆகும்.
துர்வாச முனிவர் சாபத்தால் காட்டு யானையாகி அல்லலுற்றது ஐராவதம். ஷண்பக வனம் ஆகிய இன்னம்பூரில் உள்ள தாந்தோன்றி ஈசனை வழிபட்டு சாபம் நீங்கி ஒரு குளத்தை வெட்டியது. அந்த ஐராவதக் குளம் இந்தக் கோயிலுக்கு முன்னால் இப்பவும் உள்ளது.
சூரியன் ஆற்றல் பெறவேண்டி இத்தலத்து ஈசனை வழிபட்டுபேறு
பெற்றான் என்றும் கூறுவர். அவனுக்கு “இனன்” என்றும் பெயர் உண்டு.
இறைவனை சூரியன் நம்பி வழிபட்டதால், “இனன் நம்பு ஊர்” என்று
பெயர் ஏற்பட்டு “இன்னம்பூர்” என்று மாறிவிட்டது என்றும் சொல்வார்கள்.
அதற்குச் சான்றாக ஒவ்வொறு ஆண்டும் ஆவணி மாதம் 31ம் தேதியும்,
புரட்டாசி மாதம் 1,2 ஆகிய தேதிகளில் மற்றும் பங்குனி 13,14,15
ஆகிய தேதிகளில்சூரிய கிரணங்கள் இந்த பெருமானின் திருவடிகளில் படும்.
அதுமட்டுமா!!!!
அகத்திய முனிவர் இத்தலத்தை அடைந்த போது, இறைவன் அவருக்கு
தமிழிலக்கணம் உபதேசித்து அருளினார். அதலால் தான் இறைவனுக்கு
”எழுத்தறிநாதர்” என்ற பெயருடன் இத்தலத்தில் அருள் பாலிக்கிறார்.
ஒரு சமயம் சுதன்மன் என்ற அந்தணன் இப்பெருமானை பூசித்து,
நிர்வாகத்தையும் பார்த்து வந்தான்.அப்போது ஆண்டு வந்த மன்னன் தன்
நாட்டிலுள்ள கோயில்களின் வரவு செலவு கணக்குகளைக் கொண்டு வருமாறு எல்லா நிர்வாகிகளுக்கும் ஆணயிட்டான். சுதன்மனும் தன் பொறுப்பிலுள்ள இன்னம்பூர் திருகோயிலின் கணக்கினை மன்னன் முன் காட்டினான்.
மன்னனுக்கு சந்தேகம் வர மறுநாள் மீண்டும் வருமாறு பணீத்தான்.
நேர்மையும் சீலமும் உள்ள சுதன்மன் தான் தோன்றி ஈசனை போற்றிப்
பணிந்தான். இறைவனும் அன்பன் இடுக்கண் களைய தானே சுதன்மன்
வடிவிலே சென்று கணக்கினை வழுவின்றி எடுத்துரைத்தான்.மறுநாள் சுதன்மன் கனவில் தோன்றி நிகழ்ந்ததை எடுத்துரைத்தான். சுதன்மனும் இறைவன் திருவருளை வியந்து போற்றினார்.
அப்பர் பெருமானும் இதனை,
               “எழுதுங்கீழ்கணக்கு இன்னம்பர் ஈசனே”
என்று போற்றி பாடினார்.
   ”சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய்
        முடி பத்துடையான்றனைக் கனிய வூன்றிய காரணம்
     என்கொலோ இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே.”
-திருநாவுக்கரசர், தேவாரப்பதிகம்
    இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
         இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
    திருகோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
         தாழ்ந்து இறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே!
    என்னிலாரும் எனக்கினி யாரில்லை
         என்னு லும்மினி யானொரு வன்னுளன்
    என்னு ளேஉயிர்ப் பாயொஉறம் போந்துபுக்
         கென்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே.
                                                                                        திருநாவுக்கரசர்
 ஆரம்ப பள்ளிகளுக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு
நாக்கில் நெல்லாலும், படிக்கிற குழந்தைகளுக்கு பூவாலும் நாக்கில்
எழுதுகிறார்கள்.
இப்படி பெயர் பெற்ற ஊரில் இருந்து வந்தவன் நான் என்பதில் பெருமை
உண்டு.
அது மட்டுமா!!!!!
சிவன் கோயிலுக்கு மேற்கே சென்றால் வீரவல்லி வம்சத்தினர்
திருமலையில் இருந்து கொண்டு வந்த ஸ்ரீனிவாசன் விக்கிரஹத்தை
பிரதிஷ்டை செய்து ஒரு பெருமால் கோயில் கட்டி சமீபத்தில்
கும்பாபிஷேகம் விமரிசையாகச் செய்துள்ளார்கள்.
இந்த ஊரில் நானும் இருந்தேன், அதை இப்போது நினைத்தாலும் மனதில்
குதூகலம் வந்து விடும். எப்போது லீவு விடுவார்கள் என்று நாங்கள் காத்துக்கொண்டிருப்போம். நாங்கள் என்று சொன்னது, தம்பிகள், தங்கைகள், எங்கள் சித்தி மற்றும் எல்லோரும் தான்.
இன்னம்பூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு கிளம்பி விடுவோம்.
வீடுன்னா அது வீடய்யா? முன் பக்கத்திலிருந்து கொல்லைக்கட்டு வரை
ஒரு ஃப்ர்லாங்க் இருக்கும். வாசல் திண்ணை, ரேழி, கம்பிகள் கொண்ட
பெரிய முற்றம், சாமான் வைக்கும் அறை, சமையல் கட்டு, இரண்டாம் கட்டில் கிணறு, கிணற்றில் இருந்து சமைல்கட்டு தொட்டிக்கு நீர் செல்ல ஒரு அமைப்பு, பின்னால் நீண்ட தோட்டம், இப்படி இந்த வீட்டில் உள்ளவர்களைத் தேடவே பத்து நிமிஷம் ஆகும்ன்னா பாத்துக்குங்க, எவ்வளவு பெரிய வீடுன்னு?
வீட்டுலெ சமையல் பண்ணுவது ஒருவர் வேலை, பரிமாருவது மற்றோருவர், தரை துடைப்பது மற்றவர், இப்படி ஒவ்வொருவருக்கும் வேலை கொடுப்பதில் எங்க பாட்டிக்கு நிகர் யாரும் கிடையாது!
பகல் பூரா விளையாட்டு, மாலையில் வீட்டிலேயே நாடகம் போன்று ஏதாவது செய்து பொழுதைப் போக்குவோம். இதுக்கு நடுவிலெ பாட்டியின் வயலுக்குச் சென்று, கரும்புச் சாறு பிழியும் இடத்துக்குச் சென்று சொம்பு நிறைய் இஞ்சி கலந்த சார்றை  போட்டிபோட்டுக்கொண்டு குடிப்பதில் இருக்கும் ஆனந்தம், எழுத்தால் சொல்ல முடியாது. மாலையில் சிவன் கோயிலுக்கு போகும் வழியில் கோணமதகுன்னு ஒண்ணு வரும், அந்த தண்ணிரில் எல்லாரும் போட்டி போட்டுக்கொண்டு குதிப்பதில் உள்ள ஆணந்தம் எத்தனை கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காது!

இன்னம்பூர் பெருமாள் கோயில் தல வரலாறு

மார்கழி மாதத்தில் பெருமாள் கோயிலில் காலையில் சுடச்சுட பொஙகல்
கொடுப்பார்கள். அப்பு மாமா என்று பெயர் கொண்டவர், எங்களுக்குச்
சொந்தம்தான், எல்லோரையும் ஒரு பாத்திரம் கொண்டு வருணும்ன்னு
கண்டிப்பாக சொல்லிவிடுவார்.  ஆக எல்லார் கையிலும் ஒரு பாத்திரம்
இருக்கும்ன்னா பாத்துக்குங்க!
பஸ் நிக்கும் இடத்தில் ஒரு சாயபு கடை இருக்கும். அதுதான் அந்த ஊருக்கு ’வால் மார்ட்’. பெரிசுன்னு நினைக்காதிங்க், ஒரு சின்ன குடிசையில் கடை இருக்கும். பாட்டி எங்களை வேலை பாக்கச் சொல்லவேணுங்குறதுக்காக எதையாவது வாங்கி வரச் சொல்லுவாங்க.
கடைக்கார முஸ்லிம் எங்களைப் பார்த்து, “என்ன நீங்கள்ளாம் மண்டை
உடைஞ்ச அய்யர் வீட்டுப் பசங்களா?’ ன்னு கேள்வி கேட்டுட்டு சாமனை
கொடுப்பார்.

ஸ்ரீனிவாசப் பெருமாள்
பெருமாள் வீதிஉலா
ஸ்ரீனிவாசப் பெருமாள் மூலவருடன்
நாங்களும், ‘ஆமாம்’ ,ன்னு சொல்லிட்டு வாங்கி வருவோம், ஆனா இன்னிக்கு வரைக்கும் எங்கள் மூதாதையரில் யாருக்கு எப்போது மண்டை உடைந்ததுன்னு எங்கள் யாருக்குமே தெரியாத ’ஸஸ்பென்ஸ்’.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் எங்கள் ஊர் பெருமையை.
அப்படிப்பட்ட இன்னம்பூரில் ஸ்ரீனிவாசப்பெருமாளுக்கு ஒவ்வொரு
சிரவணத்தின் போதும் ஒவ்வொருவர் மண்டகப்படி நடக்கும். பெருமாள்

அக்கிரஹார வீதியில் உலா வருவார், வீட்டின் முன் நின்று அருள் பாலிப்பார்.
பின்னர் கோயிலின் முன் தீபம் ஏற்றுவார்கள், அர்ச்சனை முடிந்து புளியோதரை சுண்டல் பிரசாதம் வினியோகம் ஆகும்.
இந்த மாதச் ச்ரவணம் பாட்டியின் ஆணைப்படி, என்னோடது. போனேன்,
எல்லாம் நடக்கிறது எப்போதும் போல், ஆனால் அக்கிரஹாரத்தில் தான்
பேர் சொல்ல ஒரு பிராமணரைத் தவிர, வெறிச்சோடி, களையிழந்து
நிற்கிறது அக்கிரஹாரம். யாரைக் குறை கூறுவது, என்னையும் சேர்த்துத்தான்!!!
கேள்விபட்டேன், இன்ன்ம்பூரில் பல அடுக்கு ஃப்ளாட் கட்டப்போகிறார்களாம்! ஒரு நல்ல் ஊர் சிதைக்கபட இருக்கிறது!!!!!!!
எங்கிருக்கு இன்னம்பூர்?
கும்பகோணம்-ஸ்வாமிமலை செல்லும் பாதையில், புளியஞ்சேரியில் இறங்கி ரெண்டு கிலோமீட்டர் நடந்தால் இன்னம்பூர் வந்துவிடும்.
கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் 6ம் நம்பர் பஸ் திருபிறம்பியம் பஸ்ஸில்
இன்னம்பூர் என்று கேட்டு இறங்கிக் கொள்ளலாம்.
சிவனடியார்கள் எல்லாரும் பார்க்க வேண்டிய இடம், ஒரு முறை தான்
பார்த்து விட்டு வாருங்களேன்!!!!
இன்னம்பூர் பெருமாள் கோயில் கும்பாபிஷேக காட்சிகளின் வீடியோ லின்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
http://www.youtube.com/watch?v=iD_4
4If5aNc

1 கருத்து:

  1. really superb.Yes,we have forgotten our earlier days.When we were young we don't know about this siva temple.I remember the sivachary who used to be always with smile.That Illupai maram and the ground.We cannot forget kaliaperumal, karumbucharu,town high school teacher seshu,komli mami etc.,Thanks for reminding Innambur

    பதிலளிநீக்கு