புதன், ஆகஸ்ட் 3

குழல் இனிது யாழ் இனிது


குழல் இனிது யாழ் இனிது.


"டே, சேர்லே ஏறாதேடா "
"தாத்தாவுக்கு ஹாய் சொல்லு"
"ஹாய்"
தாத்தாவுக்கு ஒரு பாட்டுப் பாடிக் காட்டு"
"........."
"ஒரே ஒரு தடவைடா "
"........."
":டே, என்னடா சாப்பிடுறே?" இது தாத்தா.
"ஹே"
"ஏய், என்னடி சொல்றான் அவன்" இது பாட்டி.
"காய் சாப்பிடுறானாம்", இது பெண்.
"என்னடி, பால் சாப்பிட்டாச்சா?"
"இல்லம்மா, பால் அப்பறம் தான் சாப்பிடுவான் அம்மா"
"நான் சமையல் பண்ணிட்டு வந்திடுறேன், கொஞ்ச நாழி பேரனைப் பார்த்திண்டுக்கியா அம்மா?"
"போ, நான் பார்த்துக்கிறேன்"
பேரனை வைத்த கண் வாங்காமல் தாத்தாவும் பாட்டியும் பார்த்துக் கொண்டிருந்தோம்
அவன் செய்யும் விஷமங்களை எத்தனை கொடுத்தாலும், எத்தனை நேரமானாலும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
கையில் கொடுத்த காயை (வேக வைத்த காய்கறி) ஸ்பூன் மூலம் லாகவமாக எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும் விதத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
எங்களுக்கு கொடு என்றால் உடனே ஸ்புனை எங்களுக்கு நேரே நீட்டுவான், நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்..
நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே சேரில் ஏறி உட்கார்ந்து கீழே விழுந்த விடுவான் போல் இருந்தது . உடனே, "ஏய், லக்ஷ்மி அவனைப் பாரடி, சேரில் இருந்து விழுந்து விடப் போகிறான்"
என்று நாங்கள் கத்தினோம் .
""அதெல்லாம் விழ மாட்டான் அம்மா", என்று என் பெண் சமையல் அறையில் இருந்து கவலைப்படாமல் பதில் சொன்னாள். என்ன இருந்தாலும் பதினெட்டு மாத குழந்தை. நமக்கு கவலையாக இருக்காதா?
"டே, பாட்டிக்கு ஒரு டான்ஸ் ஆடிக் காண்பி" என் பெண் சமையல் அறையில் இருந்து பேரனை டான்ஸ் ஆடச் சொன்னாள்.
"டி, டி, டி " என்று பேரன் கத்தினான்,
"இருடா வரேன்" என்று பெண் சொன்னாள்
டான்ஸ் பாடல் கொண்ட ஒரு வீடியோவைத்தான் ஆன பண்ணச் சொன்னான் போலிருக்கு.
வீடியோ பாடலை பெண் ஆன செய்தாள்.
பாட்டுக்கு ஏற்ற மாதிரி கையை இடுப்பில் வைத்துக் கொண்டு முன்னும் பின்னும் நகர்ந்து, உட்கார்ந்து எழுந்து ஆடின டான்ஸை இன்றைக்கு பூரா பார்த்துக் கொண்டிருக்கலாம். நேரம் போனதே தெரியவில்லை.
வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்டது. போய்த் திறந்தால் அடுத்தாத்து மாமி.
"வாங்கோ மாமி, என்ன விசேஷம்"
"என்ன உங்க பெண் பேரன் எல்லாம் எப்பஅமெரிக்காவில் இருந்து வந்தாங்க?"
'அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே? உங்களுக்குத் தெரியாம எப்படி வருவா மாமி?"
"பேரன், உங்க பெண் குரல் எல்லாம் கேட்டுதே?
பேரனை டான்ஸ் ஆடச் சொல்லக் கேட்டேனே?"
"உள்ள வாங்கோ, வந்து நீங்களும் அவன் டான்ஸ் ஆடறதைப் பாருங்கோ"
"ஏய்,ஸ்ரிஜித் ,பாக்கத்தாத்து பாட்டிக்கு ஒரு டான்ஸ் ஆடிக் காண்பிடா" என்று எங்கள்
மடிக்கணினிப் பார்த்துச் சொன்னேன்.
அதில் www.skype.com மூலம் என் பேரனுடன் பேசிக் கொண்டிருந்ததை மாமி பார்த்துப் பரவசமானார்கள்.
"இப்படி ஒரு வசதி இருக்கா தேவலையே. பேரன் பேத்தி, பெண் இவர்கள்
தூர தேசத்தில் இருந்தாலும் நேரில் பேசுவது போலவே இருக்கே, பரவாயில்லை"
"ஆமாம் மாமி, எங்களைப் போல ஒரு பெண், பையன் பெற்றவர்கள் தங்கள் குழந்தைகள் நல்லா இருக்கணும் என்று நினைத்து தூர தேசத்திற்கு அனுப்பி விட்டு அவர்கள் பக்கத்தில் இல்லை என்ற குறை தெரியாமல் தினம் ஒரு மணியாவது அவர்களுடன் பேசி தங்கள் கவலையை மறக்க இந்த சாதனம் தன் மாமி துணை. அவர்களுடன் பேசா விட்டால் எதையோ இழந்த மாதிரி இருக்கும். அதனால் தான் பக்கத்தில் இருப்பது போல் பேசிக் கொண்டு இருக்கோம் மாமி"
சொன்னதை கேட்டு மாமி நெகிழ்ந்து போனார்கள்
"சரி, சரி, நான் குறுக்கே நிற்கல,கிளம்பறேன் நீங்க பேசுங்க "
நாங்களும் பேரனின் விஷமங்களைக் காண உள்ளே போனோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக